அன்புள்ள ஜெ
யோக வகுப்புகள் பற்றிய அறிமுகம் கண்டேன். நான் யோகப்பயிற்சியை சென்ற எட்டு ஆண்டுகளாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த யோகப்பயிற்சியில் கலந்துகொண்டால் என்ன என்னும் எண்ணம் உள்ளது. யோகப்பயிற்சிக்காக அல்ல. அங்கே கூடும் நண்பர்களைச் சந்திப்பதற்காக என்று சொல்லலாம். யோகப்பயிற்சிகளை கூட்டாகச் செய்வதென்பது மிகுந்த உற்சாகத்தையும் பயனையும் அளிப்பது என நினைக்கிறேன்.
தெய்வநாயகம். எம்.ஆர்.
அன்புள்ள தெய்வநாயகம்,
ஏற்கனவே யோகப்பயிற்சிகளைச் செய்து வருபவர்கள், இந்த யோகப்பயிற்சி வகுப்புகளிலேயே முன்பு கலந்துகொண்டவர்கள் இந்த வகுப்புகளுக்கு மீண்டும் வருவது மிக அவசியமானது, உதவியானது என்பதே என் எண்ணம்.
ஏனென்றால்
1. இவை ஒருவகையான கூட்டுநிகழ்வுகள். உங்களைப்போன்ற எண்ணமும் மனநிலையும் கொண்டவர்களைச் சந்திக்கிறீர்கள். அவர்களுடன் இருக்கிறீர்கள். இயற்கை சூழ்ந்த ஓர் இடத்தில் மூன்றுநாட்கள். அது அளிக்கும் விடுதலையும் நிறைவும் மிக முக்கியமானவை. ஒரு விடுமுறை என கொண்டால்கூட இந்தச் செலவில் இப்படி ஒரு விடுமுறையை இன்று தமிழகத்தில் கொண்டாடமுடியாது என்பதே உண்மை.
2. யோகப்பயிற்சிகளை நாம் தொடர்ச்சியாகச் செய்வதில்லை. செய்து நிறுத்திவிடுவோம். இந்தவகையான கூட்டான பயிற்சிகள் நம்மை தொடர்ச்சியாக யோகம் செய்யவைக்கும். நின்றுவிட்டிருந்தால் மீண்டும் தொடங்குவோம். அப்படி நின்றுவிட்ட பயிற்சிகளை பலமுறை திரும்ப தொடங்குபவர்கள் உண்டு. எப்படி எந்த வகையில் திரும்பத் தொடங்கினாலும் நல்லதுதான். அந்தவகையில் பயனளிப்பதுதான்.
3. பிற யோகப்பயிற்சிகளில் யோகப்பயிற்சிகளே கற்பிக்கப்படும். யோகப்பயிற்சிகளின் தத்துவப்பின்புலம், அவற்றின் உடல்நிலைப்பின்புலம் அறிவார்ந்த முறையில் விரிவாகக் கற்பிக்கப்படுவதில்லை. இங்கே அவை முறையான பின்புலத்துடன் கற்பிக்கப்படுகின்றன. இவற்றைக் கற்பிப்பவர் அதற்கான நீண்டகாலப் பயிற்சியும், ஆசிரிய மரபும் கொண்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்.
ஜெ