ஆலயக்கனவு

நித்யவனத்தில் ஆலயக்கலை வகுப்பிற்குச் செல்வது நீண்ட நாள் கனவாய் இருந்தது. திட்டம் தீட்டிச் செல்லும் தருவாயில் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாது போனது. மருத்துவமனையில் ஒரு நோயாளியின் அவசர சிகிச்சை என்னை பயணம் மேற்கொள்ள முடியாமல் தடுத்துவிட்டது.

அடுத்த முறை அறிவிப்பு வந்தபோது முன்னமே ஏற்பாடுகள் செய்து என்னை தயார் செய்து கொண்டேன். ஆசான் கூறுவதுபோல் அனைத்து வகையிலும் தயாராகி வருதல் மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு அளித்தது. வானிலை அருமையாக இருந்ததும் நித்யவனச் சாலை சீரமைக்கப்பட்டதும் பயணத்தை இனிமையாக்கின. வெள்ளிக்கிழமை காலை வந்து சேர்ந்தேன்.

ஜெயக்குமார் அவர்கள் வகுப்பைத் தொடங்கும் முன் மிக அருமையான திருமழப்பாடி இறைவன் குறித்த தேவாரப் பாடலை பாடியது மனதின் குவியும் திறனை அதிகப்படுத்தியது.

வகுப்பு அமர்வுகள் ஆசிரியரின் நீண்டகாலப் பயிற்சியும் அறிவும் ஆலயக்கலையின் அவருக்குள்ள ஆளுமையும் தெரியப்படுத்தியது.

ஜெயக்குமாரின் இசை அறிவும் புராண ஞானமும் தமிழிலக்கியப் புலமையும் கலை அறிவும் சிற்ப ஆலயக் கருத்துக்களை ஆழ்ந்து சுவைக்க ஏதுவாக இருந்தன. சிற்பக்கலை ஆலயக்கலை அனைத்திற்குமான சிறந்த அறிமுகமாக அமர்வுகள் அமைந்தன. வரலாற்றில் முன்னே தோன்றி கலை மரபுகள், கோயில்கள், சிற்பங்கள் பின்னர் அவை அடைந்த வளர்ச்சி நிலைகளைக் குறித்து அறிந்தோம். பல்லவ நடராஜர், முதல் கணபதி சிற்பம் ஆகியவை ஆர்வமூட்டுவதாக இருந்தன.

படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று சற்றேறக்குறைய 50 புத்தகங்களை எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். நித்யவனத்தின் சிறப்புகளில் ஒன்று நம்மை ஒத்த கருத்துக்கள் உடையவர்கள் சந்தித்து அளவளாவ நேர்வது. பிரபந்த வகுப்பில் சந்தித்தவர்கள் இன்னும் தொடர்பில் உள்ளார்கள். இந்த வகுப்பில் இளைஞர்கள் அதிகம். நம்மை அதிகம் படிக்கும் ஆழமாக சிந்திக்கும் மனிதர்களை காணவும் பேசவும் வாய்ப்பும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஆசானுக்கு நன்றி.

ஒரு ஆலயம் எவ்வளவு பழமையானது என்பது மிக Objective ஆக அணுகவேண்டும் என்பதை வலியுறுத்தினார் ஆசிரியர். உதாரணத்திற்கு தில்லையில் இன்றுள்ள நடராஜர் சிலை 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் அப்பர் 6 ஆம் / 7 ஆம் நூற்றாண்டிலேயே நடராஜரைப் பாடி விட்டார். அப்படி என்றால் அப்பொழுதும் நடராஜர் உருவச்சிலை இருந்திருக்க வேண்டும். சிலைகள் செப்புத்திருமேனிகள் பழுதடையும் போது அவற்றை உருக்கி புதுப்பித்தல் நம் மரபாதலால் அதை அந்த நோக்கில் தான் அணுகவேண்டும் என்று புரியவைத்தார். 2 ½ நாட்களும் சிறு முன்னுரை தான் என்பது விளங்கியது.

நித்யவனத்தின் ஒவ்வொரு வகுப்பும் ஒரு வாயிற்கதவு தான். துறை சார்ந்த அறிஞர்களால் சாமானியர்களுக்கு ஒரு திரைவிலக்கல் தான் நடைபெறுகிறது. இது கிடைக்கப்பெற்று இதில் ஆழ குதித்து வாழ்நாளின் மிச்ச நேரத்தை கழிப்பது நம்முடைய வேலை.

“இதெல்லாம் எதற்கு கோயிலுக்குப் போனோம் சாமியைக் கும்பிட்டோமா என்று இருக்க வேண்டியதுதானே” எனக் கேட்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஆசிரியர் ஜெயகுமார் சொல்லிய சில கருத்துக்களைத்தான் நானும் சொன்னேன். சிற்பத்தை கோயில் முழுவதிலும் கோபுரம் பூராவும் வைத்த சிற்பி சிற்ப ஸாஸ்திரத்தில் மட்டுமன்றி, ஆகமம், வரலாறு, புராணம், வேதம், நடனக்கலை என அனைத்திலும் வல்லவனாக இருந்திருக்கிறான். அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது அவர் செய்த அரிய அந்த சிற்பத்தை அறிந்து ஒரு 5 நிமிடம் நின்று பார்ப்பது தான். அழகியல் என்பது நம் மரபில் என்றும் மிகப்பெரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அழகை ரசிக்கவும் நம் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள இன்னும் நுட்பமாக அறியவும் அந்த மகா கலைஞானியான சிற்பியை மதிக்கவும் நம் ஆலயக்கலையைக் கற்க வேண்டியே உள்ளது. மனநிறைவுடனும் ஆசிரியர் மீது மிகுந்த மரியாதையுடனும் ஊர் திரும்பினேன்.

நன்றி.

கார்த்திக் செல்வராஜ் 

கோவை 

முந்தைய கட்டுரைநம்பிக்கையின் அழிவில்…