அன்புள்ள ஜெ,
குடும்ப அமைப்பு தனிமனிதன் மீது சுமத்தும் தார்மீக அழுத்தத்தைப் பற்றி நான் நிறைய யோசித்திருக்கிறேன்.
மிக இளமையிலேயே, ‘நீ மூத்தவன், நீதான் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் நான். அதன்பிறகு என் வாழ்நாள் முழுவதும் சொந்தக் குடும்பத்தைச் சுமந்திருக்கிறேன். இப்போது குழந்தைகளின் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
திடீரென்று இப்போது திரும்பிப் பார்க்கையில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் குடும்பம் என்ற அமைப்பின் ஒரு பகுதியாக, அந்தக் குடும்பத்தைத் தூக்கிச் சுமப்பதற்காக மட்டுமே செலவழித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது.
ஒரு அமைப்பின் உறுப்பினராக இருந்து, அந்த அமைப்புக்காக மட்டுமே உயிர்வாழ்வது என்பது ஒருவர் தன்னுடைய சொந்த அடையாளத்தைத் துறப்பதாகும். சொந்த அடையாளத்தைத் துறந்தவருக்குச் சொந்தமான ரசனை என்று எதுவும் இல்லை. தனக்கான ஆன்மிக விடுதலையும் இல்லை.
இதுவரை நான் கடவுளைக் கும்பிட்டதெல்லாம் என் குடும்பத்தின் நலனுக்காகவும், என்னுடைய நலனுக்காகவும்தான். ஒருபோதும் ஞானத்தை நோக்கியோ, விடுதலையை நோக்கியோ சிந்தித்ததில்லை.
இப்போது யோசிக்கும்போது, ‘நான் தனியாக வாழக்கூடாது. நான் சமூகத்தின் ஒரு பகுதி, குடும்பத்தின் ஒரு பகுதி’ என்று வலியுறுத்தும் மரபு எவ்வளவு ஆழமாக நம்முள் வேரூன்றியிருக்கிறது என்பது புரிகிறது.
ஒருவர் ராணுவத்தின் உறுப்பினராக இருப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவருக்கென்று தனியான அடையாளம் இல்லை. ராணுவம் மட்டுமே அவருடைய அடையாளம். ராணுவத்திலேயே வாழ்ந்து மடிய வேண்டும். அவ்வளவுதான்.
பழைய போர்க்காலச் சூழல்களில் உருவாக்கப்பட்ட இந்த மனித அடையாளத்தை, இன்று தனிமனிதன் என்ற முக்கியமான கருத்தாக்கம் உருவான பிறகும்கூட நாம் அனைவரும் சுமந்துகொண்டிருக்கிறோம்.
குடும்பத்திலிருந்து வெளியேறி நமக்கான தேடலையும் ரசனையையும் கொண்டிருக்க நாம் முயன்றாலும்கூட, நம்முடைய குடும்பத்தினர் அதை ஒருவகையில் அனுமதிப்பதில்லை. குறிப்பாக, குடும்பத்துக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட பெண்கள், தங்கள் கணவர்களும் குடும்பத்துக்காக மட்டுமே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் அதற்கே பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், நவீன குடும்பங்கள் பிள்ளைகளுக்குத் திருமணமானவுடன் ஒருவகையில் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அதன்பிறகு குடும்பத்துடன் வாழ்வதற்கான எந்த நோக்கமும் இல்லாமல், வயதான கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்து வெறுத்துக்கொண்டும், வசைபாடிக்கொண்டும், யாராவது எப்போதாவது அழைக்க மாட்டார்களா, ஏதாவது ஒரு குடும்பத்திற்குள் தங்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டும் வாழ்கிறார்கள்.
எதார்த்தத்தை மிக அழுத்தமாகச் சொல்லியிருந்த காணொளி அது.
நன்றி.
சிவராம்












