தெய்வம் தேவைப்படும் இடம்

அன்புள்ள ஜெ

என்னுடைய முப்பத்தாறு வயது வரை நான் கடுமையான நாத்திகன். ‘நாத்தழும்பேறநாத்திகம் பேசியவன். அதன்பின் மெல்ல மெல்ல என் மனம் மாறியது. இன்று கடவுள் பக்தி உண்டு. கோயிலுக்கும் போவதுண்டு. ஆனால் உள்ளூரிலே இன்றும் நாத்திகனாகவே காட்டிக்கொள்கிறேன். கேரளத்தின் கோயில்களுக்கு மட்டும்தான் செல்கிறேன். 

இன்று நாத்திகத்தை விட்டுவிட்டேன் என்று சொன்னால் பழைய நண்பர்களும் சொந்தக்காரர்களும் கேலி செய்வார்கள் என்னும் நினைப்புதான் காரணம். இப்படி இரட்டைவேடம் கொண்டிருப்பது எனக்கே சலிப்பூட்டுவதாகவும் உள்ளது. இந்தவகையான மாற்றம் பலரிடம் நிகழ்கிறது. 

ஒரு பேச்சாளர்  சிந்திக்கும்போது நாத்திகனாக இருக்கிறார்கள். சிந்தனையை நிறுத்திவிடும்போது ஆத்திகனாக ஆகிவிடுகிறார்கள்என்று சொன்னார். அது உண்மையா?

எம்.

அன்புள்ள எம்

இளமையில் நமக்கு செல்வம், அதிகாரம் மீதான ஓர் ஒவ்வாமை உருவாகிறது. நாம் செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிரானவர்கள், அவற்றைப் பொருட்படுத்தாத கலகக்காரர்கள் அல்லது இலட்சியவாதிகள் என எண்ணிக்கொள்கிறோம். நம் கலக மனநிலையை அல்லது எதிர்ப்புநிலையை நம் நிரந்தர இயல்பாக எண்ணிக்கொள்கிறோம். அப்படி அல்ல என்பது போகப்போகத் தெரியும். 

இளமையில் செல்வம், அதிகாரம் இரண்டையும் விட காமம் முக்கியமானதாக உள்ளது. அதைவிட புகழ் முக்கியமானதாக உள்ளது. காமம் சார்ந்த பகற்கனவுகள், சாதனைகள் வழியாக புகழ்பெறும் கனவுகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. உண்மையில் இந்த இரண்டு கனவுகளுக்கும் மையமென உள்ளது நம் சுயமைய நோக்குஅல்லது ஆணவம்.

அனுபவங்கள் வழியாக ஆணவம் தளர ஆரம்பிக்கிறது. நம் எல்லைகள் தெரியத் தொடங்குகின்றன. இளமையின் ஒரு கட்டத்தில் தன்னுடைய சாதனைகள் பற்றிய கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்ததுமே மனிதர்கள் மாற ஆரம்பிக்கிறார்கள். “லைபிலே பல அனுபவங்கள். பல அடிகள். அப்றம் நிதர்சனம் புரிஞ்சது சார்  என பெரும்பாலானவர்கள் சொல்வதைக் காணலாம்.

இந்த இரண்டாவது கட்டத்தில் முதல்கட்டத்தில் இருந்த மிதமிஞ்சிய  தன்னம்பிக்கை அல்லது சுயமையப்பார்வை சார்ந்த பகற்கனவுகள் இல்லாமலாகின்றன. இப்பிரபஞ்சம், இந்த பூமி, இந்த வாழ்க்கை மிகமிகப்பிரம்மாண்டமானது என்னும் புரிதல் உருவாகிறது. அதில் ஒரு வெறும் துளியான நம் வாழ்க்கையை முழுக்க நாமே முடிவெடுத்துவிட முடியாது என்ற அறிதலை அடைகிறோம். நம் வாழ்க்கையை நாம் எந்தவகையிலும் அறியமுடியாத, எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியாத, பல்லாயிரம் விசைகள் தீர்மானிக்கின்றன. ஒவ்வொருநாளும், ஒவ்வொரு கணமும்.

