சைவம்- மெய்ஞானம்- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு

நாங்கள் பாடத்திட்டத்தை முன்வைக்கவில்லை, ஆசிரியரை முன்நிறுத்திகிறோம்என காணொளி ஒன்றில் நீங்கள் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய பல ஆசிரியர்களை நீங்கள் தேடித்தேடி சந்தித்து அவர்களின் வாழ்நாள் முழுவதுமான உறவை உருவாக்கியதை பல முறை குறிப்பிட்டுள்ளீர்கள். இன்று பல ஆசிரியர்களை எங்கள் முன் நிறுத்துகிறீர்கள். மிக அரிய வாய்ப்பு. இதை தவறவிடுவதே குற்றம் என நினைக்கிறேன். இந்த வகுப்புகளில் மூலம் எனக்கு கிடைத்த மற்றொரு ஆசிரியர் சாந்திகுமார சுவாமிகள்.

சுவாமிகள் வகுப்பை நேரடியாக அபிராமி அந்தாதியின் பாடல் வழியாகபேரறிவுசிற்றறிவுவேறுபாட்டில் துவங்கியதே ஒரு உச்சம். பிறகு தத்துவம், philosophy என்ற சொற்களில் இருந்து மெய்கண்டார் அவர்களின் பெயருக்கு ஒரு கோட்டுச்சித்திரத்தை அளித்தது மற்றொரு உச்சம். இரண்டாம் நாள் மாலை வரை சைவசித்தாந்தத்தின் அடிப்படைகளும், ஏனைய தத்துவ மற்றும் மத பிரிவுகள் குறித்த அறிமுகத்தையும் வகுப்பெடுத்தார். காரண காரியம், தத்துவ தரிசன ஆராய்ச்சி, சர்வதர்சன சங்க்ரகம், தமிழ்சம்ஸ்க்ருதம், ஆகமம், வேதம், சிவம், ருத்ரன், அட்டமூர்த்தங்கள், உபநிஷதம் என சைவ சித்தாந்தத்திற்கான அடிப்படைகளை விளக்கிச்சென்றார். இதில் தற்போது பொதுச்சூழலில் பேசப்படும் தவறுகளை களைந்து சித்தாந்தத்தின் அடிப்படைகளை சரியாக புரிந்துகொள்ள முக்கியமானவை

சுவாமியின் வகுப்பில் அறிந்த மற்றொன்று சைவ சித்தாந்தத்திற்கு தமிழ் இலக்கணத்திற்குமான தொடர்பு. பல தத்துவ சொற்களும் கருத்துக்களும் எவ்வாறு காப்பியங்களில் உள்ளன என்பது மற்றொரு அறிதல் – Reality என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் மெய்மை, மெய் அல்லது உண்மை. தத்துவம் என்பதற்கு மெய்ப்பொருள் அல்லது செம்பொருள். ஒரு மொழிபெயர்ப்பாளராக இது எனக்கு மிகமுக்கியமான அறிதல். மாரன்குமாரன், சார்வாகன் போன்ற பல சொற்களுக்கு சுவாமி அளித்த விளக்கங்கள் நமது புரிதலை மேம்படுத்துபவை.  

இவற்றையெல்லம் தாண்டி எனக்கு இந்த வகுப்பு மிக முக்கியமாக தோன்றுவதற்கு காரணம் மூன்று நாட்களும் சுவாமி அவர்களுடன் எனக்கு நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல்கள். தனிப்பேச்சில் தான் அவரின் நிஜ புலமையையும் வாசிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. சைவம் சார்ந்து எனக்கு இருந்த பல கேள்விகளுக்கு தெளிவான விடைகளை அளித்தார். முதல் நாள் இரவு அரைமணி நேரம் மட்டும் பேசலாம் என அனுமதி வாங்கி நண்பர்கள் சென்றோம். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் உரையாடி நண்பர்களில் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இன்னொரு உரையாடலில் கிரிதரன் எழுதிய காற்றோவித்தை குறிப்பிட்டு பேசினார். இனி நான் எழுதவிருக்கும் சில திட்டங்கள் குறித்து சுவாமி அவர்களிடம் பகிர்ந்துகொண்டு அதிலும் ஐயங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டேன். சிலவற்றிற்கு வழிகாட்டுவதாக சொல்லி தனது எண்ணை வழங்கியுள்ளார். நிச்சயம் இது இனி வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு ஆசிரியமாண உறவாக இருக்கும். இதற்கு வழியமைத்துகொடுத்த முழுமை அறிவுக்கு நன்றி

தாமரைக்கண்ணன் அவிநாசி.

முந்தைய கட்டுரைகார்ல் பாப்பர், கடிதம்
அடுத்த கட்டுரைஆயுர்வேத அறிமுக வகுப்புகள் மீண்டும்…