அன்புள்ள ஜெ,
வாழும் தமிழ் நிகழ்ச்சியை அறிவித்ததுமே நான் அதை குறைகூறுபவர்கள், வசைபாடுபவர்களைத்தான் சென்று கவனித்தேன். ஏனென்றால் 2022ல் நான் நீங்கள் தமிழ்விக்கியை அறிவித்தபோது அதே மனநிலையில்தான் இருந்தேன். தமிழ்விக்கி ஒரு சூழ்ச்சி என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அது இந்துத்துவ அரசியலின் சதி என்றும், அதில் தமிழறிஞர்கள் திராவிட இயக்க அறிஞர்கள் எல்லாரும் புறக்கணிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார்கள். இடதுசாரிகளுக்கு எதிராக அது இருக்கும் என்றார்கள். அது இளம்தமிழ் படைப்பாளிகளை இந்துத்துவ வலைக்குள் சிக்கவைப்பது என்றார்கள்.
நிறைய பணம் வருகிறது, அதற்குக் கணக்குகாட்ட இதையெல்லாம் செய்கிறார் என்றார்கள். ஒப்புக்கு எதையாவது செய்துவிட்டு அந்த பணத்தை சாப்பிட்டுவிடுவார்கள் என்றார்கள். எல்லாவற்றையும்விட எழுத்தாளர்களின் தகவல்களைத் திரட்டி அதை எல்லாம் அரசுக்கும் உளவுத்துறைக்கும் அளிக்கும் முயற்சி என்று எம்.டி.முத்துக்குமாரசாமி என்று ஒரு அச்சுப்பிச்சுப் பேராசிரியர் கட்டுரை வேறு எழுதினார். இந்த ஆதார்கார்டு யுகத்தில் தமிழ் விக்கி வழியாகத்தான் அரசு தகவல்களைத் திரட்டவேண்டும் என ஒருவர் எழுதுகிறார் என்றால் அவருடைய அடிப்படை அறிவு என்ன என்றுகூட நான் அப்போது யோசிக்கவில்லை.
தமிழ்விக்கி முயற்சியை நிறுத்திவிட்டோம், விழா நிகழாது என்று அமெரிக்காவிலிருந்து சிலர் இணையத்தில் கொக்கரித்தபோது அதற்கு ஆட்டின் விட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் விழா நடைபெற்றது. ஒரே ஒரு நண்பர்தான் என்னிடம் சொன்னார். இவர்களெல்லாம் வெறும் பொறாமைகொண்ட சிறிய மனிதர்கள். ஜெயமோகனின் முயற்சியை நிறுத்தவேண்டும் என்றால் அவரைப்போலவே செயலூக்கம் கொண்டவர்களால்தான் முடியும், இவர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று பார் என்றார். அதுதான் என் மனம் மாறியதன் தொடக்கம்.
தமிழ்விக்கி வெளிவந்தபோது அதன் நேர்த்தியும், அனைவரையும் உள்ளே வைத்துக்கொண்டிருக்கும் சமநிலையும் என்னை திகைப்படையச் செய்தன. ஒவ்வொரு இளம்படைப்பாளிக்கும் அதுவே அடையாளமும் விலாஸமும் ஆக இருப்பதைக் கண்டேன். தமிழ்விக்கி பெயர் கேட்டபோதே வசைபாடி கொந்தளித்துக்கொண்டிருந்த ஒவ்வொருவராக அவர்களின் தகவல்கள் அதில் வெளிவந்தபோது மகிழ்ச்சி அடைவதைக் கண்டேன். அப்படி வசைபாடிய ஒரு மூத்தபடைப்பாளி அவருடைய தமிழ்விக்கி பக்கத்தை அப்படியே அச்சு எடுத்து ஒரு விண்ணப்பத்துடன் இணைப்பதைக்கூட கண்டேன்.
பெரிய செயல்களைக் கண்டு இவர்கள் ஏன் கொதிப்படைகிறார்கள்? ஏனென்றால் இவர்கள் சிறிய மனிதர்கள். இவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இலக்கிய விழுமியம், அரசியல்நேர்மை என்றெல்லாம் இவர்கள் சொல்வதெல்லாம் வெத்துப்பாவலா. இவர்கள் அப்படி என்ன இலக்கியம் எழுதிக்கிழித்தார்கள்? குறைந்தபட்சம் நல்ல வாசகர்கள் என்றாவது இவர்களைச் சொல்லிவிடமுடியுமா? இவர்கள் எவராவது அரசியல் நேர்மை கொண்டவர்களா? ஜெயலலிதா , எடப்பாடி காலகட்டத்தில் துவாரங்களை மூடிக்கொண்டிருந்தவர்கள் இன்று அரசியல் பேசுகிறார்கள். இந்த சும்பன்களுடன் நானும் சேர்ந்திருந்தமைக்காக வெட்கப்படுகிறேன்.
அதே கும்பல்தான் ரமேஷ் பிரேதனை கைவிட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவரை 12 ஆண்டுகள் பேணிய உங்களை வசைபாடினார்கள். இப்போதும் அவர்கள்தான் கொந்தளிக்கிறார்கள். அறமோ நேர்மையோ அற்ற பதர்கள். குறைந்தபட்ச அறிவு கொண்ட எவரும் அவர்களைப் பற்றி எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
மு. அப்துல் வஹாப்