இந்த அறிதலை அடைந்ததும் பலரிடம் ஒரு சரணாகதி மனநிலை உருவாகிறது. நீந்தி நீந்தி கை தளர்ந்ததும் நீரோட்டத்தின் போக்கிலேயே நம்மை விட்டுவிடுவதுபோன்றது அது. பலர் கனவுகளை முழுமையாக கைவிட்டுவிடுகிறார்கள். தன்னம்பிக்கையை முழுமையாக இழந்துவிடுகிறார்கள். தன்னிரக்கமும், சோர்வும் கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். அந்நிலையில் மனிதர்களுக்கு ஒரு பற்றுகோடு தேவைப்படுகிறது. எதையாவது நம்பவேண்டியிருக்கிறது. அங்கேதான் கடவுள்நம்பிக்கை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களில் சிலர் கூடவே  சோதிடம் நோக்கியும் செல்கிறார்கள். 

கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. வாழ்க்கை சார்ந்த பதற்றங்களை இல்லாமலாக்குகிறது. அன்றாடங்களை இயல்பானதாக ஆக்குகிறது. தீவிரமான கடவுள்நம்பிக்கை பலவகையான உளச்சோர்வுகளை இல்லாமலாக்குகிறது. கடவுள்நம்பிக்கை இல்லாத இடத்தில்தான் தனிமையும், அதீத உளச்சோர்வும் பெருகுகின்றன.

கடவுள் நம்பிக்கை கண்டிப்பாகத் தேவையா? இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஒருவர் நிறைவாகவே வாழமுடியும். ஆனால் அவருக்கு அறிவார்ந்த முழுமையான ஒரு பிரபஞ்சப்பார்வை இருக்கவேண்டும். அதைக்கொண்டு அவர் தன் வாழ்க்கையின் போக்குகளை விளக்கிக்கொள்ள முடியவேண்டும். அத்தகைய தத்துவக்கொள்கைகள் உள்ளன. அவற்றை முறையாகப் பயின்று தெளிவடையவேண்டும்.

கடவுள் நம்பிக்கை மட்டும் போதுமா? இல்லை. கடவுள் நம்பிக்கை அறியமுடியாமை அளிக்கும் பதற்றத்தை இல்லாமலாக்கும், ஒரு பற்றுகோலாக துணைநிற்கும். ஆனால் அவ்வாறு கடவுளை நம்பி தனக்கான கடமைகளை, இலக்குகளை தவறவிடுபவர் இவ்வுலகை இழப்பார். ஒருவருக்கு தன் வாழ்வின் வெற்றியும் மகிழ்வும் எதில் என்னும் தெளிவு தேவை. அவற்றைச் அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சி வாழ்நாள் முழுக்க இருந்தாகவேண்டும். விளைவுகளை அவர் கடவுளுக்கு விட்டுவிடலாம். கடமைகளையும் விட்டுவிட்டால் அவர் கடவுள்நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துகிறார். தோல்விமனப்பான்மை, சோம்பல், பொறுப்பின்மை ஆகியவற்றுக்கு கடவுள் நம்பிக்கை சாக்காக இருக்க முடியாது.

ஆகவே இளமையில் கடவுள் நம்பிக்கையற்று ‘தன்மேல்’ நம்பிக்கை கொண்டு இருப்பது பிழை அல்ல. அது இளமையின் மனநிலை. முதிர்வு வந்ததும் மேலே சொன்ன இரு வழிகளில் ஒன்றை நோக்கி நகர்வதும் இயல்பே. கடவுள் நம்பிக்கை அல்லது தத்துவத்தெளிவு. இரண்டுமே இணையான வழிகள்தான்

 

ஜெ

முந்தைய கட்டுரைபௌத்தம்:தியானமும் தத்துவமும்
அடுத்த கட்டுரைபொன் என்பது…