யூடியூப் சேனல் அமைப்பது…

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ,

கடந்த எட்டு வருடமாக நீங்கள் சுட்டும் இடங்களையே கண்டும் வாசித்தும் வந்திருக்கிறேன்.உங்களின் வழியாகவே கவிஞர்களும் எழுத்தாளர்களும் என் வாசிப்பில் பெருகி போயினர். சமீப காலமாக என் வாசிப்பில் ஒரு அதிருப்தி உள்ளது.எதையும் நான் அறிவாக மாற்றிக்கொள்ளவில்லையோ என. அதற்காக , இப்போது ஏதேனும் செய்யவேண்டும் ஏன தோன்றுகிறது. பொறுப்புடன் அதை அணுக , எனக்கே எனக்கான கட்டுப்பாட்டுடன் ஆராயும் படி எனது வாசிப்பு இருக்க வேண்டும் என. இன்று விடிகாலையில் எழுந்தவுடன் தோன்றியது பின்வரும் ஒன்று. ஒரு *புத்தக வாசிப்புதொடர்பான YouTube channel தொடங்கலாம் என. எனக்கு உங்களிடமிருந்து வார்த்தைகளும் வழிகாட்டலும் வேண்டும் ஜெ

வணக்கங்களுடன்

விஜயலக்ஷ்மி 

சென்னை.

அன்புள்ள விஜயலட்சுமி

வாசிப்பது என்பது ஒரு தொடக்கம். வாசிப்பு ஏதேனும் ஒரு செயலாக ஆகுமென்றால் அது அடுத்த கட்டம்.

யூடியூப் சானல் தொடங்குவது நல்ல விஷயம். ஆனால் அது அனைவருமே இன்று செய்வதும்கூட. பலர், தொடங்கி, ஆதரவில்லை என விட்டுவிடுகிறார்கள். அது கூடுதலாகச் சோர்வை அளிக்கும்படி ஆகிவிடக்கூடாது.

யுடியூப் சானல் தொடங்குவதென்றால் அதில் வெறுமே கதைகளை வாசிப்பது, கதைகளை சொல்வது என்றில்லாமல் புதியதாக ஏதேனும் செய்து பார்க்கலாம். 

உதாரணமாக

. கதைகளை பலர் சேர்ந்து காணொளி போல சிறு நாடகமாக வாசிக்கலாம் 

(வேடங்கள் ஏதுமில்லாமல். அமர்ந்துகொண்டு. உணர்ச்சிகரமான நடிப்புடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை வாசிப்பது. ஒவ்வொருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்துகொண்டுகூட வாசிக்கலாம் . அவற்றை சரியாக எடிட் செய்தால் போதும். ஒளி என்னும் எங்கள் நாடகம் அப்படி வெவ்வேறு ஊர்களில் இருந்து சூம் செயலியில் நடிக்கப்பட்டது)

. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைப் பற்றிய காணொளிகளை வெளியிடலாம். இலக்கியம், ஆன்மிகம், பண்பாடு, வரலாறு சார்ந்து. ஆலயக்கலைப் பயிற்சி பெற்றவர்கள் அதைச் செய்யலாம்.

. ஒரே விஷயம் சார்ந்ததாக இல்லாமல் பலவிஷயங்கள் சார்ந்ததாக அமைத்தால் பங்கேற்பாளர்கள் பெருகுவார்கள். உதாரணமாக, பள்ளி கல்லூரிப் பாடங்களும் இணையாக இருந்தால் மாணவர்கள் வரக்கூடும். அரசுத்தேர்வுகளுக்கான விஷயங்களை ஆர்வமூட்டும்படி அமைக்கலாம். அவர்கள் வந்து பார்ப்பார்கள். பெண்களுக்கான பல்வேறு விஷயங்களை உள்ளே சேர்க்கலாம். சமையல், தையல் இருந்தால்கூட பிழையில்லை. ஏனென்றால் ஆட்கள் உள்ளே வருவதே முக்கியம், வந்தவர்களை எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு சென்று சேர்க்கலாம்.

. அரிய நேர்காணல்களைச் செய்யலாம். அதாவது எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல். நாட்டுப்புறப்பாடகர்கள், கைவினைக்கலைஞர்கள் போன்றோர். வயதான விவசாயிகள், மூத்த பெண்கள் போன்றவர்களின் அனுபவங்களையும் தொகுக்கலாம்

. நடுவே கொஞ்சம் தரமான கேளிக்கைகளையும் சேர்க்கலாம். உதாரணமாக, நல்ல பாடல்களை அவற்றின் சிறப்பைச் சொல்லி அறிமுகம் செய்வது. இசையறிந்தோர் செய்யலாம்.

இப்படி பல செயல்களை புதியதாகக் கண்டடையலாம். இதில் முடிவில்லாத கற்பனைக்கு இடமுள்ளது

இவற்றுக்கான தேவைகள் என்ன?

. ஒரே ஒருவர் நடத்துவது கடினம். இணையான உள்ளம் கொண்ட பிற பெண்களைச் சேர்த்துக்கொள்ளலாம். வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களை இதில் இணைத்துக்கொண்டால் சிறப்பாக நடத்தமுடியும். 10 பேர் இருந்தால் மிகச்சிறப்பு. அவர்கள் வெவ்வேறு ஊர்களிலும் இருக்கலாம். அவ்வப்போது சந்திக்கலாம். (நம் நண்பர்குழுக்களில் இருந்து தேவையானவர்களை சேர்த்துக்கொள்ளலாம். அனைவருமே பெண்கள் என்றால்கூட நல்லதுதான்) 

. வெவ்வேறு திறன்கொண்டவர்கள் தேவை. ஒளிப்பதிவு, ஒலிச்சேர்க்கை ஆகியவற்றைச் செய்பவர்கள் தேவை. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அவற்றை அவர்கள் பயன்படுத்தவேண்டும்.

. தேவையான அடிப்படைக் கருவிகளை வாங்கவேண்டும். நல்ல செல்போனே போதும். ஆனால் விளக்குகள், ஒலிப்பதிவுக்கருவிகள், ‘ஸ்டேண்டுகள்தேவை. 

இவ்வாறு திட்டமிட்டு, பெரியதாக செய்வதனால் விளைவு நன்றாக இருக்கும். நமக்கு கூடிச்செயல்படுவதன் மனநிறைவும் உற்சாகமும் அமையும். தனியாகவே செய்துகொண்டிருந்தால் காலப்போக்கில் சோர்வு வரக்கூடும்.

அத்துடன் எச்செயலும் நம் நிறைவுக்காகவே. அதனால் என்னென்ன விளைவுகள் வருகின்றன, எத்தனைபேர் பாராட்டுகிறார்கள் என்ற கணக்கே நமக்கு இருக்கலாகாது

வாழ்த்துக்கள்

ஜெ 

முந்தைய கட்டுரைஇந்தியத் தத்துவத்தின் தனித்தன்மைகள்
அடுத்த கட்டுரைவிவாதத்தின் அடிப்படைகள்