தத்துவமுகாம்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்களுடைய முழுமையறிவு குழு அறிவிக்கும் வகுப்புகளையும் அதை ஒட்டி நீங்கள் விவரித்து வெளியிடும் ஒளிப்பதிவுகளையும் வெகு நாட்களாக கவனித்து பின் தொடர்ந்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் நடந்த ஆயுர்வேத வகுப்புகளில் கலந்து கொண்டதன் மூலம் முற்றிலும் புதியதோர் பரிமாணத்தில் என்னால் எல்லாவற்றையும் காணமுடிந்தது. நான் உண்ணும் உணவு முதல் அது தொடங்கி, நம்மை பாதிக்கும் ஜனநாயகம் வரை அது நீண்டது.

நித்திய வனத்தில் இருந்து நான் விடைபெற்று என் வீட்டை நோக்கி பயணிக்கும் போது தான் பல சிந்தனைகள் எனக்குள் தோன்றின. நான் யோசித்து கேள்விக்குள்ளாக்கி வைத்திருக்கும் பல மன மாதிரிகளை ஆயுர்வேத வகுப்புகள் தொட்டு, சில இடத்தில் பதில் அளித்து சென்றது. நீங்கள் சொல்லும் அறிவு இயக்கம் தமிழ்நாட்டில் நித்திய வனத்தில் தான் நிகழ்கிறது என்று உணர்ந்தேன். அங்கு நடக்கும் உரையாடல்களும் கருத்து மோதல்களும் அதிலிருந்து அடையும் புரிதல்களும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. இப்படியான விவாதங்களும் கருத்து பகிர்வுகளும் என்னுடைய அன்றாட வாழ்க்கை சூழலில் அமைவது மிகவும் அரிது. நானாக முன்னெடுத்து அவற்றை பேசினாலும் எளிதாக அதை திசைமாற்றி சினிமாவிற்கும், சமூக வலைத்தளத்தில் நிகழும் அற்பத்தனங்களுக்கும் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் அறிவுபூர்வமான உரையாடல்களையும் சிந்திக்கதக்க கருத்துகளையும் அங்கு எளிதாக காண முடிந்தது.

அப்படி நடந்த சில உரையாடல்களில் நான் கவனித்தது அல்லது என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது நீங்கள் எடுக்கும் தத்துவ வகுப்பை சார்ந்ததாக இருந்தது. மிக சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெ எப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வார் என்பது தான்.

உங்களுடைய படைப்புகளை படித்து இருக்கிறேன். மிகவும் பிடித்தவையும் கூட. மிக நெருக்கமானதாக உணர்ந்திருக்கிறேன். அதே சமயத்தில் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் வெகுவாக என்னால் புரிந்து கொள்ளவும் முடிகிறது. எனவே என்னுடைய கவனம் முழுக்க தத்துவ வகுப்பின் மீது திரும்பியது. நான் நித்திய வனத்தில் உள்ளவர்களிடம் ஆயுர்வேத வகுப்பின் சமயம் கேட்டபோது அவர்கள் வரும் ஜூன் மாதம் மீண்டும் தத்துவ வகுப்பின் முதல் நிலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்றார்கள். அதன் அறிவிப்பை வலைத்தளத்தில் எதிர்பார்த்து எல்லா தினமும் தோன்றும்போதெல்லாம் எடுத்து பார்ப்பதுண்டு.

அப்படி சில நாட்களுக்கு முன் பார்த்த போது தான் உணர்ந்தேன், தத்துவ வகுப்பு ஐந்தாம் நிலைக்கான அறிவிப்பு தான் வந்திருக்கிறது. இதே போல நான்காவது நிலைக்கான அறிவிப்பு வந்த போதும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் இந்த முறை கடந்து போகவோ, காத்திருக்கவோ எனக்கு மனம் இல்லை. அதுதான் இந்த கடிதம் எழுதுவதற்கு காரணமும் கூட.

என்னுடைய உள்ளுணர்வு சொல்வதெல்லாம் எப்படியும் வர வேண்டாம் என நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்பதுதான். அது தரும் தைரியத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய கருத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல நான் என்ன சாப்பாடு கிடைக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டேன். தங்குவதற்கு வசதி எல்லாம் வேண்டியதில்லை. என்னிடத்தில் தங்கும் கூடாரம் உள்ளது. ஏற்கனவே அங்கு வந்த போதும் எனக்கு தோன்றியது, கூடாரம் அடித்து இரவின் ஓசையை நிதானமாக கேட்பதற்கு சரியான இடம் என்றுதான். எனவே அதையும் எடுத்துக் கொண்டுதான் வரவிருக்கிறேன். உங்களுடைய ஒப்புதல் வந்ததற்கு பின்.

இப்படிக்கு பேரன்புடன்,

ஹரி சரவணன்

அன்புள்ள ஹரி,

கோவை புத்தகவிழாவிலும் ஏராளமானவர்கள் என் தத்துவநூல்களை ஒரு தொகுப்பாக வாங்கியதாகச் சொன்னார்கள். அடுத்த தத்துவ முகாம் பற்றி விசாரித்ததாகவும் அறிந்தேன். முதல் தத்துவ முகாம் எப்போது நிகழும் என கேட்டார்கள்.

பலர் கோரிக்கைக்கு ஏற்ப செப்டெம்பரில் முதல் தத்துவ முகாமை மீண்டும் நடத்தலாமென நினைக்கிறேன். நீங்கள் அப்போது தொடர்பு கொள்ளலாம். முதல் தத்துவ முகாமிலிருந்து தொடர்ச்சியாக வருவதே உகந்தது.

அத்துடன் இந்த வகுப்புகளில் எந்த சமரசமும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் நடத்தவேண்டும் என உறுதியாக இருக்கிறேன். எப்படிக் கற்பிக்கப்படவேண்டுமோ அப்படி மட்டுமே தத்துவம் கற்பிக்கப்படும்.

ஜெ

 

முந்தைய கட்டுரைவேதங்களை அறிய…