அன்புள்ள ஜெயமோகன்,
குழந்தைகளை வளர்ப்பதைப் பற்றிய உங்களுடைய காணொளி சீண்டும் தன்மை கொண்ட ஒன்று. ஆனால் அது உண்மை. நீங்கள் குழந்தைகள் ரயிலில் பண்ணும் அட்டூழியங்களைப் பற்றி எழுதிய போது இங்கே சிலர் உங்கள் மீதான வெறுப்பை மட்டுமே காட்டினார்கள். உண்மையை தெரிந்து கொள்ள அவருக்கு அக்கறை இருக்கவில்லை. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் அதைப்பற்றி வந்திருந்தன. ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு நாளைக்கு 100 புகார்களுக்கு மேல் வந்து கொண்டிருந்தன. ஆகவே \தான் ரயில் அந்த நிர்வாகம் அந்த முடிவை எடுத்தது என்பதை அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இன்று கூட அதை கட்டுப்படுத்துவது மிகவும் குறைவு. பெரும்பாலான தருணங்களில் புகார் அளித்தால் டிக்கெட் பரிசோதகர் அங்கே வந்து அந்த பெற்றோரை எச்சரித்து செல்கிறார்கள். ஆனால் பெற்றோர் அதை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக தான் நினைக்கிறார்கள்.தங்கள் செல்லங்களுக்கு மொத்த ரயிலையும் சூறையாடும் உரிமை உண்டு என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
குறிப்பாக ரயிலில் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கான செல்போன்களை கையில் கொடுத்து இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தொடர்ந்து அவற்றை இயக்க வைத்து, அவற்றின் சத்தம் அந்த பெட்டி முழுக்க நாராசமாக ஒலிக்கும்படி செய்கிறார்கள்.
இந்திய பெற்றோர் குழந்தைகளின் வாழ்க்கையை கண் முன்னால் சீரழிப்பதை பார்க்கும்போது பரிதாபமாகவும் கொந்தளிப்பாகவும் இருக்கிறது .அந்த உணர்வுகளை தான் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள்.
ஆர். பார்த்தசாரதி.












