அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
தாங்கள் அழகாகவும் அற்புதமாகவும் ஒருங்கிணைத்து, வெள்ளிமலை நித்ய வனத்தில் வழங்கி வரும் முழுமை அறிவு வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், அதைப் பற்றி நீங்கள் வெளியிட்ட முதல் பதிவைப் படித்த நொடியில் தொற்றிக்கொண்டது. எனினும் இப்போது தான் முதன்முறையாகக், கடந்த வாரம் (October 2-4) என் ஐந்து வயது மகளுடன் பறவை பார்த்தல் வகுப்பில் கலந்து கொள்ள முடிந்தது. நேர்த்தியாக அனைத்தையும் நிர்வகித்த அந்தியூர் மணி அவர்களுக்கும், எங்களுக்குச் சுவையான உணவை அன்பு பொங்க அளித்த அம்மாவுக்கும், நித்யவனத்தைப் பராமரித்து வரும் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும். மூன்று நாட்கள் கழிந்ததே தெரியவில்லை! மனைவி இல்லாமல் முதல்முறையாக மகளுடன் வந்தது முதலில் எனக்குச் சற்று கவலை அளித்தது – இவளை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்.. எங்கே அம்மாவைத் தேடி அழுதுவிடுவாளோ என்றெல்லாம் எண்ணினேன். ஆனால் அங்கு வந்த சில நிமிடங்களிலேயே அச்சூழலும் மக்களும், நிலவிய அன்பும் எனக்கு நிம்மதி அளித்தது.
வகுப்புகள் நடத்தப்பட்ட முறை, மிகுந்த கவனத்துடனும் கூர்நோக்குடனும், அன்பாகவும், குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் வகுப்புகளை நடத்திய விஜய் பாரதி அவர்களுக்கும் ஈஸ்வர் அவர்களுக்கும் நன்றி. கையேடு வழங்கியதும் இதில் நூற்றுக்கணக்கான தமிழகப் பறவைகள் இருக்கின்றனவே, இவற்றில் என்ன, ஒரு நான்கோ ஐந்தோ தென்படும் என்று நினைத்திருந்தேன். நகரங்களில் காகம், புறா, குருவி, கோழி தவிர வேறென்ன பார்க்கிறோம்! ஆனால் நாங்கள் வகுப்புகளின் முடிவில் 25க்கும் மேற்பட்ட பறவைகளை அடையாளம் கண்டு மகிழ்ந்தோம். வழிநடுத்துநரும் அருகில் நிற்போரும் ஒரு பறவையைப் பார்த்த பூரிப்பில் முணுமுணுத்தவுடன் என் பைனாகுலரை அங்குமிங்கும் அசைத்து, குவிப்பானைத் திருகி அந்த பறவைகளை ஒவ்வொன்றாய்ப் பார்த்த தருணங்கள் மறக்க முடியாத நினைவுகளாகப் பதிந்துவிட்டன. The pleasure is in the pursuit. That moment when you find yourself amid these winged angels.. இத்தனைக் கொடுமைகளை இப்புவிக்கு ‘மானுடம்‘ இழைத்த பிறகும் இந்த உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றனவே!
வகுப்பின் இறுதியில் விஜய் பாரதி, “ஒரு விஷயத்தை ஆழமாகக் கற்க பல பத்தாண்டுகள் தேவைப்படும், அந்த ஒன்றைக் கற்கும் பாதையில் இந்தப் பிரபஞ்சத்தையே நாம் கற்க நேரிடும்!” என்றவாறு சொன்னதும், பறவைகள் ஆராய்ச்சிக்குப் பங்களித்த பெரியோர்களைக் (ஆல்ஃபிரெட் ஹென்றி வாலஸ், சலீம் அலி, எம் கிருஷ்ணன், க ரத்தினம், ப ஜெகந்நாதன், தியோடர் பாஸ்கரன், ராமச்சந்திர குஹா, மற்றும் பலர்) குறித்த சிறு அறிமுகம், குழந்தைகளை உற்சாகப்படுத்த சிறு படக் கதைகள் (ரோஹன் சக்ரவர்த்தி போன்றோரின் படைப்புகள்) திரையிலிட்டு ஆர்வமூட்டினர். குறிப்பாக, இணையற்ற பறவை குறிப்பாளர் எம் கிருஷ்ணனின் வாழ்விலிருந்து பல புகைப்படங்களைக் காட்டினார் விஜய் பாரதி. “ஒருவர் நாற்பது ஆண்டுகள் பறவைகளைப் பார்த்து மகிழ்ந்தார், எழுதினார், அவர் முகத்தின் அழியாப் புன்னகையைப் பாருங்கள்! இதுவே வெற்றி, இதைக் காட்டிலும் என்ன..” என்றபோது கண்ணீர் மல்கியது.
