கல்வியும் பயிற்சியும்.

அன்புள்ள ஜெயமோகன்,

அண்மையில் டாக்டர் பற்றிய குறிப்பொன்றில், ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஒரு தொழிலுக்காக மட்டும் பெறப்படும் பயிற்சி என்பது கல்வி அல்ல. கல்வி என்பது, ஒருவன் தன்னுடைய அறிவுத் தேடலைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொள்வதற்கான பயிற்சி. ஆகவே, வாசிப்புப் பழக்கம் இல்லாத ஒருவர் கல்வியற்றவர்தான்.

அவர் இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்பதில்லை. மருத்துவமோ, பொறியியலோ—எந்தத் துறையாக இருந்தாலும், தனக்கான தொடர்ந்த தேடலைக் கொண்டிருப்பவரும், தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவருமே கல்வியுடையவர்.

வரும்படி ஒரு குறிப்பிட்ட பயிற்சியை அடைந்த பிறகு, அதைத் திரும்பத் திரும்பச் செய்து, அதன் விளைவாக நல்ல லாபத்தைச் சம்பாதித்து, உயர் பதவிகளிலோ பணக்குவியலிலோ இருப்பவரை மட்டும் படித்தவர் என்று கொள்ள முடியாது. ஆனால், நாம் அப்படித்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

கல்வி என்பதைப் பற்றிய அந்தப் பழைய மனநிலையை முற்றாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்த நூற்றாண்டில் உருவாகியிருக்கிறது. அதை எத்தனை பேர் உணர்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

ரா. இளங்கோவன்

முந்தைய கட்டுரைஉளசோர்வும் தன்னலமும்