அபாரமான தனிமை

அன்புள்ள ஜெ

என்னுடைய பிரச்சினை என்பது தனிமை. ‘அபாரமான தனிமை’ என்று நீங்கள் சில இடங்களில் எழுதியுள்ளீர்கள். அந்தவகையான தனிமைக்கு நான் இளவயதிலேயே வந்துவிட்டேன். என்னால் ஜாலியாகப் எவரிடமும் பேச முடியாது, இளைஞர்கள் கூடியிருக்கும் இடங்களில் நான் இணைந்துகொள்ள மாட்டேன். நிறையபேர் இருப்பார்கள் என்பதனாலேயே நான் பல சந்திப்புகளையும் நிகழ்ச்சிகளையும் தவிர்த்துவிடுகிறேன்.  நீங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளுக்கு வருவதில் எனக்கிருக்கும் சிக்கலும் இதுதான்.

வி

 

அன்புள்ள வி,

தனிமை என்பதை ஒரே சொல்லில் வகுத்துவிட முடியாது.

இரண்டு வகையான தனிமைகள் உண்டு. ஒன்று நாம் அறிவார்ந்து தனிமைப்படுவது. இன்னொன்று நாம் உணர்வுசார்ந்து தனிமைப்படுவது. அறிவுசார்ந்த தனிமை நம் தகுதியால் அமைவது. நம்மை நாம் மேலே கொண்டு சென்று விட்டமையால் வருவது. உணர்வுசார்ந்த தனிமை நம் தகுதியின்மையால் வருவது. நம்மை நாம் பிறரை விட கீழே வைத்துக்கொள்வதனால் வருவது.

உணர்வுசார்ந்த தனிமை ஒரு மனச்சிக்கல். நம்மைப்பற்றி நாம் தாழ்வாக நினைக்கிறோம். நம்முடைய ஏதோ ஒரு அம்சம் நமக்கு பிடிக்கவில்லை. தோற்றம், குரல், பேச்சுமுறை, அறிவுத்திறன், படிப்பு, வேலை, சாதி, குடும்பப்பின்புலம்… அந்த குறையை பிறர் கவனிக்கிறார்கள் என நினைக்கிறோம். ஆகவே நாம் பிறரை எதிர்கொள்ள தயங்குகிறோம். தனிமை என நாம் சொல்வது ஒரு நோயின் வெளிப்பாடு மட்டுமே. நோயின் காரணம் உள்ளே இருக்கும், அதைக் கண்டுபிடித்துக் களையவேண்டும்.

அதற்கு ஒரே வழி, நாம் சிக்கிக்கொண்டிருக்கும் அந்த தனிமையுணர்வில் இருந்து நம்மை கிழித்துக்கொண்டு வெளியே வருவதுதான். அந்த செயற்கையான, முரட்டுத்தனமான முதல் முயற்சி இல்லாமல் அந்த வெளிவருதல் நிகழாது.அது தானாக நிகழும் என எதிர்பார்க்கவே முடியாது. பலசமயம் எளிமையான சில பயிற்சிகளே அந்த தயக்கங்களை உடைத்துவிடும். ஒருவர் மேடைப்பேச்சுப் பயிற்சியை அடைந்தால் அவருடைய பேச்சு தெளிவடைந்து அவர் பிறருடன் இயல்பாக பழக ஆரம்பிப்பதை கண்டிருக்கிறேன்.

அதற்கு தேவையான பயிற்சி என்பது ஒவ்வொருவருக்கும் உரியது. ஆனால் ஒருவர் ஒரு சிறிய சாதனையைச் செய்துவிட்டால், தன்னுடைய தகுதி அல்லது திறமை என ஒன்றைக் கண்டடைந்துவிட்டால் அவருடைய இயல்பு மாறிவிடுகிறது. தன்னைப்பற்றிய சிறு மனநிறைவு உருவானாலே போதும், அவர் பிறருடன் இயல்பாகப் பழக ஆரம்பிப்பார்.

அறிவார்ந்த தனிமை என்பது அறிவுடன் இணைந்தது, தவிர்க்க முடியாதது. அதை மேலும் அறிவைச் சேர்க்க பயன்படுத்தவேண்டும். அது அவசியமானது, நம் அறிவுத்தளத்தில் இல்லாதவர்களிடம் இருந்து நாம் விலகிக்கொள்வதன் விளைவு அது. அறிவார்ந்த தனிமை கொண்டவர்கள் அந்த தனிமையில் மகிழ்ச்சி அடைவார்கள். அதை இனிமையாக ஆக்கிக்கொள்வார்கள். அந்தத் தனிமையில்தான் அவர்களின் சாதனைகள் உருவாகின்றன

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைநித்யாவை முன்வைக்கிறோமா?
அடுத்த கட்டுரைதொழில்நுட்பர்களுக்கு தத்துவம் எதற்காக?