நுகர்வுக்கலாச்சாரமும் பாலியலும், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் 

இன்றைய தலைமுறையின் பாலியல் மீறல்கள் பற்றிய உங்களுடைய காணொளியை பார்த்தேன் நான் ஆசிரியராக பணிபுரிபவன். இந்த விஷயத்தை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 நம்முடைய பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை பற்றி ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை நம்ப விரும்புகிறார்கள். குழந்தைகளை அவர்கள் ஒரு வகையான இளவரசிகளாகவும் தேவதைகளாகவும் வளர்க்கிறார்கள். அவர்கள் கள்ளமற்ற தேவதைகள் என்று நம்ப விரும்புகிறார்கள். இந்த குழந்தைகளும் அந்த சித்திரத்தை தங்களுடைய பெற்றோருக்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கின்றன. 20 25 வயதாகியும் கூட பெற்றோருடன் கொஞ்சுவதும் குலாவுவதும் அவருடைய வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக தந்தையுடன் அவர்கள் ஒரு மழலை குழந்தைகளின் பாவனையை மேற்கொள்கிறார்கள். ஆகவே உண்மையில் இவர்களுக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, என்ன மாற்றம் நடைபெறுகிறது என்பது பரவலாக தெரிவது இல்லை 

கல்விக்கூடங்கள் எப்போதுமே ஒரு சமூகத்தின் சராசரியை வெளிப்படுத்தக் கூடியவையாக இருக்கும். சமூகத்தின் எந்த சராசரியை வெளிப்படுத்துகின்றன என்பது முக்கியமானது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் கல்விக்கூடங்கள் இரண்டு வகையானவை. ஒன்று கிராமப்புற கல்விக்கூடங்கள் அல்லது சிறு நகரங்களில் உள்ள கல்விக்கூடங்கள். அந்த கல்விக்கூடங்களிலேயே இரண்டு வகை உண்டு. அரசுக் கல்விக்கூடங்களிலே பெரும்பாலும் கல்வி என்பது நடப்பதில்லை. அரசு கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளிலே வகுப்புகள் நடப்பதே மிக குறைவு. ஒரு கோடி ரூபாய் வரைக்கும் லஞ்சம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் அங்குள்ள ஆசிரியர்கள். ஆகவே அவர்கள் பணியாற்ற விரும்புவதில்லை. பல கல்லூரிகளில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர வகுப்புகள் கூட நடப்பதில்லை. ஒப்புக்கு ஒரு வருகைப்பதிவு செய்துவிட்டு மாணவர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள். அங்கு வரக்கூடிய மாணவர்களும் பெரும்பாலும் வெளியே ஏதாவது வேலை செய்கிறார்கள் .அல்லது பொழுது போக்குகிறார்கள். எப்படியும் பட்டம் கிடைத்துவிடும் என்பதினால் தங்களுக்கு எதுவும் கற்பித்து தரப்படுவதில்லை என்பதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் தகுதியற்ற பட்டதாரிகளாக வெளியே வருகிறோம் என்பதை பற்றி அவர்கள் அறிந்திருப்பதும் இல்லை. வெளியே வந்து வேலை தேடும் போதுதான் தங்களுடைய பட்டத்தை வைத்துக்கொண்டு எந்த வேலையும் கிடைக்காது என்பதும், தாங்கள் படிப்பற்றவர்களாகவே இந்த சமூகத்தால் கருதப்படுவோம் என்பதும், படிப்பற்றோர் செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு தெரிய வருகிறது.

 இன்னொரு வகையான கல்வி நிறுவனங்கள் தனியார் அமைப்புகளால் நடத்தப்படுபவை. கிட்டத்தட்ட கொத்தடிமைகளைப் போலவே மாணவர்களை மாணவிகளை அவை நடத்துகின்றன. அங்கு தகுதியற்ற ஆசிரியர்கள் மிகக் குறைவான சம்பளத்தை வாங்கிக்கொண்டு அடிமை போல கல்விகளை கற்பிக்கிறார்கள்ல் அவர்கள் ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப சலிப்பூட்டும் முறையில் சொல்லி மாணவர்களுடைய மண்டைக்குள் ஏற்றும் பணியை செய்து வருகிறார்கள். இங்கு உள்ள கல்வி என்பது ஒரு வகையான சலிப்பூட்டக்கூடிய பயிற்சி மட்டும்தான். சர்க்கஸ் விலங்குகளை பழக்குவது போல. இந்த மாணவர்களில் சிலர் தகுதி பெற்று நல்ல பணிகளுக்கு செல்ல முடியும் .ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த கல்வியினால் சலிப்புற்று கல்விக்கு எதிரான மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள் .எதையுமே கற்காமல் வேறு வேறு விஷயங்களை ஈடுபடுகிறார்கள். இந்த வகையான மாணவர்கள்தான் பல்வேறு வகையான திசைதிரும்பல் களுக்கு ஆளாகிறார்கள்.

