அன்புள்ள ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் முழுமையறிவு காணொளிகளை தவறாமல் பார்க்கிறேன். வெண்முரசு எழுதிய ஜெயமோகனுடன் உரையாடுவது கொஞ்சம் அச்சுறுத்தலானது. ஆனால் இந்த காணொளிகள் தங்களை ஒரு அக்கறையுள்ள அண்ணன் போல தோன்ற செய்கிறது. வெண்முரசு படிக்கும் பொழுது எழுகின்ற பிரமிப்பும் அதை எழுதிய மனதை சமகாலத்தவராக அணுகுவது என்பதும் என்னளவில் கடினம். இந்த காணொளிகள் உங்களின் அவதாரம் என தோன்ற வைக்கிறது. எங்களுக்காக உங்களை கொஞ்சம் எங்களின் நிலைக்கு இறங்கி வந்து பேச செய்யும் அவதாரம் என்றே நினைக்கிறேன். அதுவும் என் அறைக்கே வந்து என்னுடன் உரையாடும் அன்பும் கனிவும் கொண்ட ஒருவர் போன்றே இருக்கிறது. இந்த மின்னஞ்சலுடன் தாங்கள் எங்கள் வீட்டில் டிவி மூலம் உரையாடுவதை அனுப்பியுள்ளேன். எனது நன்றிகள். உங்களின் புத்தகம் படிக்காத என் மனைவியும் அவ்வப்போது இதில் கலந்து கொள்வது (அவர் மத்திய பிரதேஷில் பிறந்த தமிழர்; அதனால் படிக்க தெரியாது), இது பரவலாக பலருக்கு சென்று சேருகிறது, சேரும் வாய்ப்புள்ளது என தோன்றுகிறது.
ஒரு சிறு கருத்து. உங்களின் நுகர்வுக்கலாச்சாரமும் பாலியல் பிறழ்வுகளும் என்ற காணொளியில் ஹிப்பி கலாச்சாரம் நுகர்வு கலாச்சாரத்தினால் உருவானது என்றும், அது பாலியல் பிறழ்வுகளுக்கு கரணம் ஆனது, 1980 பிறகு அது மாற தொடங்கியது என்றும் சொல்லி இருந்தீர்கள். ஹிப்பி கலாச்சாரம் நுகர்வுக்கு எதிரானது என்ற கொள்கையில் இருந்தே பிறந்தது. கட்டற்ற காதல்/காமம் என்பது நுகர்விற்கும், கார்பொரேட் லட்சியங்களுக்கும் எதிரான ஒரு இயக்கமாக உருவானது. 1980 பிறகு ரீகன் வந்து பழையபடி அமெரிக்கா நுகர்வு கலாச்சாரத்திற்குள் சென்றது என்பதே இங்கு பரவலான கருத்து. ஓஷோவின் புகழும் கூட்டமும் அவர்களிடம் இருந்தே வந்தது என அறிந்திருப்பீர்கள். பீட்டில்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் என பல பிரபலங்கள் இதனால் கட்டமைக்கப்பட்டனர். உங்களுக்கு இது தெரிந்திருக்கும்; கண்ணொளியில் மாற்றாக வந்துள்ளது என நினைக்கிறேன்.
இன்னொன்றும் குறிப்பிட விரும்புகிறேன். இப்பொழுது அருந்ததி ராய் எழுதிய அவர் அம்மா பற்றிய நூல் வந்துள்ளதால், நியூ யார்க்கர், நியூ யார்க் டைம்ஸ் எல்லாவற்றிலும் அவரை இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர் என்ற முகவுரையுடன் அவர்கள் தொடங்குவது வருத்தமாக உள்ளது. அதில் ஒருவர் அருந்ததி அவரது முதல் நாவலை எழுதிய பிறகு சமூக மாற்றத்திற்கு அவரை அற்பணித்தது இந்திய மற்றும் உலக இலக்கியத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் என்று எழுதியிருந்தார். உங்களை படித்திருக்கவிட்டால் அதே மதிப்பீடை நானும் கொண்டிருப்பேன். இது அவர்களின் மத்த மதிப்பீடுகளையும் கேள்வியுற செய்கிறது. அவர்களே கட்டியமைத்து கொண்ட அரசியல் மற்றும் காலாச்சார குமிழியில் சிக்கி கொண்டுள்ளனர் என்று தோன்றுகிறது. தங்களின் புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் உங்களுக்கு உரிய இடத்தை பெற்று தரும் என்று வேண்டுகிறேன்.
