மெய்யான அரசியல், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

விஜய் அரசியல் பற்றிய உங்களுடைய காணொளி பார்த்தேன். மெய்யான அரசியல் என்று உண்டு என்பதை இன்றைய தலைமுறைக்கு நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. அதிகார அரசியல், கும்பல் அரசியல், சாதி அரசியலுக்கு அப்பால் உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசியல் ஒன்று உண்டு .அதன்வழியாக நாம் புகழையோ பண்த்தையோ அடைய முடியாமல் போகலாம். ஆனால் அவை அனைத்துக்கும் மேலான ஆத்ம திருப்தி ஒன்றை அடைய முடியும்.

உண்மையிலேயே அதிகார அரசியலில் கும்பல் அரசியலோ சாதி அரசியலோ செய்பவர்கள் ஒரு சதவீதம் பேருக்குக் கூட எந்த வகையான நன்மையும் கிடைப்பதில்லை. அவர்கள் இழப்பது தான் அதிகம். அது ஒரு லாட்டரி போலத்தான். ஒரு லட்சம் பேர் பணத்தை இழந்து ஒருவர் பணத்தை ஈட்டுவது தான் அதிகார அரசியல். ஆனால் அந்த சிலர் பணம் ஈட்டுவதை பார்த்து எஞ்சியவர்கள் பணம் கட்டுவது போலத்தான் லட்சக்கணக்கானவர்கள் அரசியலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அரசியலில் செல்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று பலர் எண்ணுகிறார்கள். அரசியலில் பல ஆண்டுகாலம் ஈடுபட்டு எதையுமே அடையாத ஏராளமான பெயரை நீங்கள் பார்க்க முடியும்.

ஆனால் மாற்று அரசியல் அல்லது சேவை அரசியல் அப்படி அல்ல. அதில் உறுதியான ஒரு வெகுமானம் உள்ளது, அது ஆத்ம திருப்தி. அத்துடன் படிப்படியாக ஒரு இடமும் புகழும் வந்தே தீரும். ஒருபோதும் திரும்பிப் பார்த்து வாழ்நாளை வீணாக்கி விட்டேன் என்று எவரும் சொல்ல நேராது. அதற்காக உடலையும் பொருளையும் இழந்து சேவை செய்ய வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். நம் வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை அந்த ஆக்க்பூர்வமான அரசியலுக்குச் செலவிட்டாலே நாம் மன நிறைவையும் வாழ்க்கையில் வெற்றியையும் அடைய முடியும்.

அதை திரும்ப திரும்ப நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் முத்து போன்றது. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எம்.பட்டாபிராமன்

 

முந்தைய கட்டுரைசெயல்களின் மதிப்பு, கடிதம்