 நகரத்தில் உள்ள கல்வி என்பது இன்னொரு வகையானது. இங்கே மிக உயர் குடிகள் மட்டுமே பயிலும் கல்லூரிகள் உள்ளன .இந்த கல்லூரிகளிலே எல்லா வகையான பாலியல் மீறல்களும் பல வகையான பழக்க வழக்கங்களும் தொடர்கின்றன. ஏனென்றால் பிள்ளைகளிடம் நிறைய பணத்தை கொடுத்து அவர்களை பணத்தை செலவழிக்க பழக்குகிறார்கள். சம்பாதிக்காத பணம் கையில் இருப்பதைப் போல ஒருவனை அழிக்கும் விஷம் எதுவுமே இல்லை;.ஒரு குழந்தைக்கு எந்த சம்பாதிக்கும் திறனும் இல்லை, ஆனால் இந்த உணவைத்தான் சாப்பிடுவேன், இந்த ஆடையை அணிவேன், இந்த வண்டியைத் தான் பயன்படுத்துவேன் என்று இருக்கும் என்றால் அந்த குழந்தை மிக மோசமான ஒரு உளநிலையில் இருக்கிறது என்று பொருள். அந்த வகையான குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நமது குழந்தைகளை பெரும் கடன் வாங்கி சேர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையான கல்லூரிகள்தான் இன்று நீங்கள் சொல்லக்கூடிய வகையான பெரும்பாலான பாலியல் மீறல்களுக்கான களமாக இருக்கின்றன .

இந்த வகையான கல்லூரிகளில் செல்லும் நடுத்தர குழந்தைகள் அல்லது உயர்நடுத்தர குழந்தைகள் உயர்குடி குழந்தைகளை போல நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். அதை நகல்செய்யத தொடங்குகிறார் ஆகவே ஒரு உயிர் குடி வாழ்க்கை அல்லது உயர்தர வாழ்க்கை என்று அவர்கள் நினைப்பது நுகர்வு மற்றும் பாலியல் மீறல் மட்டும்தான். நுகர்வு பாலியல் மீறலும் நீங்கள் சொல்வது போல ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் .ஆகவே இங்கே இந்த வகையான மீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன .ஒரு கட்டத்திலே உயர்குடி மக்கள் அந்த நிலையைக் கடந்து அவர்களுக்கான ஒரு உறுதியான வாழ்க்கை உருவாக்கி கொள்வார்கள்ல் ஏனெனில் அவர்களுக்கு ஒரு செல்வப் பின்புலம் இருக்கும். ஆனா உயர் நடுத்தர குழந்தைகள் இந்த வகையா கத்திசை திரும்பி போனால் அவர்களுக்கான வாழ்க்கையை அவர் உருவாக்கிக் கொள்ள முடியாமல் போகிறது.

இதையெல்லாம் அந்த பெற்றோரிடம் இருந்து சொல்லி புரிய வைக்கக்கூடிய நிலை இல்லை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்  உயர் குடி வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், அப்படி அவர்கள் உயர்குடி வாழ்க்கையிலேயே நிலை கொண்டு விடுவார்கள் என்றும் நம்புகிறார்கள் .தங்களுடைய பிள்ளைகளை மிக சவுகரியமாக வளர்ப்பது என்பது அவர்கள் மிக தகுதியான ஒரு பணக்காரராக வளர்ப்பது நினைத்துக் கொள்கிறார்கள். அம்பானியின் வாழ்க்கையை ஒரு குழந்தைக்கு நீங்கள் உருவாக்கி கொடுத்தால் அந்த குழந்தை அம்பானி ஆகாது. அம்பானியாக ஆவதற்கு ஒரு பெரிய உழைப்பும் பல்வேறு படிநிலைளான வளர்ச்சியும் தேவைப்படும். இதைத்தான் நாம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டி இருக்கிறது .இதற்கான வாய்ப்புகள் நம்முடைய சமூகத்தில் இன்றைக்கு இல்லை என்பது தான் உண்மை.

ஆர்

முந்தைய கட்டுரைகஸலும் கனிவும்- அருள் இனியன்