உங்களை கொஞ்சமேனும் தினம் படிப்பதனால் உங்களை நினைக்காத நாளே கிடையாது. என் கனவிலும் அடிக்கடி வருபவர் நீங்கள். சில முறை ஆன்மீகமான விஷயங்களை கனவில் சொல்லி இருக்கிறீர்கள். அது வெண்முரசு படிக்கும் தாக்கமாக இருக்கலாம். உங்களுக்கு கடிதம் எழுதா விட்டாலும் என்றும் உங்களுக்கு என் அன்பும் மரியாதையும் உண்டு.
அன்புடன்,
ராஜ்
அன்புள்ள ராஜ்,
காணொளிகளின் எல்லை இது .காணொளிகளில் 20 நிமிடத்தில் ஒரு விஷயத்தை சொல்கிறோம். அதை கேட்பவர்கள் அதனூடாக கடந்து செல்கிறார்கள் ஒழிய வாசிப்பது போல ஒரு வரியையும் கூர்ந்து அறிந்து முன்சொல்வதில்லை.
எனினும் இன்று காணொளியில் ஊடாக வாசிப்புக்கூள் வரக்கூடிய ஒரு வட்டம் இருப்பதனால் தொடர்ந்து இந்த விஷயங்களை காணொளிகள் வழியாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்படி சில கருத்துக்கள் இருக்கின்றன, இவற்றை தெரிந்து கொள்வதுதான் அறிவார்ந்த செயல்பாடு என்று சிலருக்காவது இந்த காணொளிகள் வழியாக தெரியவருகிறது .குறிப்பாக இளைஞர்கள் .இதன் பயனை இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறேன் .ஆகவே இந்த காணொளிகள் .
நுகர்வு கலாச்சாரம் பற்றி உங்களுடைய கருத்தை காணொளி வடிவின் எல்லையை காட்டுகிறது காணொளியில் ஒரு சில சொற்றொடரில் நான் கடந்து போகும் அந்த விஷயம் ஒரு வரலாற்று பரிமாணம். 19 45 இல் உலகப்போருக்கு பிறகுதான் பெருமளவுக்கான உற்பத்தி, அது சார்ந்த பெருநுகர்வு, அந்த உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய பெருநிறுவநங்கள், நுகர்வோர் பரப்பக்கூடிய பெருவணிகம் ஆகியவை அமெரிக்காவில் உருவாகின்றன. ஹிப்பி கலாச்சாரம் அதற்கு எதிரானது.
ஆனால் ஹிப்பி கலாச்சாரத்தில் ஹெடோனிசம் என்று சொல்லப்படும் பொறுப்பற்ற வாழ்க்கை அல்லது தனக்கு மட்டுமே வாழ்க்கை என்னும் கருத்துகோள் ஆழ வேறொன்றியது .அந்த ஹெடோனிச கருத்துதான் மீண்டும் வளர்ச்சி அடைந்து கட்டற்ற நுகர்வு வெறியாக முன்பிருந்த பேருற்பத்தி பெருநுகர்வு ஆகியவற்றுடன் இணைந்து கொண்டது. அதுவே கட்டற்ற பாலியலாகவும் ஆகியது.
அதேபோல ஹிப்பி கலாச்சாரத்தில் இருந்து தோன்றியதுதான் நுகர்வை மறுக்கும் மாற்றுக் கலாச்சாரங்கள், இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை, நாகரீகத் துறப்பு ஆகியவை .அதைத்தான் அந்த உரையில் சொல்லியிருந்தேன்.
ஜெ