அன்புள்ள ஆசிரியர் ஜெ அவர்களுக்கு,
பல்லாண்டுகளுக்கு முன்பு எனக்கும் என் தந்தைக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடல் இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. நான் சொன்னேன், ‘ இந்தச் சிற்பங்களைப் பாக்கறதெல்லாம் ரொம்ப bore பா“. “அப்படியெல்லாம் இல்ல டா. அதுக்குன்னு ஒரு ரசனையை வளர்த்துக்கணும். அது வந்துடுத்துன்னா நீ இப்படி பேச மாட்டே” என்று அப்பா பதில் சொன்னார். அன்று நான் சொன்னதை எண்ணி இன்று வெட்குகிறேன். ஆனால், அந்த வெட்கத்தைக் கடந்து பெருமகிழ்ச்சியும் தன்னிறைவும் கொள்கிறேன். அதற்குக் காரணம், நித்யவனத்தில் நடந்த ஆலயக்கலை அறிமுக வகுப்பு.
முதல் வகுப்புக்கான அறிவிப்பு வந்த நாள் தொட்டு எப்படியேனும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று துடிதுடித்தேன். இயலவில்லை. பல தடைகளைத் தாண்டி நவம்பர் 8,9,10 ஆகிய தேதிகளில் நடந்த வகுப்பில் கலந்துகொண்டேன்.
ஆசிரியர் திரு.ஜெயக்குமார் பரத்வாஜ் அவர்கள் நிதானமாகவும் தெளிவாகவும் அதே சமயம் எளிதில் புரிந்துகொள்ளும் படியும் பாடம் நடத்தினார். உதாரணத்திற்கு “கோபாலகிருஷ்ணன், கோவர்த்தன மலையைத் தூக்கி நிற்கும் கிருஷ்ணன் ஆகியோர் ஸ்வஸ்திகாசனத்தில் நிற்பது போலவே உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒருவரும் அடிக்கடி அந்த ஸ்தானகத்தில் நிற்பார். அவர் யார்?” என்று கேட்டார். யாரோ ஒரு மாணாக்கர் ரஜினிகாந்த் என்றவுடன் பளிச்சென்று சிந்தையில் ஒரு மின்னல் வெட்டியது. “ஸ்வஸ்திகாசனம்” என்ற வார்த்தையை திரு.ஜெயக்குமார் கல்வெட்டாய் நெஞ்சில் எழுதியது போல் உணர்ந்தேன்.
இரண்டாம் நாள் வகுப்பில் சிற்பங்களைப் பற்றி அவர் எடுத்த வகுப்பு எனக்கொரு மிகப்பெரிய திறப்பு.
பல்லவர் காலத்து குடைவரைக் கோவில்களைப் பற்றி அவர் விளக்கிக் கொண்டிருக்கும் போது “ஒரு பாறையைக் குடைந்து அதற்குள்ளே தூண்கள், கோஷ்டங்கள், சிற்பங்கள் என்று ஒரு கோவிலையே உருவாக்க முடியும் என்று யாரோ ஒருவனுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கிறேதே. அது எப்பேர்ப்பட்ட சிந்தனை. பாறையைத் தன் அகக்கண்ணில் பருவடிவப் பரம்பொருளாகக் கண்ட அவன் எப்பேர்பட்ட மகாகலைஞன். அவனை இதுகாறும் மனதார வணங்காமல் போனோமே ” என்று நெஞ்சம் உருகத் தொடங்கியது. இனி ஒவ்வொரு சிற்பத்தை ரசிக்கும் தோறும் அதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
“கவிதை உயிர்த்தெழும் அற்புத வடிவங்கள் தாம் சிற்பங்கள்“, “A statue is an embodiment of universal truth”, “ஒரு நல்ல கவிதை குறைவாகச் சொல்லணும். நிறைய உணர்த்தணும் என்று ஜெ சொல்வார். அது போலத்தான் ஒரு நல்ல சிற்பமும்” என்றெல்லாம் திரு.ஜெயக்குமார் சொல்லிய போது அவர் அங்கே ஆசிரியராக எனக்குத் தோன்றவில்லை. என்னைக் குடைந்து எனக்குள் இருந்த பயனில்லாதவற்றை வெளியே அகற்றி என்னைப் புதிதாகச் செதுக்கும் சிற்பி போலவே தோன்றினார். காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள ஓரிரு சிற்பங்களை எடுத்துக்காட்டி எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்த போது கணந்தோறும் பிரமித்துக்கொண்டே இருந்தேன். கலை என்னும் நூலில் சிற்பம், கவிதை, நாட்டியம், ஆன்மிகம், தத்துவம் ஆகிய முத்துகளை அவர் கோத்த போது அதுவரை காணாத கற்பனைச்சிறகுகள் என்னுள் முளைத்தன. வகுப்பு முடித்து எழுந்த போது கல்லிலே கலைவண்ணம் கண்டார் என்ற பழைய பாடல் புதிய அர்த்தம் பெற்று என் நெஞ்சுக்குள்ளே மினுங்கியது.
வழக்கம் போல் வகுப்பு இடைவேளையின் போது நடந்த சுவையான உரையாடல்கள், கேள்வி பதில்கள், பாட்டுக் கச்சேரிகள், பகடிகள், நல்ல உணவு, இனிய சூழல் இவையனைத்தும் கற்றல் அனுபவத்தை இன்னும் தித்திக்க வைத்தது.
இவையனைத்திற்கும் வழி சமைத்துக் கொடுத்த உங்களுக்கும் உங்களது ஆசிரியர் திரு. நித்ய சைதன்ய யதி அவர்களுக்கும் என் நன்றிகளும் வணக்கங்களும்.
இனி சிற்பங்களைக் கற்கள் என்று சொல்லமாட்டேன். ஒரு கவிஞன் கல்லில் எழுதிய கவிதைச்சொற்கள் என்றே சொல்லுவேன்.
நன்றி,
நிரஞ்சன் பாரதி