மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு
கடற்கரைக்கு செல்லும் போதெல்லாம் சிப்பியின் ஓடுகளை காணும் போது பெரும் வியப்பு உருவாகும், இயற்கையின் நுண்ணிய வேலைப்பாடுகளை பார்த்து. அந்த வியப்பு பறவைகளில் இன்னும் பன்மடங்காகிறது. வீட்டின் மரத்திற்கு வரும் பறவைகளை பார்க்கும் போது அதை அறிந்து கொள்ள ஆர்வம் எழும். சிறிது நேரம் அப்பறவையை பார்த்து விட்டு சென்று விடுவேன். கருங்குயில் அத்தி பலத்தை லாவாக விழுங்கும். கொண்டை வைத்த ஒரு சிறு பறவை வர அதை தொடர்ந்து கூடவே இன்னொன்று வரும். அத்தி பழுக்கும் போது மட்டும் நீல வால்கொண்ட ஒரு ஆரஞ்சு பறவை வந்து கொத்தி செல்லும். பாட்டிற்கும் உருவத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் மிகச்சிறிய ஒரு மஞ்சள் குருவி இலைகள் நடுவில் தத்தி தத்தி பாட்டு பாடும். காக்கை ஞாயிறு காலை வந்து கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப்போய் வேறு வேறு இடத்தில் மறைத்து வைத்து பின்பு தண்ணீரில் நனைத்து விழுங்கும். தவிட்டு குருவிகள் வீட்டை சுற்றிலும் கத்தி கொண்டும் மண்ணை கொத்திக்கொண்டும் இருக்கும். இப்படி அன்றாடத்தில் பார்த்துக்கொண்டிருந்ததை தளத்தில் பயிற்சி வகுப்பாக கண்ட உடன் மகளை சாக்கு சொல்லி பதிவு செய்து கொண்டேன்.
இருபது சிறுவர் சிறுமியரும், பத்துக்கும் மேற்பட்ட பெற்றோருடன் காலை பத்து மணிக்கு வகுப்பு துவங்கியது. விஜயபாரதி சார் பறவைகள் டிரெக்ஸ் டைனோசரில் இருந்து இன்று இருக்கும் பறவை இனமாக அடைந்த பரிமாண வளர்ச்சிபற்றி ஆரம்பித்து, அதன் உறுப்புகள் வண்ணங்கள் உணவு வலசை என விரிவான ஆனால் எளிமையாக பறவைகள் பற்றி விளக்கினார். ஈஸ்வரமூர்த்தி சார் பறவைகளின் ஒலிகளை அறிமுகப்படுத்தி கேட்கும் நுணுக்கங்களை விளக்கினார்.
மாலை 4 மணிக்கு பறவைகளை பார்க்க சென்றோம். சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் ஒவ்வொரு பறவையாக அடையாளம் கண்டு சென்றோம். பறவையின் உறுப்புகளையும் வண்ணங்களையும் வைத்து ஒன்றில் இருந்து ஒன்றை வேறுபடுத்தும் தன்மையை அறிந்து கொண்டு ஒரு பறவையை பார்க்கும் போது மேலும் நுணுக்கமாக ரசிக்கமுடிகிறது. மாலைச்சூரியனின் எதிர் வெளிச்சத்தில் பச்சை நீலம் ஆரஞ்சு என உடலெல்லாம் பளிச்சென்ற வண்ணங்களை கொண்ட பறவையை பார்த்து விஜய் சாரிடம் பெயரை கேட்க, நீங்களே கொடுத்த கையேடை வைத்து கண்டு பிடியுங்கள் என்றார். அந்த பறவையை மீண்டும் சிறிது நேரம் அலகு இறகு கண் கால் என மனதில் பதித்து கையேட்டில் தேடிக்கண்டுபிடித்ததில் பனங்காடை கண்ணுக்குள் நின்றுவிட்டது. மழை வந்து போக இன்னும் பல பறவைகளை கண்டோம். மரங்களின் அடர்ந்த பச்சை பின்னணியில் பளிச்சென்ற மஞ்சள் கருப்பு கலவை கொண்டு கண்ணை பறித்தது மாங்குயில். மின்கம்பியில் அமர்ந்திருக்கும் பறவைகள் அனைத்தும் ஒன்றே என்று நினைத்திருந்தது இன்று பலவகை கரிச்சான்களாக தேன் சிட்டுகளாக சினான்களாக மாறியது. இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளை அடையாளப்படுத்த முடிந்தது. அனைவரும் பார்த்து ரசித்து பெயரறிந்து ஆர்வத்துடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக கண்டு களித்தோம். இரவு ஏழு மணிக்கு பறவை ஆர்வலர்கள் பற்றிய சுவாரசியமான சில கதைகளை சொல்லி புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தனர் இரு ஆசிரியர்களும்.
இரண்டாம் நாள் காலையில் 6 மணிக்கு மற்றுமொரு நடைபயணம் பறவைகளை பார்க்க. ஒரு கிமீ உள்ளேயே பல பறவைகளை கண்டோம். ஐந்து மணி நேரத்தில் 27 வகை பறவைகளை கண்டோம். பறவைகள் நிறம் மாறுவது பற்றியும், அதன் வாழ் நிலங்கள் பற்றியும் கூறி வகுப்பு முடிந்தது. இங்கிருந்து அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும், இந்த ஆர்வத்தை மேற்கொண்டு எப்படி எடுத்துச்செல்லலாம், இதன் முன்னோடிகள் யார் என்று விளக்கி சிறு தேர்வுடன் வகுப்பு நிறைவடைந்தது. சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் பறவைகளை அறிமுகம் செய்து வைத்து இயற்கையின் ஒரு பெரிய கதவை திறந்து வைத்தது போலிருந்தது. என் எட்டு வயது மகள் வகுப்பை கவனித்து பறவைகளை பார்த்து கேள்விகளும் கேட்ட பொழுது அவளுக்குள் ஒரு புதிய உலகம் அறிமுகமானதை உணர முடிந்தது.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
நன்றி
பிரியா