அன்புள்ள ஜெ,
ஒரு உலகளாவிய இயக்கம் என்ற நிலையில், தன்னுள் பல்வேறு சிந்தனைகளையும், வேறுபட்ட பண்பாடுகளையும், முரண்பட்ட பார்வைகளையும் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை அதற்கு இருக்க வேண்டும் அல்லவா?
அப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்குள் அரசியல் அல்லது அதைப் போன்ற பிரிவினைப் பார்வைகள் இடம்பெற முடியுமா? அல்லது உலகளாவிய தன்மை என்பது இத்தகைய குறிப்பிட்ட அடையாளங்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் கடந்து செல்ல வேண்டிய ஒன்றா?
உதாரணமாக, வர்க்கம், தமிழ் போன்ற குறிப்பிட்ட அடையாளங்களை மையமாகக் கொண்ட அமைப்புகள் இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட பார்வையை முன்னெடுக்கின்றன. ஓர் உலகளாவிய இயக்கம் மாறாக தன்னுடைய பொதுத்தன்மையை முன்வைக்கவேண்டும் அல்லவா? ஆனால் லிவிங் தமிழ் ஒரு குறிப்பிட்ட சிந்தனையை முன்வைக்கிறது அல்லவா?
ஒரு குறிப்பிட்ட சிந்தனையை முன்னெடுப்பதற்கும், எல்லா சிந்தனைகளையும் உரையாடலுக்குள் கொண்டுவருவதற்கும் இடையிலான எல்லை எங்கே இருக்கிறது?
இதுபற்றி உங்கள் பார்வை என்ன?
கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
லிவிங் தமிழ் இயக்கம் என்பது பொதாம்பொதுவான, அனைவருக்கும் உரிய ஜனநாயக -மக்கள் இயக்கம் அல்ல. அது தமிழ் நவீன இலக்கியத்தையும், நவீன இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டையும் முன்வைக்கும் நோக்கம் கொண்டது. அந்தக் களத்தின் சிறந்த சாதனைகளையும், சாதனையாளர்களையும் முன்னிறுத்துவதே அதன் நோக்கம்.
ஆகவே, இதற்கு திட்டவட்டமான அளவுகோல்கள் இருந்தாக வேண்டும். அளவுகோல்களே இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிக்கொண்டு ஓர் அறிவியக்கம் எவ்வாறு செயல்பட முடியும்? அப்படியிருந்தால் அதில் அறிவு இருக்காது; இயக்கம் மட்டுமே இருக்கும்.
ஓர் அறிவியக்கம் தனக்கான அளவுகோல்களையும் தெரிவுகளையும் கொண்டிருக்கும். அவற்றின் அடிப்படையிலேயே அது செயல்படும். நாங்கள் க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரை முன்னிறுத்துவோம்; மு. வரதராசனாரையோ, கல்கியையோ, சுஜாதாவையோ அல்ல.
எங்களுடைய அளவுகோல்களும் தெரிவுகளும் எங்கள் கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றின் வழியாகத் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. எங்கள் செயல்பாடுகளின் வழியாக அவை நடைமுறையிலும் நிறைவேற்றப்படுகின்றன.
ஜெயமோகன்











