
அன்புள்ள ஜெ,
நலம். நலமே விழைகிறேன். வேறு யாரவது அன்புடன் என்று சொன்னால் அல்லது வேறு யாரிடமோ அன்புள்ள என்று சொன்னால் மேம்போக்காகத்தான் இருக்கும். தங்களிடம் அவ்வாறு இல்லை. உண்மையில் உலக உயிர்களின் மீதே மாபெரும் அன்பு கொண்டவர் தாங்கள். தங்களை போன்ற ஒருவரின் வார்த்தைகளை வாழ்க்கையின் அங்கமாக்கிக்கொண்டதை பெரும் பேறு என்றே நினைக்கிறேன்.
கடந்த ஆகஸ்ட் 2026-ல் நடந்த பெண்கள் இலக்கிய வகுப்பில் கலந்து கொண்டு உங்களுடன் அருமையான மகிழ்வான மூன்று நாட்களை கழிக்க நேர்ந்தது. மூன்று நாட்களுமே இனிமை மட்டும் தான் மகிழ்வு மட்டும் தான்.
இந்த வகுப்பை முன்னெடுத்து ஒருங்கிணைத்த தோழிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நான் எழுதும் ஆசை கொண்டவள் அல்ல. மேடையில் பேசும் ஆசை கொண்டவள். பேசுவதற்கு தேவையான எழுத்தை மட்டும் எழுதுவேன். அன்றாட அனுபவங்களை எழுதி தொகுத்துக்கொள்வேன். அவ்வளவு தான்.
இந்த வகுப்பு ஆரம்பம் முதலே, எழுத்தெனும் படைப்பாற்றலை மட்டும் முன்வைத்ததாக நான் எண்ணவில்லை. ஒரு பெண்ணின் படைப்பாற்றலுக்கும், செம்மையான வாழ்விற்கும், மகிழ்விற்கும், அவளின் தனிப்பட்ட தளைகள் எவ்வளவு பங்கு வகிக்கின்றன என்பதை விரிவாகவே விளக்கியிருந்தீர்கள்.
எத்தனை இலக்கியங்கள் வாசிக்கிறோம், அதில் எத்தனை எத்தனை வாக்கியங்களை கடக்கிறோம். உதாரணமாக “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் புறநானுற்று வரி. தங்களில் வகுப்பில் முதலில் நீங்கள் என்னை உணர வைத்தது அந்த வரியைத்தான். நான் என் செயல்களை, வெற்றிகளை நேர்மறையாக நிரூபிக்க முயல்பவள். அது சரி என்றே நம்பியும் வந்தவள். நான் ஆடும் வாழ்க்கை நாடகத்தில் என்றுமே முன்னிருக்கையில் பெரிய நாற்காலியில் கிரீடத்துடன் யாரையோ அமர்த்திவிடுவேன். அவர்கள் இல்லையென்றால், பார்க்கவில்லை என்றால், பார்ப்பதற்கான கண்ணே அவர்களுக்கு இல்லை என்றால், எப்படி வாழ்வது,மகிழ்வது என்றே எனக்கு தெரியாது.
இது ஒரு சிறை என்றோ, அந்த சிறைக்குள் நான் இருக்கிறேன் என்றோ புரிந்தது குரு தில்லை செந்தில் வகுப்பிற்கு பிறகுதான். வாழ்க்கை வாழ்வதற்கே , மகிழ்வதற்கே களமாடுவதற்கல்ல என்ற விதை விழுந்தது ஒரு வருடம் முன்னர் தான். இருந்தும் அதிலிருந்து முழு விடுதலை அடையவில்லை. இன்னுமம் கூட, என் ஸ்வதர்மம் என்று நினைத்து, உணர்ந்து செய்யும் செயல்களிலும் கூட, என் முன்னர் காலி நாற்காலியாவது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த விடுதலை நோக்கிய பயணத்தில், இந்த வகுப்பின் மூலம் தீவிரமாக செல்ல முடியும் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து செயலை செய்து செய்தே அந்த விடுதலையை நான் அடையக்கூடும். நீங்கள் எழுதிய அநாதை கதாபத்திரத்தின் மூலம் நீங்கள் அடைந்த அனுபவம் போல. எழுதி மொத்தம் கிழித்தாலும், எழுதியதே மகிழ்வளிக்கும் என்ற நிறைவு போல.
