மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நித்தியவனத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுக வகுப்பை நடத்த எனக்கு வாய்ப்பளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மூன்று நாட்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தன.
சினிமா, தகவல் தொழில்நுட்பம், சட்டம், சமூக அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலிருந்து வந்தவர்கள், கற்றுக்கொள்ளும் முழு ஆர்வத்துடன் பங்கேற்றனர். வியாழன் மாலையே வந்து சேர்ந்து, நன்கு ஓய்வெடுத்து, காலையில் சாரதா அம்மனையும் புத்தரையும் வணங்கி வகுப்பைத் தொடங்கினோம். AI-யின் வரலாற்றில் தொடங்கி, மூன்றாம் நாள் பொறுப்பான AI பற்றிய பகுதியுடன் வகுப்பை நிறைவு செய்தோம்.
நித்தியவனத்திற்கென ஒரு கற்பிக்கும் கட்டமைப்பு உண்டு என்பதை அறிவேன். அதையே பின்பற்றினோம். இங்கே கற்றலுக்கே முன்னுரிமை. வருபவர்கள் வெறுமனே வந்து செல்பவர்கள் அல்ல; உண்மையான தேடலுடன், தங்கள் நேரத்தை நமக்காகக் கொடுத்து வருபவர்கள். அந்த நேரத்தில் ஒரு நொடியும் வீணாகக்கூடாது; ஒவ்வொருவரும் ஏதேனும் கற்றுக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டேன். இங்கே மீண்டும் மீண்டும் வரும் வாசகர்களும் மாணவர்களும் உள்ளனர் என்ற பொறுப்பையும் உணர்ந்து கவனத்துடன் வகுப்புகளை நடத்தினேன். கணித, புள்ளியியல் சூத்திரங்களால் திணறடிக்காமல், எளிய தமிழில், அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் வகையிலும், மேலும் படிக்கத் தூண்டும் விதத்திலும் வகுப்புகளை அமைத்தேன்.
கடந்த 21 ஆண்டுகளில் நான் தமிழில் முழுமையாக நடத்திய முதல் வகுப்பு இது. என் தாய்மொழியில், நான் கஷ்டப்பட்டுக் கற்றவற்றை எளிமையாக எடுத்துச் சொல்வதில் கிடைத்த திருப்தி தனியானது. என் முதல் அல்காரிதத்தைப் புரிந்துகொள்ள எனக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் அப்படிச் செயல்படுகிறது, ஒவ்வொரு சமன்பாட்டுக்கும் என்ன பொருள், அதை நானே செய்து பார்த்து எப்படிச் சரிபார்ப்பது என்று பல நாட்கள் தேடிய என் முனைவர் பட்டக் காலம் இன்றும் நினைவில் உள்ளது. இனி வருபவர்கள் அப்படிக் கஷ்டப்படக்கூடாது என்பதே என் நோக்கம். அதைச் செய்வதற்கு இங்கே எனக்கு இடமளித்தீர்கள்.
மூன்று நாட்கள் தொடர்ந்து பேசுவது எனக்குப் புதிய அனுபவம். சில நேரங்களில் தொண்டை ஒத்துழைக்கவில்லை; சமாளித்துக்கொண்டேன். அடுத்த முறை செயல்விளக்கங்கள், காணொளிகள், விளையாட்டுகள் ஆகியவற்றைக் கலந்து, இன்னும் செறிவாக வகுப்புகளை நடத்த முடியும் என்று நம்புகிறேன்.
இந்த முதல் குழுவினரின் வழியாக வகுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன் பயனை அறிந்து, இனி வரும் வகுப்புகளில் இன்னும் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த வாய்ப்பை நல்கிய உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி. அடுத்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
பிரகாஷ் செல்வக்குமார்












