ஊழும் அநீதியும்

அன்புள்ள ஜெ,

அநீதி, ஊழ் இவை இரண்டும் ஒருசேர உலகத்தில் இருக்கமுடியுமா?

இருக்கமுடியும் என்றால் அதை தெளிவாக இனம் காணமுடியுமா? ஒருவரின் அநீதி பிறருக்கு ஊழ் என்று தோன்றாதா? ஒருவரின் ஊழ் பிறருக்கு அநீதி என்று தோன்றாதா?

பெருன்பான்மை மட்டுமே நீதியை தீர்மானிக்க முடியுமா?

இருக்கமுடியாது என்றால், எல்லா அநீதியும் அவரவர் ஊழ்தானா? அல்லது ஊழே அது அனைத்தும் என்றால், வாழ்வு ஒரு பெரும் கனவுகூட இல்லாத ஒன்றா?

அன்புள்ள,

கார்மேகம்

 

அன்புள்ள கார்மேகம்

இத்தகைய கேள்விகளை அருவமான கேள்விகள் எனலாம். இரண்டு வகையில் இவற்றை எழுப்பிக்கொள்ளலாம். மிக தோராயமாக, ஒரு வகை அளவளவலாக. அல்லது தத்துவார்த்தமாக.

தத்துவார்த்தமாக அணுகவேண்டும் என்றால் முறையாகத் தத்துவம் பயிலவேண்டும். அதற்காகவே தத்துவ வகுப்புகளை நடத்துகிறோம். வெறும் அளவளாவல் என்றால் இந்தக் கேள்விக்கான உரையாடல் அர்த்தமின்மையை நோக்கிச் செல்லும்.

தத்துவம் எப்படி அணுகும் என ஒரு கோடி காட்டுகிறேன்

ஊழ் என்பது absolute ஆனது. அதாவது முழுமையான முதல்முடிவான ஒரு விஷயம். இங்குள்ள ஒவ்வொரு செயலும் இன்னொன்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. அப்படியென்றால் இப்பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொரு செயலும் இப்ப்பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்தமாக அனைத்து நிகழ்வுடனும் தொடர்புகொண்டுள்ளது. ஆகவே ஒரு நிகழ்வை ஒட்டுமொத்தமாக பிரபஞ்சத்தின் போக்கே தீர்மானிக்கிறது. இது ஊழ்.

அநீதி என்பது relative ஆனது. சார்புநிலை கொண்டது. அது உங்கள் வாழ்க்கை, உங்கள் பார்வை சார்ந்தது. மான்குட்டியை சிங்கம் சாப்பிடுவது அநீதியா நீதியா? முழுமுதல் பார்வையில் அநீதி நீதி என்பதற்கு இடம் இல்லை.

நீங்கள் பரமார்த்திக உண்மையை உலகியல் உண்மைகளுடன் கலந்துகொள்கிறீர்கள். அவை வேறுவேறானவை. இதுவே தத்துவம் விவாதிக்கத் தொடங்கும் இடம். முறையாகத் தத்துவம் கற்று இவற்றை யோசிப்பதே பயனுள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைஇந்து மதம் – தத்துவமும் வளர்ச்சியும் | முழுமையறிவு
அடுத்த கட்டுரைமரபின்பம்