தத்துவ வகுப்பிலும் சரி, இந்த வகுப்பிலும் சரி நீங்கள் சொல்லும் நீதி மன்ற வழக்குகள், தீர்ப்புகள் சுவாரஸ்யமானவை, சிந்திக்க வைப்பவை, சிரிக்க வைப்பவை, சில நேரம் திகிலளிப்பவையாக உள்ளன 🙂
Victim Play என்பதை என் வாழ்வில் பெரிதாக நான் பழகியதில்லை எனினும், பிற பெண்களது “Victim Play” என்னை வெகுவாக பாதித்திருக்கிறது, வாழ்வின் பெரும் துன்பத்திற்கும், தீராத அருவருப்புக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாக்கி இருக்கின்றன. ஆனால், அந்த பெண்களின் குறித்த பார்வையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அப்படி ஒரு மனநிலை, எந்த அளவிற்கு அவர்களின் ஆற்றலை, மகிழ்வை உறிஞ்ச கூடும் என்று எண்ணும்போது என் ஆத்திரம் அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. விழிப்புணர்வு இன்றி இவ்வாறு தங்கள் ஆற்றலையும், நேரத்தையும் செலவழித்து மகிழ்வின்றி வாழ எத்தனை அறியாமை இருக்க வேண்டும்.பாவம் “ஒத்த பொம்பள என்ன பண்ணுவாங்க” என்றே தோன்றுகிறது 😉
இந்த வகுப்பின் போது நான் மிகவும் ரசித்த மற்றொரு அனுபவம், லோகமாதேவி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அறிவார்ந்த நட்பு என்றே கூறுவேன். அவர்களுடன் கூடிய உரையாடலின் அனுபவத்தை வார்த்தையில் கூறிவிடமுடியுமா என்று தெரியவில்லை. என் வாழ்வில் பெண்களுடன் அறிவார்ந்த, அன்பான நட்பு முன்னரும் வாய்த்திருக்கிறது. எனினும், சில விஷயங்களில், என் அன்னை உட்பட எல்லாரிடமும் என் நிலைப்பாட்டை புரிய வைக்க சிரமப்பட வேண்டி இருக்கும். நான் சொல்வது எளிதில் அவர்களுக்கும் புரியாது, ஏற்று கொள்ள மாட்டார்கள். அதனால், அவர்களை திருப்தி அடைய செய்ய அதிகமான விளக்கங்களை கொடுக்க வேண்டி இருக்கும். முதல் முறையாக மிக தீவிரமான எனது அனுபவங்களையும், அது குறித்த என் பார்வைகளையும் ஒரு வரியில் சொல்லி கடந்துவிட்டிருந்தேன். ஒரு சொல்லில், ஒரு வரியில் அந்தப் புரிதல் நிகழ்ந்தது இருவருக்கும் இடையே. அந்த உரையாடலின் வார்த்தைகள் மறந்தாலும், அந்த அனுபவத்தை வெகு நாட்கள் என் நெஞ்சோடு அணைத்து பொக்கிஷமாகவே வைத்திருப்பேன்.
பௌர்ணமியில் நிலவிரவு, நிலவு கானங்கள், கம்ப ராமாயணம், வாள்மீகி இராமாயணம், காளிதாசனின் சாகுந்தலம். நிலவின் குளிரும், இணைதலின் கதகதப்பும். மூன்று நாட்கள் இத்தனை இலகுவாக ஆகக்கூடும் என்று நினைத்தது இல்லை. எப்போதும் வெள்ளிமலையில் இருந்து திரும்பி வருகையில் திங்கட் கிழமையின் சோகங்கள் தொற்றிக் கொள்ளும். முதன் முறையாக, திங்கள் கிழமையை எதிர் நோக்கினேன், அலுவலக பணியை எதிர் நோக்கினேன். கவிதை, நாவல், கதை வாசிக்க வேண்டும். கட்டுரை வாசிக்க, எழுத வேண்டும். ஊருக்கு வந்து செய்யவேண்டிய அத்தனையும் எண்ணி பார்க்கையில், செய்தே ஆக வேண்டும் என்ற இலட்சியங்கள், தீவிரங்கள் இல்லை. செய்வதை எண்ணி இனிமையாகவே இருந்தது. இவ்வளவு தான் வாழ்க்கை என்று உணர்ந்து கொண்டேன்.
வெள்ளி மாலை தங்களின் நடை பயணம் முடிந்தவுடன், நான் தங்களிடம் மேடை பேச்சு குறித்து பேச முடியுமா என்று கேட்டேன். பேசலாம் என்று சொல்லிவிட்டீர்கள். சனிக்கிழமை முழுவதும், எழுதுவதை குறித்தே நகர்ந்தது, சில நண்பர்கள் தங்களிடம் மறுமுறை சொல்லுமாறு, நினைவு படுத்துமாறு சொன்னார்கள். எனக்கு இரண்டாவது முறை கேட்க வேண்டாம் என்றே தோன்றியது. ஞாயிறு பிற்பகல் நான் கேட்டதை நினைவு கூர்ந்து, அரை மணி நேரம் சிற்றுரை குறித்து குறிப்புகளை தந்தீர்கள். உங்கள் நினைவில் நான் கோரியது இருந்தது, மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு அளித்தது. நீங்கள் மறவாதது போல, நானும் கிருஷ்ணன் மேனன் – ஐ யும், தங்கள் குறிப்புகளையும் மறப்பதாக இல்லை 😉
ஆரம்பத்தில் இந்த குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்றும், நன்றாக தேர்ந்துவிட்டால் , பேச்சு ஒரு ஒழுக்காக, இயல்பாகக் கூடும் என்றும் கூறினீர்கள். நான் என் எதிரி என வைத்துக் கொள்ளப் போவது அவ்வாறான தடையற்ற ஒழுக்கையே. மனிதர்களை அல்ல.
இந்த வகுப்பில் அனைவருமே மலர் பறித்து, தொடுத்து, தலையில் சூடிக்கொண்டோம். அதற்கு தங்களுக்கும், மலர் கொடுத்த மண்ணிற்கும் என் கோடான கோடி நன்றிகள்.
நன்றி,
சித்ரா சங்கர்,
புதுவை.











