தொழில்வெற்றி மட்டுமே வெற்றியா என்ன?

அன்புள்ள ஜெமோ,

முன்பு ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொழில் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியாகவே இருந்தது. இன்று தொழிலில் வெற்றி என்பதுதான் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்று நாம் குழந்தைகளை சொல்லி வளர்க்கிறோம். அதன் விளைவாக குழந்தைகளுக்கு தொழில் தவிர எதிலுமே ஆர்வம் இல்லாமல் ஆகிறது. தொழிலில் சிறு தோல்வி அடைந்தால்கூட  வாழ்க்கை முடிந்து விட்டது என்ற எண்ணத்திற்கு வந்து விடுகிறார்கள். படிப்புவெறியை பிள்ளைகளுக்கு ஊட்டினால் அது தொழில்வெறியாக ஆகிவிடுகிறது.

அண்மை காலத்திலே ஒரு நாலைந்து இளம் நண்பர்களை பார்த்து அனுபவத்தில் இதை எழுதுகிறேன். தொழிலில் ஒருவரின் வெற்றி தோல்வி என்பது அவனை மட்டும் சார்ந்தது அல்ல .அவன் சார்ந்த நிறுவனம், அதிலுள்ள் வாய்ப்புகள் எல்லாம் பெரும் பங்கு வகிக்கின்றன. சூழல் உலகளாவிய எப்படி மாறுகிறது என்பது ஒரு பெரிய பங்கை வகிக்கிறது.

அதன்பின்புதான் அவனுடைய தனித்தகுதிகள். கடுமையான வேலை செய்யும் ஒருவன சரியான தொடர்புத் தன்மை இல்லை என்றால் தோல்வி அடைய முடியும். நல்ல விளைவுகளை உருவாக்கும் ஒருவன் தன்னம்பிக்கை இல்லாதவன் என்றால் அவனால் நினைத்த அளவுக்கு வெற்றி அடைய முடியாமல் போகும். அப்படி எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன.

ஆனால் தன் தகுதியைப் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இளைஞர்கள் அதற்கான இடம் கிடைக்கவில்லை என்று புலம்புவதை ஒரு வாழ்க்கையை முறையாகவே இங்கு வைத்திருக்கிறார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் கடுமையான மன உளைச்சலுடன  இருக்க நேர்கிறது வாழ்க்கைக்காகத்தான் வேலையை ஒழிய வேலைக்காக வாழ்க்கை அல்ல.ஒருவன் வேலையையே வாழ்க்கையின் வெற்றி என்றும் இன்பம் என்று நினைத்துக் கொண்டாந் என்றால் ஒருபோதும் அவனுக்கு நிறைவு அடையப்போவதில்லை.

இந்த தலைமுறைக்கு இந்த வேலைவெறியை உருவாக்குவது சமூகமல்ல. அவர்களை வேலை வாங்கும் நிறுவனங்கள்தான். அந்த நிறுவனங்கள் வேலை செய்யும் இயந்திரங்களாக தங்கள் ஊழியர்களை மாற்றுவது வழியாகத்தான் அவர்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு எதிரான எதிர்வினை என்பது அவர்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு வேலையை கொடுத்துவிட்டு எஞ்சிய நேரத்தை நமக்குரியதாக நாம் வைத்துக் கொள்வதும், நம் மகிழ்ச்சி நம் வெற்றி ஆகியவற்றை நாமே தேடிக்கொள்வதும்தான். நம் திறமை வெளிப்படும் வேறு தளங்களில் நமக்கு ஈடுபாடு இருக்கவேண்டும். நம் மனம் கொண்டாடும் மகிழ்ச்சியான இடங்களும் தேவை.

இந்த எளிமையான விஷயத்தை இளைஞர்களுக்கு திரும்பத் திரும்பக் கல்வி நிலையங்களில் இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

எஸ்.சந்தானகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமேட்ரிக்ஸ் x உண்மை.