முழுமையறிவு அனைத்துக் காணொளிகளும்
அன்புள்ள ஜெ
முழுமையறிவு காணொளிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அவை மிகச்சுருக்கமாக இருப்பது தொடக்கத்தில் வசதியாக இருந்தது. ஆனால் பின்னர் இன்னும் கொஞ்சம் இருக்கலாமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. பல தலைப்புகளில் காணொளிகள். அவை மிகத்தீவிரமான அனுபவங்களை அளிப்பவையாக உள்ளன. அவற்றின் உள்ளடக்கம் மட்டும் அல்ல அவற்றை நீங்கள் உணர்ச்சிகரமாகச் சொல்லும் முறையும் எனக்கு முக்கியமானது. நீங்கள் அவற்றை அவ்வப்போது தோன்றியபடி பேசுகிறீர்கள். எந்த உரையிலும் தயாரிப்பு தெரியவில்லை. எந்த உரையும் எழுதிவைத்துப் படிப்பதுபோல் இல்லை. ஓர் ஆசிரியரின் வகுப்பில் அமர்ந்திருக்கும் அரிய உணர்வையே அடைந்தேன்.
பெரும்பாலான காணொளிகள் மிக அடிப்படையான ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு அதற்கு ஆணித்தரமான பதிலைச் சொல்பவையாக இருந்தன. சுருக்கமாகவும் தீர்க்கமாகவும் அந்தப்பதில்கள் அமைந்திருந்தன. என் நண்பர்களில் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பலர் உண்டு அவர்களுக்கெல்லாம் இந்தக் கேள்விபதில்களை நான் அனுப்பிவைப்பேன். அவர்கள் இந்தவகையான கேள்விகளை என்னிடம் கேட்டவர்கள். பத்து நிமிடம்தான், கேட்டுப்பாருங்கள் என்று சொல்வேன். அவர்களில் பலர் கேட்பதில்லை. ஆனால் சிலர் கேட்கிறார்கள். கேட்டுவிட்டு பேசுகிறார்கள். நீண்ட கட்டுரைகள் தேவைதான். ஆனால் இந்தவகையான சுருக்கமான கேள்விபதில்களுக்கும் பெரிய இடம் உண்டு என நினைக்கிறேன்.
நான் தத்துவத்தின் தேவை என்ன, அதை எப்படி பயிலவேண்டும் என்றெல்லாம் பல சந்தேகங்களுடன் இருந்தேன். அதற்கான பதில்கள் மிக அற்புதமாக உங்களால் சொல்லப்பட்டுள்ளன. இந்திய தத்துவ மரபின் ஒட்டுமொத்தச் சித்திரமே ஒரு காணொளியில் சுருக்கமாக வந்துள்ளது. தீர்க்கமாகக் கற்றவர்களால் மட்டும்தான் அப்படி நினைவில் இருந்தே சரசரவென ஒரு சித்திரத்தை அளிக்கமுடியும்.
காணொளிகளுக்கு நன்றி
‘சித்திரம்’ கணேஷ்
பிகு: நான் இதுவரை வகுப்புகளில் கலந்துகொண்டதில்லை. அவ்வளவுதூரம் வந்தாகவேண்டுமா, ஏன் காணொளியில் வகுப்புகளை நடத்தக்கூடாது?
அன்புள்ள கணேஷ்
இந்தக் காணொளிகள் வகுப்புகள் அல்ல. வகுப்புகளுக்கான அழைப்புகள் மட்டும்தான் . இத்தனை விஷயங்கள் உள்ளன, வந்து கற்றுக்கொள்ளுங்கள் என பொதுவாசகர்களை அழைக்கும் முயற்சிகள் இவை.
வகுப்புகளால் மட்டுமே தத்துவத்தை பயிற்றுவிக்கமுடியும். ஆசிரியர், சூழல் இரண்டும் இல்லாமல் தத்துவத்தைக் கற்பிக்கமுடியாது.
ஜெ