அன்பும் பெரும் மரியாதைக்குரியவருமான திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
இவ்வுலகில் நம்முடன் வாழும் எண்ணற்ற பறவைகளை இதுவரை அறியாமல் இருந்ததற்கான ஒரு குற்ற உணர்வுடனும், இப்போது அவற்றைக் கண்டு அறிந்துகொண்ட மகிழ்ச்சியுடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
“முழுமை அறிவு” வகுப்புகள் எனக்குத் தந்த அனுபவங்கள் மிக ஆழமானவை.
*திறன்மிக்க ஆசிரியர்களின் ஆத்மார்த்தமான கற்பித்தல்,
*மூன்று நாட்கள் அன்றாடச் சுழற்சியிலிருந்து கிடைத்த விடுதலை,
*வயது வரம்பின்றி உருவான நல்ல நட்புகள்,
*வாழ்நாள் முழுவதும் துணையாக இருக்கும் பாடங்கள்,
*ஓய்ந்து போகும் வரை நீளும் அரட்டைகள்,
*பாகுபாடற்ற அத்தியாவசிய ஏற்பாடுகள்,
*குறையில்லாத உணவு
*இன்னும் பல
குழந்தைகள் ஆரம்ப காலங்களில் நடை மற்றும் பேச பழகுவது போல, நாங்கள் பறவைகளைப் பார்க்கவும் அதன் ஒலிகளைக் கேட்கவும் கற்றுக் கொண்டோம்.

பறவைகளுடன் நாங்கள்
கால்களை முன்னோக்கி மடக்கி, மனிதர்களால் ஒருபோதும் செய்ய முடியாத காரியத்தை மிகச் சாதாரணமாகச் செய்து கொண்டிருக்கும் Flamingo பறவையின் படத்துடன் வகுப்பு ஆரம்பமானது.
பரிணாம வளர்ச்சியில், பறவைகளின் பற்கள் போன்ற உறுப்புகள் வயிற்றுக்குள் மாற்றமடைந்துள்ளதை அறிந்தோம். டைனோசர் போன்ற பெரிய உருவம் எவ்வாறு Evalution மூலம் சிறிய பறவையாக மாறியது என்பதும் ஆச்சரியமூட்டியது.
பறவைகளுக்கு வண்ணங்கள் ஏன்? நாம் பார்க்கும் சில நிறங்கள் உண்மையில் பறவையின் இயல்பான நிறமல்ல; அது ஒளியின் பிரதிபலிப்பால் தோன்றுகின்றன என்பதும் புதிய புரிதலை அளித்தது.
வகுப்பில் சில பறவைகளுக்கு நாங்கள் கற்பனையாக பெயர்கள் வைத்தோம். நான் வைத்த பெயர் “இரட்டை நீலவால் குருவி”. அதன் உண்மைப் பெயர் “துடுப்புவால் கரிச்சான்” (Black Drongo).
அடையாளங்களின் மூலம் பறவைகளை வரையவும் கற்றுக் கொண்டோம். முதலில் சுமாராக இருந்தாலும், பின்னர் கையேட்டைப் பார்த்து சற்று நன்றாக வரைய முடிந்தது.
ஆட்காட்டிப் பறவை எங்களைக் காட்டிக் கொடுத்ததை நேரில் கண்டேன்.
ஒரு நேரத்தில் பறவைகளின் உலகத்தில்தான் மனிதர்கள் வாழ்கிறோமோ என்று தோன்றியது. எங்கும் பறவைகள் பற்றிய பேச்சுகள், அவற்றின் ஒலிகள், அவற்றைச் சுற்றிய சிந்தனைகள் மட்டுமே நிரம்பியிருந்தன.
ஒரு பறவையைப் பார்த்தால் அதை எப்படி மற்றவர்களுக்குச் சொல்லுவது என்று ஒரு முறை உண்டு. பறவையை எங்கே, எப்போது, அதன் நிறம் என்ன, பறவை என்ன செய்துக் கொண்டிருந்தது, அதன் சைஸ் என்ன, அதைக் கற்றுக் கொண்டோம்.
தமிழகத்தில் பொதுவாகக் காணப்படும் 138 பறவைகளின் பெயர், படம் மற்றும் விவரங்கள் அடங்கிய ஒரு குறுங்கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதில் பறவைகள் நீர்வாழ் பறவைகள், இறைக்கொல்லி பறவைகள், தரைவாழ் பறவைகள், வான்வழிப் பறவைகள், மரம்வாழ் பறவைகள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தன.
