மரபில் தோய்தல்

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

வணக்கம். பொள்ளாச்சியில் இருந்து மரகத மீனாட்சி ராஜா எழுதுகிறேன்.

நாங்கள் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற திருமுறை வகுப்பில் கலந்து கொண்டோம். இந்த வகுப்பிற்கு வருவதற்கு முன்பு, பன்னிரு திருமுறைகள் என்ற பெயரைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், அது குறித்த ஒரு வருத்தம் எங்களுக்கு இருந்தது. எங்கள் மகள் இதுகுறித்து எடுத்துச் சொல்லி, வகுப்பிற்குச் செல்லுமாறு கூறியவுடன் மகிழ்ச்சியுடன் வெள்ளிமலைக்குக் கிளம்பிவிட்டோம். வியாழக்கிழமை மாலையே வந்து சேர்ந்தோம். மணி அவர்கள் எங்களுக்கு அருகிலேயே அறை ஒதுக்கிக் கொடுத்தார்.

மறுநாள் வகுப்பு தொடங்கியது. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் திருமுறைகளைக் கற்றுக்கொடுத்தார். உண்மையில், அந்த இரண்டரை நாட்களும் எனது கவனம் எங்கும் சிதறவில்லை. திரைப்படம் பார்க்கும்போதுகூட சலிப்பு ஏற்பட்டால் வேறு ஏதாவது சிந்திக்கத் தொடங்கிவிடுவேன். ஆனால், இந்த இரண்டரை நாட்களும் நான் திருமுறைகளுக்குள்ளேயே மூழ்கிவிட்டேன். வேறு எதைப் பற்றிய எண்ணமும் எனக்கு எழவில்லை.

எல்லோருடைய பெயர்களையும் சைகையுடன் சொல்லச் சொன்னார். நினைவில் வைத்துக்கொள்வதற்கு எளிதாக இருக்கும்படி பாடல்களைச் சொல்லி, அவற்றை எங்களையும் சொல்ல வைத்தார். அதனால், எங்களுக்குத் திருமுறைகளை ஓதிய மகிழ்ச்சியும் புண்ணியமும் கிடைத்தன. அவற்றைப் புரிந்துகொள்ளவும் அது உதவியது. பக்தி ரசத்தை எவ்வளவு அனுபவித்தேனோ, அதே அளவுக்குத் தமிழ் அமுதத்தையும் ரசித்து அருந்தினேன்.

அவர் காளமேகப் புலவரின் யானையை எலி இழுத்துச் சென்ற பாடலையும், இரட்டைப் புலவர்களின் பிள்ளையார் திருடர் கோத்திரத்தையும் பற்றிக் கூறியபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. வகுப்பில் இரண்டரை நாட்களும் பலமுறை இவ்வாறு மகிழ்ச்சியாகச் சிரித்தோம். சிறுத்தொண்டர் கதையைக் கேட்கும்போது மட்டும் கண்ணீர் வந்தது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரைப் பற்றிக் கூறி, அவர்களுடைய பாடல்களையும் சொல்லி விளக்கினார்.

இரண்டாவது நாள் காலை இரண்டு மணி நேரம் மௌனமாக இருந்துவிட்டு வகுப்புக்கு வரச் சொன்னார். நான் காலையில் எழுந்த உடனேயே மௌன விரதத்தைத் தொடங்கிவிட்டேன். எல்லோரும் மௌன விரதத்தைக் கடைப்பிடித்ததால், அந்தப் பகுதியின் ஏகாந்தத்தையும் மௌனத்தின் இனிமையையும் உணர முடிந்தது.

வீட்டில் சிவன் கோவில் இருந்தாலும், முத்தையா ஐயா அவர்களின் உரையைக் கேட்ட பிறகு சிவனின் மீது பக்தியும் நம்பிக்கையும் அசைக்க முடியாத அளவுக்கு உருவாகிவிட்டது.

சரஸ்வதி அம்மா அவர்களின் சாப்பாட்டை மறக்கவே முடியாது. நான் சேமியா உப்புமா செய்தால் ஒன்று வேகாமல் தொண்டையில் குத்தும்; அல்லது களியாகப் பரிணமிக்கும். அதனால் சேமியா வாங்குவதையே நிறுத்திவிட்டேன். ஆனால், அங்கே மிகவும் ருசியான சேமியா உப்புமா சாப்பிட்டேன். ரசமும் மோரும் கூட அவ்வளவு ருசியாக இருந்தன.

மைதிலி, நித்யா, லக்ஷ்மி என்ற தோழிகள் கிடைத்தனர். அதிலும் மைதிலியும் நித்யாவும் இளம் வயதினர். அவர்களைக்கூட திருமுறைகளைப் படிக்க வைத்த உங்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

திருமுறைகளுக்கு ஓர் அறிமுகம் கிடைத்துள்ளது. அறிமுகம் கிடைத்த பிறகு, அந்தத் தொடர்பை வலுப்படுத்திக்கொள்வது எளிதுதானே! தட்பவெப்ப நிலையும் அருமையாக இருந்தது.

திரும்பி வரும்போது, சஷ்டி அன்று சென்னிமலை முருகனையும் தரிசித்துவந்தது கூடுதல் மகிழ்ச்சியாக அமைந்தது.

அன்புடன்,

மரகத மீனாட்சி ராஜா

முந்தைய கட்டுரைஆலயக்கனவு