தத்துவம் உடனிருக்கட்டும்

தத்துவத்தின் நடைமுறைப்பயன் என்ன என்ற கேள்வி எங்கும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் போலும். மூவாயிரமாண்டுகளுக்கு முன்பு சாக்ரடீஸும் அரிஸ்டாடிலும் அந்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார்கள். காலத்தின் இந்த எல்லையில் வில் டுரண்ட் அவருடைய The Story of Philosophy என்னும் புகழ்பெற்ற நூலில் அதே கேள்விக்குப் பதிலளித்து அழகான சுருக்கமான முன்னுரை எழுதியிருக்கிறார். அடுத்த புகழ்பெற்ற நூலான சோபியின் உலகம் Sophie’s World ஜோஸ்டின் கார்டர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார். மீண்டும் மீண்டும் அந்தப் பதிலைச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது.

தத்துவம் மிகமிக நடைமுறை சார்ந்தது என்பதே உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லாததுபோலத் தோன்றும். ஏனென்றால் தத்துவத்தின் ஆய்வு முறையும் விவாத முறையும் அப்படிப்பட்டது. தத்துவம் ஒரு பிரச்சினையை அன்றாடத்தில் வைத்து, நடைமுறையில் வைத்து விவாதிப்பதில்லை. அந்தப் பிரச்சினைக்கு எல்லா காலத்திற்கும் உரிய தீர்வு என்ன என்று அது தேடுகிறது. அந்தப் பிரச்சினைக்கு மனிதகுலம் அனைத்துக்கும் உரிய தீர்வு என்ன என்று சிந்திக்கிறது.

ஆகவே அது பிரச்சினையை நுண்மையாக ஆக்கிக் கொள்கிறது. அதை பல்வேறு கூறுகளாக பிரிக்கிறது. ஒவ்வொரு கூறுக்கும் இன்னொன்றுடனுள்ள உறவு அல்லது முரண்பாடு என்ன என்று அது ஆராய்கிறது. அந்த ஒவ்வொரு கூறுக்கும் ஒரு பெயரைப் போடுகிறது. அந்த உறவு அல்லது முரண்பாடு பற்றி பலவகையான விளக்கங்களும் கொள்கைகளும் உருவாகின்றன. அவை ஒன்றுடனொன்று விவாதிக்கின்றன. அந்த ஒவ்வொரு கூறின் பெயரும், ஒவ்வொரு கொள்கையின் பெயரும் ஒரு கலைச்சொல் ஆகிவிடுகிறது.

இப்போது ஒரு மாணவன் உள்ளே நுழைகிறான். அவன் காண்பது கலைச்சொற்கள் நடுவே நிகழும் விவாதத்தைத்தான். அதன் நடைமுறைப்பயன் என்ன என்று அவனுக்குப் புரிவதில்லை. அது வெறும் தர்க்கவிளையாட்டு என்று தோன்றுகிறது. அவன் கலைச்சொற்களை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். கொள்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின் பிரச்சினையை நுண்மையாக புரிந்துகொள்ள வேண்டும். அதில் இருந்து அப்பிரச்சினையை நடைமுறையில் புரிந்துகொள்ளவேண்டும். அப்போது தத்துவம் எவ்வளவு துல்லியமான, பயனுள்ள விடைகளை அளிக்கிறது என்று புரிந்துகொள்வான்.

அவனுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கும். அப்படி சென்ற காலங்களில் தத்துவம் உருவாக்கிய பலவகையான விடைகளின் அடிப்படையில்தான் தன்னுடைய அதுவரையிலான வாழ்க்கை நடந்து வந்திருக்கிறது என்று அவன் காண்பான். மொத்தச் சமூகமே வெவ்வேறு தத்துவங்களின் பதில்களைக் கொண்டுதான் தன்னை உருவாக்கிக்கொண்டு செயல்பட்டு வருகிறது என அறிவான்.

சோவியத் ருஷ்யா உடைந்த நாட்களில் நான் ஒரு மூத்த கம்யூனிஸ்டுத் தலைவரைச் சந்தித்தேன். அவர் உடைந்து போயிருந்தார். அவருடைய வாழ்க்கையில் 40 ஆண்டுகளை அவர் கம்யூனிஸ்டு இயக்கத்துக்காகச் செலவிட்டிருந்தார்.பலமுறை சிறை சென்றிருந்தார். எல்லாமே பயனற்றுப் போய்விட்டது என உணர்ந்தார். அதை விட தன் வாழ்க்கை பயனற்றுவிட்டது என நினைத்தார். ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்!” என்று சொல்லி திடீரென கண்ணீர்விட்டு அழுதார். அந்தக் கேள்வியில் இருந்து தொடங்கி நான் பின் தொடரும் நிழலின் குரல் என்னும் நாவலை எழுதினேன்.

