மருத்துவம், கடிதம்

அன்பு ஆசிரியர் ஜெயமோகன் சார் அவர்களுக்கு வணக்கம்.

நவீன மருத்துவ அறிமுக முகாமில் பங்கேற்க கடைசி நேரத்தில் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.

அவசியம் கற்க வேண்டிய நவீன மருத்துவ அறிமுக கல்வியை உலக தரத்துடன் அதே சமயத்தில் பங்கேற்பாளர்களுக்கு புரியும்விதமாக அளித்ததற்கு டாக்டர் மாரிராஜ் சார் அவர்களுக்கு மிக்க நன்றி.

நவீன மருத்துவ அறிமுக வகுப்பு குறித்து எனக்கு புரிந்தவரை எழுதியிருக்கின்றேன். எனது புரிதல் காரணமாக நவீன மருத்துவ அறிமுக வகுப்பு குறித்து நான் எழுதியுள்ளவற்றில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

நடத்தப்போகும் அடிப்படை மருத்துவக் கல்வியில் புரியாத எதுவாயினும் உடனே நிறுத்தி கேள்வி கேட்டு அது தெளிவாக்கிக் கொண்டு அதன்பின் தொடரலாம்என்று வகுப்பு ஆரம்பித்தவுடனேயே டாக்டர் கொடுத்த கனிவான வழிகாட்டுதல் இறுதி நாள் வரை வகுப்பில் அனைவரையும் உற்சாகத்துடன் பங்கெடுக்க வைத்தது. நடுநடுவே குபீர் சிரிப்பு (மருத்துவம்) வேறு. அதி நுட்பமான மருத்துவ பாட வகுப்பில் டாக்டர் அவர்கள் நகைச்சுவையை சாத்தியப்படுத்தியதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன் அதுவும் மருத்துவ பாடத்தை ஒட்டியே அதை செய்தார். பாடத்திற்கு உண்டான கவனகுவிப்புடனும் செறிவுடனும் சேர்த்து புன்னகையுடன் அவர் பாடம் எடுத்தவிதம் எனக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமைந்தது.

மருத்துவம் எங்கிருந்து துவங்குகிறது என கேள்வி கேட்டு பங்கேற்பாளர்களிடம் இருந்தே பதிலை பெற்று, அவற்றை ஒரு நேர்த்தியாக கோர்த்து அழகாக விளக்கம் அளித்தார் டாக்டர்.

உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ முறைகளையும், இந்திய மருத்துவ முறைகளையும் விளக்கி அதில் நவீன மருத்துவம் எங்கு இருந்து துவங்குகிறது, எதை முன் வைக்கிறது என ஆரம்பத்திலேயே புரிந்து கொள்ள வலுவான அடித்தளம் கொடுத்தார் டாக்டர்.

Organ system பற்றிய கட்டமைப்பை பங்கேற்பாளர்கள் அளித்த பதிலை கொண்டே மிக அழகாக நேர்த்தியாக தொகுத்து அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கமாக புரிய வைத்தார் டாக்டர்.

வாயு, தண்ணீர், தனிமங்களை ஆங்கிலக் குறியீட்டு எழுத்துகளுடன் புரிந்து கொள்ளுமாறு விளக்கி, கற்பித்தல் முறை சரியாக இருக்கும்போது கற்பது எளிதாவதை என்னுள் உணர வைத்தார்.

சுவாச மண்டலம், இருதய மண்டலம்செரிமாண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம்சிறுநீர் மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், மூளை போன்றவை வேலை செய்யும் விதத்தை விளக்க, தேவையான படம் வரைந்துபுரொஜ்டரில் காட்டி என விரிவாக கற்பித்தார் டாக்டர்.

நோய், கிருமிகளின் வகைகள், நோயை கண்டறியும் முறை, மருத்துவம் செய்யும் முறை, மருந்துகள் பரிசோதிக்கப்படும் முறை என பாட திட்டம் விரிவாக இருந்தது. கேள்வி பதில்கள் மூலம் மேலும் அதிகமாக புரிந்துக்கொள்ள முடிந்தது.

உடல் நலம் என்பதை வரையறை செய்வதில் இருக்கும் அலகுகளை அறிந்துகொள்ளும் போது உடல நலத்தை மேம்படுத்த இன்னமும் ஆழமாக கவனம் கொள்ள வேண்டிய அம்சங்களின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.

உடல நலத்தை காக்க எவ்வாறு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் அளித்த வழிகாட்டுதல் எல்லோராலும் பின்பற்றக்கூடியதே என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் இருந்தது. ஒரு பரிசோதனையாக அந்த வகுப்பிற்கு பிறகான உணவு நேரத்திலேயே அதை நான் நடைமுறைப்படுத்திவிட்டேன், அனேகமான அனைவரும் என்றே நினைக்கின்றேன். உடல் நலத்தின் அளவீடாக கைவிரல்களை கோண்டு வயிற்று தசையினை பிடித்து ஒரு அளவை எடுக்க சொன்னார் டாக்டர். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் வகுப்பில் சிரிப்பு குண்டை தூக்கி போட்டது போல் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இப்போது இதை எழுதும்போதும் சிரிப்புத்தான் வருகிறது.