வெள்ளிமலை பயணத்தில் பல புதிய நண்பர்கள் கிட்டினர். அனைவரும் ஒரு குடும்பம் போன்றே பழகினர், பிற குழந்தைகளுக்கு ஊட்டினர், பார்த்துக்கொண்டனர், வழி நடத்தினர், கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். எங்கோ படித்தது – ‘இருவர் மனம் ஒன்றுபட, அவ்விருவரைத் தவிர, அவர்களுக்குப் உடனடித் தொடர்பில்லாத ஏதோ ஒன்றன் மீது இருவர் மனமும் அன்பில் குவிகையில் அவர்கள் ஆழமாக ஒன்றுபடுகின்றனர்‘ என்று. அதை, ஒரு குழுவாகப் பறவைகளைப் பார்க்கச் செல்லும்போது அந்தக் குழுவின் ஒரு அங்கமாக நான் உணர்ந்தேன். நித்திய வனத்தைச் சுற்றிய சாலைகளிலும், மடத்திலும் நாங்கள் நடந்த போது மண்ணில் இருந்து புழுவிலிருந்து, புள்ளினம் வரை அனைத்தையும் ஆழப் பார்க்க முடிந்தது, எண்ணம் ஒருமித்தது. (கிரானைட்டை கேக் போல வெட்டி எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பிறகும்!) அமைதியாக உணர்ந்தேன்!
“அடுத்து என்ன சாப்பிடலாம், என்ன பார்க்கலாம், என்ன வாங்கலாம்” எனும் மூன்று கேள்விகளுக்கு அப்பால் எண்ணும்போது இயற்கையின் வாசல்கள் திறக்கின்றன. மேலும் இதைப் போன்ற அனுபவங்கள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசை. 2011ல் WWF, ஹைதராபாத்தில் இருந்து ஸ்ரீசைலம் வனத்துக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார்கள். ஒரு உலகளாவிய வனப் பாதுகாப்பு நிறுவனம் WWFற்கு நிகரான நேர்த்தியும், பாடங்களில் செறிவும், நேரம் கடத்தாமல் பல கோட்பாடுகளையும் சுவை தரும் தரவுகளையும், குறிப்பாக, பறவைகளைக் குறித்து மேலும் படிக்க ஒரு நல்ல பட்டியலையும் அவர்கள் தந்தது பெருமகிழ்ச்சி!
வீடு திரும்பியதும் இவ்வளவு தூரம் தினமும் நடந்ததும், சென்னையிலிருந்துச் சென்று வந்த களைப்பும் தெரியவே இல்லை! ஒரு ஆழ்ந்த அமைதி கிடைத்தது, ஜன்னலைத் திறந்ததும் கண்கள் மர உச்சிகளையே பார்த்துக்கொண்டிருந்தன! வெள்ளிமலையில் மொபைல் இணைப்புச் சரிவரக் கிடைக்காததும் பெரிய நிம்மதி! ஹாஹாஹா! தாங்கள் பங்களித்த 2.0 படத்தின் பல உரையாடல்கள் என் மனதில் ஒலிக்கவும் சிரித்துக்கொண்டேன். வாழ்வின் ஒரு புதிய திறப்பாக இந்த வகுப்புகளை நான் பார்க்கிறேன். அடுத்து வரும் மெஞ்ஞான, யோக, சிற்பக் கலை, இசை, வரைகலை என அனைத்திலும் படிப்படியாகக் கலந்துகொள்ளவேண்டும் என்று பேரார்வம் பிறந்துள்ளது.
உங்களுக்கு எப்போதும் போல இப்போதும் நன்றி!
ராம் குமார்
Zoho Corporation, Chennai