வரலாறு இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அரசியல் கிளர்ச்சிகள் நிகழ்கின்றன. அதிகார  மாற்றங்கள் நிகழ்கின்றன. பேரரசுகள் இல்லாமலாகின்றன. இந்த வரலாற்றுப்போக்குக்கு ஏதாவது நோக்கம் உண்டா? இதில் ஏதாவது தர்க்கம் செயல்படுகிறதா? அல்லது தர்க்கமே இல்லாமல் தற்செயல்களாக இதெல்லாம் இப்படி நிகழ்கின்றனவா?

ஜெர்மானிய தத்துவசிந்தயாளர் ஹெகல் வரலாற்றை ஆராய்ந்தால் அதில் ஒரு தர்க்கமுறை தெரிகிறது என்றார். காலம் முன்னகருந்தோறும் மனிதனின் ஒட்டுமொத்தமான அறிவு, சமூக அமைப்பு, பண்பாடு ஆகியவை வளர்ச்சி அடைகின்றன என்றே தெரிகிறது. மனிதன் இன்னும் அறிவாற்றல் கொண்டவனாக ஆகிறான். மனித இனம் ஒன்றாகத் திரண்டுகொண்டே இருக்கிறது. அதனால் ஒவ்வொரு தனிமனிதனும் ஒட்டொமொத்தமான அறிவும் உள்ளமும் கொண்டவனாக ஆகிறான்.

இப்படி மனிதனை மாற்றுவது மனிதனுக்குள் இருக்கும் ஓர் அடிப்படை உந்துதல். அது மனிதனை ஆற்றல் கொண்டவனாக ஆக்கிக்கொண்டே செல்கிறது. வரலாறு காட்டும் சித்திரம் இதுவே. போர்கள், நோய்கள், பஞ்சங்கள், அரசியல் கிளர்ச்சிகள், அழிவுகள் எல்லாம் நிகழ்கின்றன. ஆனால் ஒவ்வொன்றுக்குப் பிறகும் மனிதன் ஆற்றல் மிக்கவனாக ஆகிறான்.

இது எப்படி என்றால் நேர்நிலை விசைகளும் எதிர்நிலை விசைகளும் மோதி அதன் விளைவாக இணைந்து ஒரு முன்னகர்வு நிகழ்வதுபோல. இதை முரணியக்கம் (dialectic) என்கிறார். இதைப்புரிந்துகொள்வது எளிது. ஒரு துண்டு உணவை எறும்புக்கூட்டம் இழுத்துச்செல்வதை பாருங்கள். ஒரு பிளேடால் அந்த உணவை நடுவே வெட்டினால் ஒவ்வொரு புழுவும் தன் பக்கமாகவே உணவை இழுப்பது தெரியும். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்த உணவு முன்னகர்ந்து செல்வதையும் காணலாம். அதுதான் முரணியக்கம்

வரலாற்றில் மனிதன் வளர்ந்துகொண்டிருக்கிறான். ஒரு மரம் வளர்வதுபோல. வரட்சி , காட்டுத்தீ எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, கிடைக்கும் நீரையும் சத்துக்களையும் உண்டு அது வளர்கிறது.அதற்குக் காரணம் அந்த மரத்தின் வளரவேண்டும் என்னும் விருப்பம். அதற்குள் இருக்கும் உந்துதல். அதை ஹெகல் The Phenomenology of Spirit  என்ற நூலில் விளக்கினார்.

ஹெகலின் மாணவரான கார்ல் மார்க்ஸ் வரலாறு முன்னகர்வது உண்மைதான் என்றார். ஆனால் அது மனிதனின் உள்ளிருக்கும் ஆற்றலால் நிகழவில்லை. அது வெளியே இருக்கும் பொருளாதார சக்திகளால் நிகழ்கிறது. உற்பத்தி, வினியோகம், நுகர்வு ஆகியவையே பொருளாதார சக்திகள். அவற்றின்பொருட்டே அரசியல், சமூகம், மதம், பண்பாடு எல்லாம் நிகழ்கின்றன. அந்த உற்பத்தி சக்திகள் தங்களுக்குள் மோதி உருவாக்கும் முரணியக்கம் வழியாக வரலாறு நிகழ்கிறது. அந்த வரலாற்றின் வழியாக மனிதன் ஆற்றல் கொண்டவனாக ஆகிக்கொண்டே செல்கிறான்.

