மேலைத்தத்துவம் எப்படி மூன்றுநாளில் கற்பிக்கப்படுகிறது?

அன்புள்ள ஜெயமோகன்,

நான் சட்டம் படித்த காலத்தில் ஒரு பாடமாக மேலைத் தத்துவம் இருந்தது. அந்தக் காலத்தில் மிகக் கடினமான ஒரு பாடம் அது. ஆனால் நல்லவேளையாக அதன் மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை .ஆகவே பெரும்பாலும் அதை படிக்கவும் இல்லை.

உங்கள் தளத்தில் அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ வகுப்பு அறிவிப்பை கண்டேன். மூன்று நாட்களில் மேலே தத்துவத்தை எப்படி கற்றுக் கொள்ள முடியும் என்பது கொஞ்சம் வியப்பாகவே இருக்கிறது. ஆனால் பலர் இந்த வகுப்புகளை பற்றி வியந்து பாராட்டி எழுதிய கடிதங்களை பார்க்கையில் அது எப்படி நடக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது

மதி.திருநாவுக்கரசு

அன்புள்ள திருநாவுக்கரசு அவர்களுக்கு ,

இது மேலே தத்துவத்தின் முழுமையான வகுப்பு அல்ல. மேலைத் தத்துவம் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்கு அதை அறிமுகம் செய்யும் முயற்சி மட்டும்தான். இத்தகைய ஒரு ஆரம்ப அறிமுகம் வழியாகத்தான் எந்த ஒரு தத்துவத்திற்குள்ளும் நுழைய முடியும்.

தத்துவத்தை ஒரு பாடமாக , வரலாற்று பரிணாமமாக கற்றுக் கொடுக்கும் ஒருமுறை உண்டு .அதுதான் கல்லூரிகளில் உள்ளது. அது எப்போதுமே சலிப்புட்டுவது. யார் யார் என்னென்ன சொன்னார்கள், எந்தெந்த காலகட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் தான் அங்கே கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஆனால் சரியான தத்துவ அறிமுக வகுப்பு என்பது தத்துவப் பிரச்சினைகளை அறிமுகம் செய்து அவற்றை தத்துவம் எப்படி கையாளுகிறது என்று கற்றுக் கொடுக்கும். அந்த வகையான கல்வியில் நிகழ்வது என்னவென்றால் தங்களுடைய சொந்தத் பிரச்சினை சமூகப் பிரச்சினை மற்றும் ஆன்மீக பிரச்சனைகளுடன் உடனடியாக ஒவ்வொரு மாணவரும் அந்த தத்துவப் பிரச்சினையை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதற்கு அளிக்கப்படும் பல்வேறு விளக்கங்கள் வழியாக அவர்கள் தத்துவத்திற்குள் நுழைவார்கள். அதுதான் ஒரு சிந்திக்கும் நபர் தத்துவத்துக்குள் நுழைவதற்கான சரியான பாதை .

அந்த பாதைதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது இந்த வகுப்புகளிலேயே காண்ட் மற்றும் நீட்ஷே போன்றவர்கள் மிகத் தொடக்கநிலை மாணவர்களிடம் கூட மிகுந்த தீவிரமான ஒரு பாதிப்பை உருவாக்குவதை இதற்குள் கண்டு இருக்கிறோம். ஏனென்றால் அவர்கள் பேசும் சிக்கல்கள் இந்நூற்றாண்டுக்குரியவை.

இந்த வகுப்பு இவ்வாறுதான் மாணவர்களிடம் சென்று சேர்கிறது. இன்று எந்த தளத்திலும் பொதுவாகச் சிந்திப்பவர்களுக்கு இருந்தே ஆகவேண்டிய அடிப்படை அறிமுகம் இது.

ஜெ

முந்தைய கட்டுரைஇயற்கையின் இடத்தில்