தேநீர் குடிக்கும் பயிற்சி

அன்புள்ள ஜெ,

ஆன்மிகம் என்பது ஒருவரின் தன்னியல்பான நிலை அல்லவா? ஒருவர் ஒரு பூவிரிவதைக் கண்டு மனம் மலர்கிறார். அது ஆன்மிகம். அப்படி ஓர் உன்னதநிலையையும் அவர் இயல்பாகவே அடைய முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லும் ஆன்மிகம் அதுவே. அதற்கு பயிற்சிகள் தேவையா? பயிற்சி என்பது அந்த தன்னியல்பான அனுபவத்தைச் செயற்கையாக ஆக்கிவிடாதா? இன்னொருவரின் அணுகுமுறையை நம் மீது திணித்துவிடாதா?

கிருஷ்ணா பிரேம்

அன்புள்ள பிரேம்

தேநீர் குடிப்பது என்பது தன்னியல்பான செயல்; சுவைப்பதற்கு எந்த மனிதனுக்கும் பயிற்சி தேவையில்லை. சரியா? ஆனால் ஜப்பானிய தேநீர் விருந்து என்பது மிக விரிவான ஒரு செயல். முறையான பயிற்சி தேவைப்படும் ஒன்று.

அந்தப்பயிற்சி இல்லாமல் ஜப்பானியத் தேநீரை குடித்துப் பாருங்கள். வெறும் வெந்நீர். அந்தப் பயிற்சி அதை இனிதாக ஆக்குவதை ஒரே நாளில் சிலமணிநேரப் பயிற்சியில் உணரலாம். என் அனுபவம்.

ஆன்மிகம் தன்னியல்பானதே. ஆனால் ஏன் அத்தனைபேரும் இயல்பாக ஆன்மிகவாதிகளாக இல்லை? ஏனென்றால் ஆன்மிகத்துக்கான தடைகள் மிகப்பெரியவை. ஆன்மிகப்பயிற்சி என்பது ஒருவரின் அகப்பயணத்தை கற்பிப்பது அல்ல. அதை அவரேதான் கண்டடையவேண்டும். ஆனால் அவருக்கு ஆன்மிகத்தில் உருவாகும் தடைகள் ஆன்மிகத்தில் ஈடுபடும் அனைவரும் வெவ்வேறுவகையில் சந்திப்பவை. அந்த தடைகளை வெல்வது எப்படி என முன்னர் சென்றவர்கள் கற்பிக்கலாம். பயிற்சிகள் அதற்காகவே.

மரபான குரு-சீட உறவுகளிலேயே கூட மெய்மையை குரு கற்பிப்பதில்லை. அது உனக்கான மலர் என்றே சொல்லிவிடுவார்கள். செல்லும்பாதையில் மட்டுமே குருவின் வழிகாட்டுதல் அமையும். அங்கே குரு இல்லையேல் நாம் வழிதவறி நாமே உருவாக்கிக்கொள்ளும் சுழற்பாதைகளில் அலைவோம்.

இப்போது நீங்கள் அலைவதுபோல

ஜெயமோகன்

 

 

 

முந்தைய கட்டுரைஅவநம்பிக்கைவாதியின் பிரார்த்தனை
அடுத்த கட்டுரைதீர்த்தங்காரர்களின் கருணை