அன்புள்ள ஜெ
பௌத்த தியான முறைகளை உங்கள் அமைப்பில் திரு அமலன் ஸ்டேன்லி அவர்கள் கற்பிப்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இன்று பௌத்த தியான முறையான விபாசனாவும் அந்த அடிப்படை தத்துவத்தை கழற்றிவிட்டுவிட்டு வெறும் தியான முறையாக கற்பிக்கப்படுகிறது. பௌத்தத்தில் உள்ள தத்துவத்தை நீக்கிவிட்டு விபாசனாவை கற்பிக்க முடியாது. கோயங்கா முறையில் விபாசனா ஒரு தியானம்- பஜனை ஆக மாறிவிட்டிருக்கிறது.
இந்த உலகை நாம் ஃபாஸிக்கிறோம். அந்த பாஸத்தை அகற்றும் தியானமே வி- பாஸனா. அது ஒரு தனித்தன்மை கொண்ட தியானம். நாம்தான் நம் உலகை உருவாக்குகிறோம் என்று ஏற்றுக்கொண்டால்தான் நாமே நம் உலகை அகற்றமுடியும் என்று நம்ப முடியும். அப்படி நம்பினால்தான் உலகக்காட்சியை விலக்கி (விபாசனா செய்து) உலகத்துக்கு அப்பாற்பட்ட நம் அகத்தை (விக்ஞானம்) உணர முடியும். நம் அகம் என்பது நம் ஆத்மா அல்ல. நம் அகம் என்பது நம் மனம் என்ற ஓயாத நிகழ்வுதான். ஊடும்பாவுமாக ஓடி
அந்நிகழ்வு நமக்குள் இடைவிடாமல் தறிபோல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதுதான் நாம் என நாம் நினைக்கிறோம். ஆனால் அந்நிகழ்வின் design /pattern /rule ஆகியவைதான் நாம். அதை நாம் காண்பதற்குத்தான் விபாசனா. ஆனால் ஒருவர் ஆத்மா என்பதை நம்பினார் என்றால், இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நினைத்தால் விபாசனா என்பது வேறுவகையில் பொருளாகிவிடும்.
பௌத்த தத்துவமாகவே அதைக் கற்றுக்கொடுப்பது இங்கே ஐரோப்பாவில் நிகழ்கிறது. இந்தியாவில் எல்லாமே இந்துமயமாக்கப்படுகிறது. பௌத்தத்தத்துவமாக விபாசனா கற்பிக்கப்படுவது மிகச்சிறந்த விஷயம்
அன்புடன்
கிருஷ்ணா
அன்புள்ள கிருஷ்ணா
இந்த வகுப்புகள் ஒரு சில அடிப்படைக் கொள்கைகளின்படி ஒருங்கிணைக்கப்படுகின்றன
அ. தத்துவம் – அதன் அடிப்படையிலான செய்முறைகள் மட்டுமே கற்பிக்கப்படும். எந்த செய்முறையாக இருந்தாலும் அதன் தத்துவம் அதற்குரிய மரபின்படியே கற்பிக்கப்படும். பதஞ்சலி மரபை சௌந்தரும், பதஞ்சலி – ஹடயோக மரபின் இணைப்பை தில்லை செந்தில்பிரபுவும், பௌத்த மரபை அமலன் ஸ்டேன்லியும் கற்பிக்கின்றனர்
ஆ. வெறும் வழிபாடுகள், பக்தி ஆகியவை கற்பிக்கப்படாது. வழிபாடு, பக்தி ஆகியவற்றின் அடிப்படையாக உள்ள தத்துவம் கற்பிக்கப்படும்.
இ. எந்த ஒரு மதக்குழுவுக்கும் மட்டுமான பயிற்சிகள் இல்லை. அனைவரும் பங்கெடுக்கலாம்
ஜெ