தினசரி உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை கூறிய டாக்டர், வாரத்தில் எத்தனை நாட்கள் எத்தனை மணி நேரம் எப்படி செய்வது என்று கூறி அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற எளிய வழியையும் கூறினார். அடுத்த வகுப்பு துவங்கும்முன் சிலர் அதை செய்துவிட்டே வந்ததாக கூறினர்.

இறுதி நாள் வகுப்பில் எடுத்த சர்க்கரை நோய் மற்றும் அதன் இரு வகைகள், இரத்த அழுத்த நோய் குறித்தான பாடங்கள் மற்றும் இந்த இரண்டிற்கும் இடையே இருக்கு தொடர்பு மிக முக்கியமானவையாக இருந்தது. இவற்றை வராமல் தவிர்க்க மற்றும் இந்நோய்கள் இருந்தால் அதன் தீவிரத்தை குறைக்க டாக்டர் அளித்த வழிகாட்டுதல்கள் மிக முக்கியமானவை.

டாக்டர் கூறிய உணவு முறை, உடற்பயிற்சிகளை அப்படியே பின்பற்றினால் நோய் இல்லாதோருக்கு அது வராது, நோய் இருப்போருக்கு அது தீவிரமாகது என்பது மட்டுமல்லாமல் குறையவும் வாய்ப்புள்ளது எனலாம்.

முதலுதவி குறித்து நான் கேட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் பதில் அளித்தார் டாக்டர்.

புரொஜக்டர், போர்டு, படங்கள், நுட்பமான பெயர்கள், தனது உடல், கேள்வி பதில்கள் என சாத்தியமான எல்லா வகையிலும் பாடத்தை அருமையாக விளக்கினார்.

ஒவ்வொரு வகுப்பு இடைவேளை முடிந்தபின் அனைவரும் வந்து உட்கார்ந்ததும் பக்கத்து சீட்டில் இருப்பவர்கள் வந்துவிட்டார்களா என பார்த்துக்கொள்ளவும் என சிரிப்பலையை தூண்டிவிட்டார் டாக்டர்.

வகுப்பு சீரும் சிரிப்பும் சிறப்புமாக சென்றது என்று சொன்னால் அது தகுமே என்பது என் எண்ணம்.

டாக்டர் கேட்கும் கேள்விக்கு முதலில் சரியான பதில் சொல்வோருக்கு சாக்லேட் (அது சாக்லேட்டா அல்லது பிஸ்கட்டா என தெரியவில்லை🙂 பரிசாக அளித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார். கடைசியில் சரியான கேள்வி கேட்போருக்கு சாக்லேட் பரிசளித்து இரண்டு வகையிலும் உற்சாகப்படுத்தினார் டாக்டர்.

மிகப்பிரம்மாண்டமான பாடத்தையும், நுட்பமான சொற்களையும் மிக தெளிவாகவும் அதே சமயத்தில் சுவாரஸ்யமாகவும் கற்பித்தார் டாக்டர். இதற்குப்பின் இருந்த டாக்டரின் அர்ப்பணிப்பையும் அபார உழைப்பையும், உற்சாகத்தையும் நினைக்கும்போது வியப்பாக உள்ளது. கேள்விகளால் வகுப்பு நேரம் அதிகமானாலும் பாடத்தில் எதையும் குறைக்காமலும்கேள்வியை தவிர்க்காமலும், மேலும் ஓய்வு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கேட்பவர்களுக்கு பதில் அளித்தும் முழுமையான கல்வியை நிறைவாக அளித்தார் டாக்டர்.

இத்தனை சிறந்த கல்வியை அன்புடனும் உற்சாகத்துடனும் அளித்த டாக்டர்  மாரிராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

அந்தியூர் மணி அவர்கள் அனைத்து வகையிலும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததுடன், அவ்வப்போது கலந்துரையாடல்கள் மூலம் சிந்தனையை தூண்டியதுடன்சாப்பாடும் பரிமாறி அன்பை நிறைத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அனைவருக்குமான உணவை சமைத்து அளித்த அம்மா அவர்களுக்கு நன்றி.

இத்துணை சிறப்பு வாயந்த பயன்மிகு கல்வியை நாங்கள் கற்க உதவி வரும் உங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வருவோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

செல்லதுரை.சி

சென்னை

முந்தைய கட்டுரைஏன் நேர்க்கல்வி?
அடுத்த கட்டுரைபைபிள் கற்பவர் எவர்?