விவிலிய தரிசனம்

அன்புள்ள ஜெ,

ஒருமுறை, கிருத்தவ நண்பன் ஒருவனின் வீட்டிற்கு சென்று இருந்தேன். நண்பனின் அப்பா ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் குழப்பத்தோடு அமர்ந்திருந்தார். அவர் என்னை அங்கிருந்த பைபிளை எடுத்து, தோராயமாக ஒரு பக்கத்தில் விரல் வைத்துப் பிரித்து, ஒரு வசனத்தை வாசிக்கச் சொன்னார். அதன்படி நான் வாசித்த வரிகள், இப்படி பொருள் படும்படியாக இருந்தது, “இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று, இப்பொழுதுதான் உங்களுக்கு தெரிய வருகிறது“. அதைக்கேட்டவுடன், அவர் முகத்தில் குழப்பம் தெளிந்து புன்னகை மலர்ந்தது. பிறகுதான் தெரிந்தது, நண்பனின் தங்கைக்கு வந்த கல்யாண சம்பந்தம் குறித்து முடிவு எடுக்கவே என்னை வாசிக்க சொன்னார் என்பது. அந்த திருமணம் இனிதே நடந்தது. எனக்கு பைபிள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் ஏற்பட்டது. ஆனால் என்னால் வாசிக்க இயலவில்லைஅதன் மொழிக் கட்டுமானம் எனக்குப் பிடிபடவில்லை

நான் பைபிள் வாசிப்பு அறிமுக வகுப்பிற்காக வெள்ளிமலையை நெருங்கியபோது இருள் சூழ்ந்து பாதை ஆங்காங்கே கரடுமுரடாக இருந்தது. பைபிளை அணுகும் என் மனநிலையும் அவ்வாறே இருந்தது.

வகுப்பில் கற்றதும் பெற்றதும்,

1. பழய ஏற்பாட்டின் காலம் தொடங்கி அந்த நிலப்பரப்பு, வரலாற்றுப் பின்னணி , சமகால இலக்கியங்கள், ஆவணவியல் கருதுகோள் என அனைத்தையும் தொட்டுக்காட்டி பைபிளை புரிந்துகொள்ள முதலில் சரியான அடித்தளம் அமைத்துக்கொடுத்தார் ஆசிரியர் அலெக்ஸ்

2. பைபிளை இறையியலுக்காக மட்டுமல்லாமல் இலக்கியத் தன்மைக்காகவும் வாசிக்கலாம் என்பதை உணர முடிந்தது

3. நேரடியாகபுதிய ஏற்பாடுபடித்தால் என்ன? என எனக்குத் தோன்றியதுண்டு, ஆனால், புதிய ஏற்பாடு என்பது, ஒரு பூத்துக்குலுங்கும் மரம் என்றால், பழைய ஏற்பாடு அதன் வேர்கள் என்பதை வகுப்பில் உணர முடிந்தது.   ஒரு மரத்தின் மிக அழகான மலர்கள் அதன் வேர்களே ! என எங்கோ படித்தது ஞாபகம் வந்தது

4. பழைய ஏற்பாட்டில் தொட்டுக்காட்டிய கதைகளும் வசனங்களும் புதிய ஏற்பாட்டில் எவ்வாறு பொருந்திப்போகிறது என்றும் விரிந்துச் செல்கிறது என்றும் ஆசிரியர் விளக்கிய விதம் சிறப்பு.

5. வகுப்பில் இருந்த அனைவருக்கும், தான் கூறும் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதில் ஆசிரியர் காட்டிய முனைப்பில் தெரிந்தது, அவரின் தலைமைப்பண்பு

6. இரவு நடந்த விவாதங்கள், அறுசுவை உணவிற்குப்பிறகு கிடைத்த ஏழாவது சுவையாக அமைந்தது

7. வகுப்பில் சொல்லப்பட்ட கதைகள், வாசித்த வசனங்கள் மற்றும் சங்கீதங்கள் என பலவும்  என்னுள் ஏற்படுத்திய அசைவை  உணர முடிந்தது. அதிலும் அன்பு குறித்த அந்த வரிகள் (1 கொரிந்தியர் அதிகாரம் 13) என்னுள் ஏற்படுத்திய உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை. பைபிளை வாசிக்க இயலாது என சொல்பவர்கள் குறைந்தபட்சம் இந்த வரிகளையாவது படிக்க வேண்டும் அதுவே பைபிளின் சாரம் என நினைக்கிறேன்.

வகுப்புகள் முடிந்து வெள்ளிமலையை விட்டு கிளம்பியபோது வெளிச்சம் நிறைந்து இருந்தது, புதிய ரோடு போடப்பட்டு இருந்தது. பைபிளை அணுகும் எனது மனநிலையும் அவ்வாறே மாறி இருந்தது. இந்த மனநிலையை எனக்கு தந்தருளிய அலெக்ஸ் சிரில் அவர்களுக்கும், ‘முழுமையறிவுசார்ந்த அனைவருக்கும்காரணகர்த்தாவாகிய தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்…! 

என்றென்றும் அன்புடன்,

நடராஜன் பா 

பாண்டிச்சேரி

முந்தைய கட்டுரைமதமும் ஞானமும்