பறவைகளின் ஒலியை அடையாளம் கண்டு அறிதலும் ஒரு முக்கியமான திறன் என்பதை புரிந்துகொண்டோம். அதற்கு நமக்கு “கேட்கும் திறன்” (Listening Skill) எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தோம்.
இரவில் சோளத் தட்டையில் ஒரு வரிசையிலிருந்து அடுத்த வரிசைக்கு நீர்த்துளி விழும் சத்தத்தைக் கூட கவனிக்க முடியும் என்று ஆசிரியர் கூறிய அனுபவம், எவ்வளவு ஆழமான அமைதியுடனும் கவனத்துடனும் நாம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.
Mobile App மூலம் பறவைகளின் குரலை ஒலிக்கச் செய்யும்போது, அது மற்ற பறவைகளுக்கு இடையூறு ஆகக்கூடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது, ஆசிரியர்களின் பொறுப்புணர்வையும் அக்கறையையும் வெளிப்படுத்தியது.
Rohan Chakravarthy வரைந்த படங்களின் வழியே எளிய முறையில் கதை சொல்லும் விதம் மற்றும் விசும்பு கதைப் பற்றிய மர்மமான சுவாரசியமான தகவல்கள் அறிந்துக்கொண்டோம்.
பறவைகளைப் பார்த்தால் ஏன் Documet செய்ய வேண்டும், அதன் பயன் என்ன என்று கற்றுக் கொண்டோம்.
பறவைகள் பார்க்க & கண்டுபிடிக்க உதவும் Applications பற்றிய விவரங்களைக் கற்றுக் கொண்டோம்.
நேரத்திற்கு முன்பே வந்தவர்களுக்கான “Bonus Games” மிகுந்த உற்சாகத்தை அளித்தன. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆர்வமுடன் அதில் பங்கேற்றோம்.
மூன்று நாட்களில் நான்கு முறை Field Trip சென்றோம். விஜயபாரதி மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆசிரியர்கள் இரண்டு Magician போல பறவைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே வழிநடத்தினர். “அங்கே அந்தப் பறவை, இங்கே இந்தப் பறவை” என்று துல்லியமாகக் காட்டியதோடு, எந்த திசையில், எந்த கோணத்தில், எந்த உயரத்தில் பறவை இருக்கிறது என்பதையும் “கடிகார முறை” மூலம் விளக்கினர். மரத்தை ஒரு கடிகாரமாகக் கொண்டு, “இந்த மணி நேர திசையில் பாருங்கள்” என்று சொல்லிக் கொடுத்த விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஒரு கட்டத்தில் நாங்களும் அந்த முறையை கற்றுக் கொண்டு, அனைவரும் மற்றவர்களும் பறவைகளை தெளிவாகக் காண்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
குறைந்தது 30 முதல் 50 வரை புதிய பறவைகளை பார்த்திருக்கிறோம். அவற்றின் பெயர்களையும் அறிந்துகொண்டோம்.
பறவைகளுக்கு குற்ற உணர்ச்சி உண்டா? மனசாட்சி இருக்கிறதா? Taste, Touch, Smell உணரும் திறன் உள்ளதா? அவை “படிக்க” முடியுமா? மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் உள்ள பார்வை திறன் வேறுபாடுகள் என்ன? பகலில் ஆந்தைக்கு பார்வை உள்ளதா? — இவ்வாறான பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும், அவற்றை நிரூபிக்கும் சோதனைகளுக்கும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் “பறவை மனிதர்” திரு சலீம் அலி அவர்களின் வாழ்க்கை வரலாறு, மற்றும், K. Rathnam, M. Krishnan, Alfred Russel Wallace, Henry Walter Bates, Madhaviah போன்ற பல முக்கியமான இயற்கை ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்புகள், அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய தகவல்களையும் அறிந்துகொண்டோம்.
Cuckoo பறவையின் பரிணாம வளர்ச்சி, அதன் தனித்துவமான வாழ்க்கை முறை மற்றும் உயிர் வாழ்வதற்கான அதன் உத்திகள் பற்றியும் விரிவாக அறிந்துகொண்டோம். குறிப்பாக, Cuckoo பறவை தனது முட்டைகளை பிற பறவைகளின் கூண்டுகளில் இடும் நடைமுறை, அதற்கும் Reed Warbler பறவைக்கும் இடையேயான நுட்பமான தொடர்பு ஆகியவை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. Reed Warbler மற்றும் Cuckoo பறவையின் செயல்பாடுகள், அவற்றுக்கிடையேயான “Reed Warbler VS Cuckoo” போன்ற பரிணாம போட்டிகள் பற்றிய தகவல்கள் ஆச்சரியப்படுத்தின.
