ஏன் நேர்க்கல்வி?

அன்புள்ள ஜெ,

இன்றைய சூழலில் இணையவழியான வகுப்புகள் தவிர்க்கவே முடியாதவை ஆகிவிட்டன. நீங்கள் தொடர்ச்சியாக அவற்றை மறுத்து வருகிறீர்கள். இன்று ஏராளமான இணையவழி வகுப்புகள் உலகமெங்கும் நடைபெற்று வருகின்றன. நானே சில வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவற்றை ஏன் தவிர்க்கவேண்டும்?

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த்ராஜ்

இணையக்கல்வியை நான் மறுக்கவில்லை. பல வகை கல்விகளுக்கு இணையவழிக் கல்வி பொருந்தும். உங்கள் தொழில் சார்ந்த மேலதிகக் கல்விகள், உச்சரிப்பு போன்ற தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், தகவல்கல்விகள் ஆகியவற்றுக்கு அது போதும்.

கலைகளை இணையவழியாக கற்கமுடியுமா? தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் கற்றபின், கூடுதலாக அவரிடம் ஒவ்வொரு நாளும் கற்க அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், தத்துவம் போன்ற நுட்பமானதும் செறிவானதுமான துறைகளை இணையம் வழியாகக் கற்றால் பிழைகள் நேரும். தத்துவம் கூகிள்மேப் போல செறிவானது. விரிவாக்கினால் உலகளவு விரிவது. இங்கே ஒரு செண்டிமீட்டர் தவறு நிகழ்ந்தால் நிஜத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர் வழி தவறிவிடும். ஆகவே நேரடிக் கல்வியே உகந்தது.

தியானம் போன்ற கல்விகளுக்கு நம் கண் முன் ஓர் ஆசிரியர் இருப்பது அவசியம். அவர் பயிற்றுநர் (Trainer) அல்ல, அவர் ஒரு குரு. அவருடைய ஆளுமை முக்கியமானது. அவர் நம்மை அறிவதும் நாம் அவரை அறிவதும் முக்கியமானது. அதற்கு நேரடியான தொடர்பு தவிர்க்கவே முடியாதது. அப்படி ஓர் ஆழ்ந்த தொடர்பு உருவானபின் இணையத்தில் அவரை சந்திப்பது உதவலாம்.

ஒரு புதிய துறையில் முதல்திறப்பு உருவாகவும் இணையவழிக் கல்வி உதவாது. நேரடிக்கல்வியே அவசியம். ஏனென்றால் நமக்கு அந்த துறைபற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே ஓர் உதாசீனம் இருக்கும். இணையவழிக் கல்வியிலுள்ள ஒட்டாத நிலை அந்த உதாசீனத்தை பெருக்கிவிடும். நாம் மேலோட்டமான சில மனப்பதிவுகளை அடைந்துவிட்டு ‘அதெல்லாம் படிச்சாச்சு’ என நம்பியிருப்போம். போலியான ஒரு தன்னம்பிக்கையை அடைந்துவிடுவோம். நேர் வகுப்பில் உருவாகும் உத்வேகமான மனநிலை நமக்குள் ஆழமான திறப்பை உருவாக்கி நம்மை உள்ளே கொண்டுசெல்லும். அது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு பயணமாக அமையும்

சுருக்கமாகச் சொல்கிறேன். எங்கெல்லாம் ஓர் ஆசிரியர் தவிர்க்கமுடியாதவரோ அங்கெல்லாம் நேரடிக்கல்வியே உகந்தது. எங்கெல்லாம் ஒரு குரு தேவையோ அங்கெல்லாம் நேரடிக்கல்வி, குருவுடன் சேர்ந்து தங்கும் குருகுல முறைப்படியான கல்வி, மட்டுமே உகந்தது.

இதை நான் ஏன் வலியுறுத்துகிறேன்? ஏனென்றால் நான் கற்றவை எல்லாமே நேரடியாக ஆசிரியர்களிடமிருந்துதான். அவர்களின் ஆளுமை (personality) தான் எனக்கு மேலும் கூடுதலாகக் கற்பித்தது. கல்வி என்பது முதன்மையாக ‘உடனிருத்தல்’ வழியாக வருவதுதான். ‘உபநிஷத்’ என்ற சொல்லுக்கே அதுதான் அர்த்தம்

ஜெ

முந்தைய கட்டுரைமதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?
அடுத்த கட்டுரைமருத்துவம், கடிதம்