ஹெகல் முன்வைத்தது வரலாற்று பொருள்முதல்வாதம் (Historical Materialism) மார்க்ஸ் முன்வைத்தது முரணியக்க வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Dialectical Historical Materialism).இரண்டு தத்துவங்களும் ஒன்றுடன் ஒன்று விரிவாக விவாதித்துள்ளன. அந்த விவாதங்களை வாசித்தால் தத்துவம் ஒரு நுண்ணிய தர்க்கம் மட்டும்தான் என்று தோன்றும். ஆனால் அந்த விவாதத்தில் அந்த முதிய கம்யூனிஸ்டுத் தியாகி கண்ணீருடன் கேட்ட கேள்விக்கான இரண்டு விடைகள் உள்ளன.

வரலாறு நிகழ்வது முரணியக்கம் வழியாக. ஒவ்வொருவரும் அவரவர் திசைக்கு அதை இழுக்கிறார்கள். அது ஒட்டுமொத்தமாக ஒரு முன்னகர்வாகவே நிகழ்கிறது. அந்த கம்யூனிஸ்டு தோழர் செய்தது வரலாற்றில் அவருக்கான பங்களிப்பை. அதன் விளைவாக வரலாறு எப்படி செல்லும் என அவர் ஊகிக்க முடியாது. அவர் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் மனதுக்குள்ளும் இருக்கும் முன்னேறும் விருப்பத்தை தன்னளவில் செயல்படுத்தியவர். ஆகவே அவர் வரலாற்றுக்கு பங்களிப்பாற்றியவர். அவருடைய செயல் வீண் அல்ல. இதை ஹெகல் சொல்லக்கூடும்.

மார்க்ஸ் இன்னொரு கோணத்தில் சொல்லக்கூடும். இந்த உலகம் பொருளியல் விசைகளின் முரணியக்கம் வழியாக முன்னகர்கிறது. ஒரு பொருளியல் சக்தியின் தரப்பாக அந்த தோழர் தன் பங்களிப்பை ஆற்றினார். ஒட்டுமொத்தமாக வரலாறு இயங்குவதில் அவருடைய விசையும் கலந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பலவகையான நிகழ்வுகள் வழியாக மனிதகுலம் முன்னேறுகிறது, மனிதன் வளர்கிறான். அதில் தோழரும் பங்கேற்றார்.

இரண்டு பதில்களில் ஒன்று அவரை நிறைவுறச் செய்யும் என்றால் அவருக்கு அந்த மாபெரும் வெறுமை உருவாகியிருக்காது. அவருடைய முதுமை அவ்வளவு கொடூரமானதாக ஆகியிருக்காது.

இந்தியாவின் எல்லா தத்துவ நூல்களும் தத்துவத்தின் பயன் ‘துயரை அறுத்தல்’ (துக்க நிவாரணம்) என்றே சொல்கின்றன. நாம் எல்லா துக்கங்களையும் தத்துவத்தைக் கொண்டே எதிர்கொள்கிறோம். அந்த தத்துவங்கள் பல ஆயிரமாண்டு பழையவை, நம்மிடம் இயல்பாக வந்து சேர்ந்து நம் பேச்சிலேயே இருந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஏராளமான புதிய பிரச்சினைகளும் கேள்விகளும் உருவாகின்றன. அவை உருவாக்கும் துயரத்திற்கு தத்துவம் புதிய விடைகளை கண்டடைந்து சொல்லவேண்டியிருக்கிறது.

ஜெர்மானிய தத்துவ அறிமுகம்

ஜெர்மானிய தத்துவம் கான்ட் முதல் ஹைடெக்கர் வரை. ஓர் அறிமுகம்.

நடத்துபவர் அஜிதன்.

ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)

முந்தைய கட்டுரைசெயலும் செயலின்மையும்.
அடுத்த கட்டுரைகற்றலுக்குச் சூழல் அவசியமா?