அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பயணங்கள் குறித்த உங்களுடைய காணொளிகளையும் இப்போது பார்த்து வருகிறேன்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய ஒரு பணியில் இருந்தவன் நான். ஆனால், உண்மையில் நான் பயணம் செய்யவே இல்லை என்று இப்போது தோன்றுகிறது. ஒரு ஊருக்குச் சென்றால், அங்கே எனக்கான வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் வரைதான் எனக்குப் பொறுமை இருக்கும். அந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே இருந்ததில்லை.
நூறு முறைக்கு மேல் நாமக்கல்லுக்குச் சென்றிருப்பேன். ஆனால், ஒருமுறைகூட நாமக்கல் ஆலயத்திற்குச் சென்றதில்லை. அதைப் பற்றி அறிந்துகொள்ளவும் முயன்றதில்லை. நீங்கள் குறிப்பிடும் பெரும்பாலான ஆந்திரப் பயணங்களில், அந்தந்த ஊர்களுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால், அங்குள்ள ஓர் ஆலயத்தைக்கூட பார்த்ததில்லை.
இப்போது இந்த வயதில் திரும்பிப் பார்க்கும்போது, ஆலயங்களைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியவில்லை என்பது புரிகிறது. என்னுடைய வாழ்க்கையை ஒரு பெண்டுலத்தைப் போல, வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதும், வேலையிலிருந்து வீடு திரும்புவதுமாகவே கழித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது.
இந்த வயதுக்கு மேல், ஆலயங்களைப் பற்றி அறிந்துகொண்டு, நீங்கள் மேற்கொள்வதைப் போன்ற பயணங்களைச் செய்ய முடியுமா என்ற ஏக்கமும் எனக்கு இருக்கிறது. என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
பெரும்பாலும் நாம் ஏதோ ஒன்றை முன்னால் வைத்துக்கொண்டு, அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தில் ஒவ்வொரு நாளையும் இழந்துவிடுகிறோம் என்ற எண்ணத்தை உங்களுடைய காணொளிகள் மிகவும் வலுவாக உருவாக்குகின்றன.
இந்த உணர்வு அடுத்த தலைமுறையினரிடமாவது சென்றுசேர்ந்தால், அவர்களாவது தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். வாழ்க்கையை உண்மையாக வாழவும், அதன் அனுபவங்களை முழுமையாகப் பெறவும் முடியும்.
அ.மாணிக்கராஜ்












