உள்ளுணர்வு என்பது என்ன?

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். அறிதல் முறைகளில் ஒன்றாக உள்ளுணர்வினை சொல்வீர்கள். அது ஒட்டி சில சந்தேகங்கள்.

உள்ளுணர்வு பக்குவப்பட வேண்டுமா? அல்லது தன்னளவில் அது முழுமையானதாஉள்ளுணர்வில்  உலக அனுபவத்தினை தொட்டு எடுக்கையில் ஏற்கனவே  வாழ்வில் கொண்டுள்ள பழைய பல அனுபவங்களின் தாக்கங்கள் உருவாக்கிய  சுபாவம் வழியேதான் புகுந்து வருகின்றது. மனித சுபாவத்தில் உள்ள bias இயல்பானது. அது அது நிறைய பேருக்கு மிக சிறிய வட்டத்தில் இறுக்க கூடியது. அதனால் அதன் வழியே வரும் உள்ளுணர்வினை நம்ப முடியுமா

மாறாக நீங்கள் சொல்லும் மற்ற இரு அறிதல் முறைகளான லாஜிக், கற்பனை இரண்டும் மூளை உழைப்பை கோருபவை, உள்ளுணர்வில் தெறிப்பாக மட்டும் இருப்பதில்லை. கால அவகாசம் எடுத்து உழைத்து சொல்லை நெய்து உருவாகி வருபவை. அதனால்தான் அவை பயிற்சி எடுத்து பழக்கி கொள்ள கூடிய அறிதல் முறையாக தெரிகின்றது. மாறாக உள்ளுணர்வினை எடுத்த எடுப்பில்  சாதாரணமாக  உள்ள ஒருவர் எவ்வளவு தூரம் நம்ப வேண்டும்?

இது சரியான கேள்வியா என்று தெரியவில்லை. இதை கேட்பதும் சரியா என்றும் தெரியவில்லை. ஆசிரியரிடம் கேட்போமே என்றுதான் கேட்கின்றேன்

அன்புடன் 

நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளுணர்வு பற்றி பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் உள்ளுணர்வு பற்றி ஓர் அரிய அனுபவ வரையறையைச் சொன்னார்.

உலகியல் சார்ந்த விஷயங்களில் 99 சதவீதம் உள்ளுணர்வு பொய்யே என்றார் என்.எம். ஏனென்றால் அதில் நம் நம்பிக்கைகளும், ஆசைகளும், ஐயங்களும், அச்சங்களும் உள்ளன. நாம் அவற்றைச் சார்ந்தே நம் உள்ளுணர்வை அடைவோம். அல்லது அவற்றை உள்ளுணர்வாக மயங்குவோம். ஆகவே முடிந்தவரை புறவயமான, அறிவியல்சார்ந்த ஆய்வுகளும் முடிவுகளுமே உலகியலுக்கு உகந்தவை. எந்த தொழில் சார்ந்த முடிவையும் எப்போதும் அப்படி புறவயமான கள ஆய்வின் வழியாகவே எடுக்கிறேன், உள்ளுணர்வை நம்புவதில்லை என்றார்.

ஆனால் அவ்வாறு கள ஆய்வு செய்து தொடங்கிய தொழில்கள் சோயா, கல்மணி தயாரித்தல் . இரண்டுமே தோல்வி. ஆனால் தொடங்கும்போதே மெல்லிய உள்ளுணர்வும் இருந்தது, சரியாக வராது என்று. ஆகவே இரண்டிலும் மிகையான பாய்ச்சல் செய்யவில்லை. கொஞ்சம் கவனமாக இருந்தார். ஆகவே பெரிய இழப்புகளின்றி மீண்டார். உள்ளுணர்வின் உலகியல் இடம் இதுவே என்றார் என்.எம்.

உள்ளுணர்வு என்பது முற்றிலும் அகவயமான சில விஷயங்களிலேயே அறிதல்முறையாகச் செயல்படமுடியும். ஆன்மிகம், கலை ஆகிய தளங்களில். உலகியலில் அதை நம்புவோர் தங்கள் உணர்ச்சிகளையே உள்ளுணர்வு என ஏற்கிறார்கள், அது பெரும் பிழை, வீழ்ச்சியைக் கொண்டுவந்துவிடக்கூடும்.

உலகியலில் நம் சொந்த பார்வையே பக்கம்சார்ந்ததுதான் – நமக்குச் சாதகமானது அது. ஆகவேதான் என்.எம் போன்றவர்கள் வெளியே இருந்து பார்வையை தேடுகிறார்கள். நிபுணர்கள் மற்றும் தோழர்களின் பார்வைகள். தங்களையே கொஞ்சம் விலகி நின்று அன்னியர் போல பார்க்கிறார்கள்.

உள்ளம் என்னும் கண்ணாடி தூய்மையாக இருந்தால் மட்டுமே அதில் உள்ளுணர்வு வெளிப்படும். நம் உணர்வுகள் அதில் படிந்த பிசுக்கும் சாயமும். அவற்றினூடாக நாம் உள்ளுணர்வை பார்க்கமுடியாது. ஆகவேதான் கண்ணாடியை தூய்மைப்படுத்தும் பயிற்சிகள் தேவையாகின்றன. அவற்றையே நாம் தியானம் என்கிறோம். தூய உள்ளம் – தூய பார்வை என்பதே தியானத்தின் இலக்காகும். முறையான பயிற்சிகள் வழியாக மட்டுமே தியானத்தை செய்யமுடியும்.

தேர்ந்த சோதிடர்களும் உள்ளுணர்வை நம்புபவர்கள். சோதிடம் என்பது ஒரு கணக்கு- ஆனால் அந்தக் கணக்கைக்கொண்டு எதையும் அறியமுடியாது. அதைக்கொண்டு உள்ளத்தை மீட்டவேண்டும். ஒரு கட்டத்தில் உள்ளுணர்வு வெளிப்படும், பிறர் அறியாத உண்மைகள் தெரியவரும். ஆனால் அதை தனக்கே செய்துகொள்ள முடியாது- ஏனென்றால் சொந்த உணர்வுகள் உள்ளுணர்வை தடுத்து திரிபடையச் செய்துவிடும்.

கலைக்கும் இலக்கியத்துக்கும் உள்ளுணர்வை வெளிக்கொணரும் சில வழிகள் உண்டு. அந்த வழிகளை அறிந்தவனே கலைஞன். கலையின் வடிவம் சார்ந்த பயிற்சிகள் உள்ளுணர்வு வெளிப்படுவதற்குரியவைதான். உள்ளுணர்வு வெளிப்பட்ட தருணங்களை அவன் அறிவான். அக்கலையிலக்கியத்தின் நுண்ரசிகர்களும் அறிவார்கள். அந்த உள்ளுணர்வின் வெளிப்பாடே கலையை ஒரு தொழில்நுட்பப்பயிற்சி என்னும் நிலையில் இருந்து மானுட ஆழத்தின் தன்னியல்பான வெளிப்பாடு என்னும் நிலை நோக்கிச் செலுத்துகிறது.

ஜெ

 

முந்தைய கட்டுரைஊக்கத்தின் செயல்திட்டம்
அடுத்த கட்டுரைஎல்லா தத்துவங்களையும் கற்கலாமா?