இஸ்லாம், கடிதம்

அன்புள்ள ஜெ,

உங்களது ‘ஏன் இஸ்லாமை தெரிந்துக்கொள்ள வேண்டும் ‘ என்ற காணொளி கண்டேன். இஸ்லாமிய மெய்யியல் குறித்து கவிஞர் நிஷா மன்சூர் மூலம் நீங்கள் வகுப்பு எடுக்கும் முயற்சிக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காணொளியில் ‘இஸ்லாம்  என் மதம் ‘ என்று குறிப்பிட்ட போது உண்மையில் அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. நீங்கள் அவ்வப்போது உங்கள் அண்டை வீட்டாரை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்  ! ஒரு சூப்பில் இன்னொரு கோப்பை தண்ணீர் ஊற்றி அவர்களுடன் பகிர்ந்துண்ணுங்கள் என்கிறார்கள் நபிகள் நாயகம். இது பெரும்பான்மையான இந்து ஆன்மிக மரபை ஒட்டி வளர்ந்த குறிப்பாக தமிழ் இஸ்லாமிய மெய்யியல் குறித்த அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு.

மாதிகுர் றசூல் சதக்கத்துல்லா அப்பாவை பற்றி கூறினார்கள் அதிலிருந்த இந்து சமய தொடர்பும் தழுவலும் பற்றி குறிப்பிட்டீர்கள். இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய நீண்ட மரபு. முகலாயர் மன்னர்களின் அரசவையில் இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் முதல் பெரும் இறைநேசர்களுக்கு காதிமாகாவும்(உதவியாளாராகவும்) நம்பிக்கைகுரியவராகவும் இந்து சமயத்தினர்/ கிருத்துவ சமூகத்தினர் இருந்திருப்பது நம் பண்பாட்டின் பெருமை. இந்நீண்ட மரபில் மத சாயலோடு குறுகிய மனப்பான்மையோடு சுருக்கம் வந்து விடக்கூடாது என்று நினைப்பவன் நான்.

நாகூர் சாகுல் ஹமீது பாதுசா நாயகத்திடம் எண்ணற்ற சீடர்கள் இருந்துள்ளார்கள் அவர்களது பெரும் முஹப்பீன்கள்(நேசம் கொண்டவர்கள்) மாற்று மதத்தினர் தான். இன்று என் ஊரில் இருக்கும் கோட்டைப்பட்டினம் தர்கா உரூஸிற்கு முதல் மண்டகப்படி சோறு பத்தர் சமூகத்தில் இருந்தே வரும். கடந்த வருடம் பாசிப்பட்டினத்தில் ஒரு இறை நேசரின் உரூஸ் விழா ஒரு நிகல்ழ்வை கமிட்டியாளர்கள் பின்வாங்கி கொள்ள அதை மீன்பிடி சமூகம் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். இப்போது கூட நாகூரில் வாழ்ந்து இமாம் கஸ்ஸாலியின் இஹ்யா உலுமுத்தினின் சில பாகங்களை மொழிப்பெயர்த்த அப்துல் வஹ்ஹாப் பாக்கவி குறித்த நினைவுகளை  திலகவதி ஐ பி எஸ் பேசுகிறார். ஒலிவர் எனும் ஆங்கில இந்தியர் வஹ்ஹாப் பாக்கவியோடு கிடைத்த ஆன்மிக அனுபவங்களை பேசுவது எல்லாம் நம் இந்திய பண்பாட்டின் நீட்சி.

சூஃபிசத்தில் ‘கசரத்’ லிருந்து ‘வஹதத்’ என்பார்கள் – அதாவது ‘பன்மைகளிலிருந்து ஒருமையை நோக்கி பயணித்தல் ஒரு சாலிக்கின்(ஆன்மிக பாதையில் நடைபோடும் மெய்யடியார்) நாம் அப்படித்தான் இருக்கவேண்டும் . எல்லா மத மாச்சர்யங்களையும் களைந்து ஒருமையின் பரம்பொருளை நோக்கி நடைபோடவேண்டும்.

இக்கடித்தத்துடன் தமிழ் இஸ்லாமிய மெய்யியல் ஞானிகளை உள்ளடக்கிய ஒரு சிறுகதை எழுதினேன். அதுவும் உங்கள் பார்வைக்கு.

இப்படிக்கு

முகம்மது ரியாஸ்

முந்தைய கட்டுரைராஜாவா ரஹ்மானா?
அடுத்த கட்டுரைமேலைத் தத்துவ அறிமுகம்