இயற்கைத் தேர்வு (Natural Selection Evalution)ல் Alfred Russel Wallace அவர்களின் முக்கியமான பங்களிப்புகளையும், அவருடைய வாழ்க்கை வரலாறையும் முதல் முறையாக அறிந்துகொண்டோம்.
பறவைகளின் Magnetic Field பற்றிய தகவல்களையும், அதனை கண்டறிய நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளையும் தெரிந்துக் கொண்டோம்.
குழந்தைகளின் ஆர்வம் ஆச்சரியமூட்டியது. இதில் சிலர் இரண்டாவது, மூன்றாவது முறை வருபவர்கள்.
பறவைகளைப் புரிந்துகொள்ள அதன் இயல்பிலேயே உள்ளதை உள்ளபடிப் பார்த்தாலே போதுமானது. அதன் மேல் மனிதர்களுக்கு உண்டான எந்த உணர்ச்சிகளையும் ஏற்றி அதன் அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாக இயங்கும் இயக்கத்தை எந்த முன் பின் முடிவும் இன்றி ஏற்றுக் கொண்டாலே போதுமானது.
வகுப்பு முடிந்து பஸ்ஸில் திரும்பி வந்துக் கொண்டிருந்த வழியில் வானில் பறந்து வட்டமடித்த பருந்தையும் மயில்களையும் குடும்பமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததை பக்கத்து சீட்டிலிருந்தவர் வினோதமாகப் பார்த்தார்.(சற்று பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தோம்.)
பறவை ஆராய்ச்சியாளரான திரு M. Krishnan மற்றும் சலீம் அலி அவர்களின் அர்ப்பணிப்பான வாழ்க்கை வரலாறு & M. Krishnan அவர்களின் சிரித்த முகத்துடன் பெரும் செயல்களை செய்து முடித்ததின் ஆனந்தமான அமைதியோடும் கூடிய புகைப்படத்துடன் வகுப்பு உணர்ச்சிகரமாக முடிந்தது. எங்கள் வாழ்க்கையில் பறவை பார்த்தல் பயணம் ஆரம்பமானது.(ஒரிஜினல் ஃபோட்டோவில் அவர் கையில் சிகரெட்டுடன் இருப்பார். ஆசிரியர் அதனை கவனமாக Crop செய்து குழந்தைகளுக்கும் எங்களுக்கும் காட்டினார். அவரின் பொறுப்புணர்வுக்கு நன்றிகள்.)
*ஆசிரியர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் விஜயபாரதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
*புதிய மற்றும் பழைய நண்பர்களுக்கும் நன்றிகள்.
*மணி அண்ணனுக்கு நன்றிகள்.
*அந்தியூர் ல் காலை ஐந்து மணிக்கு, நாங்கள் ஏற வேண்டிய பஸ் வந்ததை கவனிக்காமல் நின்றுகொண்டிருந்தபோது, “இந்த பஸ்தான் ஏறுங்கள்” என்று கூறிய அந்த பெயர் தெரியாத கடைக்காரருக்கும் நன்றிகள்.
எவரெஸ்ட் மலையின் உச்சியில் அதன் கடும் குளிரையும், காற்றின் வேகத்தையும், சூரியனின் தகதகப்பையும் மாறிக்கொண்டே இருக்கும் அற்புத காட்சிகளையும் பார்த்துக்கொண்டே(பாராட்டுகளையும் & வசைகளையும் சொல்கின்றேன்) ஆசானாய் அறிய பல செயல்கள் செய்து கொண்டிருக்கும் திரு ஜெயமோகன் அவர்களுக்கு அதன் வழியே மெதுவாக ஏறிக் கொண்டிருக்கும் ஒரு பயணி என்ற நிறைவுடன், மனமார்ந்த நன்றிகளுடன் இக்கடிதத்தை முடிக்கின்றேன்.
Date: May 1, 2, 3 – 2026
அன்புடன்,
அப்துல் சலீம் – தாஜ் நிஷா
(குழந்தைகள்: Fazil & Fasiha)
மதுரை.










