அன்புள்ள ஜெ,
நான் நீண்ட காலமாக யோகப் பயிற்சிகள் ,தியானப் பயிற்சிகள் செய்து வருகிறேன். தமிழகத்தில் யோக- தியானப் பயிற்சிகள் செய்வதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்பது அவற்றை பயிற்றுவிப்பவர்களின் மிகப்பெரும்பாலானவர்கள் மிக மிக மரபார்ந்த மனம் கொண்டவர்கள் என்பது. ஆகவே அவர்கள் நவீனச் சிந்தனை நவீன வாழ்க்கை முறை அனைத்துமே எதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அவற்றில் எல்லாவற்றையும் கூடுமானவரையும் தவிர்த்து விட வேண்டும் என்றுதான் நம்மிடம் ஆலோசனை சொல்கிறார்கள்.அது சாத்தியமா என்று கூட அவர்கள் யோசிப்பதில்லை.
நவீன வாழ்க்கை முறையை நிராகரித்து எவராவது பேசினால் உடனடியாக அவரை முன்னிறுத்த ஆரம்பிக்கிறார்கள்.அது சித்த மருத்துவமாக இருக்கலாம். அல்லது நாட்டு மருத்துவமாக இருக்கலாம். அல்லது இயற்கை வேளாண்மை இயற்கை உணவு என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பவர்களோ மாற்று மருத்துவம் பேசுபவர்களோ ஆக இருக்கலாம். ஆனால் எந்த அறிவியல் அடிப்படையில் என்று விளக்குவதில்லை
இன்றைய வாழ்க்கை முறை கெடுதல், நமது பழைய வாழ்க்கை முறை மிகச் சிறந்தது, அந்த காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருந்தார்கள், இன்று எல்லாரும் நோய் இருக்கிறார்கள்– இதை தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான அறிவியல் அடிப்படையை கேட்டால் அதை ஒரு துடுக்குத்தனமாக தான் எடுத்துக் கொள்கிறார்கள்.
அறிவியலுக்கு முற்றிலும் எதிரான இவர்களின் மனநிலையை பார்த்துதான் நான் விலகிவிட்டேன். உங்கள் பயிற்சி வகுப்புகளில் நீங்கள் நவீன மேலைத்தத்துவம், ஆயுர்வேதம் போன்ற பல்வேறு விஷயங்களை கற்பிப்பதைப் பார்க்கும்போது உங்கள் பயிற்சி முறையில் என்ன வேறுபாடு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
ரவீந்தர்
அன்புள்ள ரவிந்தர்,
எங்கள் கல்வி எங்கள் அனைத்திலுமே நாங்கள் அடிப்படையாகக் கொண்டிருப்பது அது எந்த நிலையிலுமே மனிதனின் பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரானதாக இருக்கக் கூடாது என்பதைத்தான்.
ஆகவே மத நம்பிக்கைகள் அல்லது வேறு வகையான கோட்பாடு, கொள்கை நம்பிக்கைகளை நாங்கள் வலியுறுத்துவதில்லை. அவற்றுக்கு இடம் அளிப்பதில்லை.
இங்கு வேதாந்தம் உட்பட இந்திய மெய்ஞான மரபுகள் கற்பிக்கப்படுகின்றன.கூடவே வ்வொரு தத்துவத்திற்கும் எதிரான மரபு என்னவோ அதுவும் சேர்த்து கற்பிக்கப்படுகிறது. யோகமும் தியானமும் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அவை நவீன அறிவியலுக்கு எதிரானதாக ஒருபோதும் இருக்கலாகாது என்பது வலியுறுத்தப்படுகிறது.
எங்கள் யோகப் பயிற்சி என்பது நவீனச் சிந்தனைகளுடனும் நவீன அறிவியலுடனும் முழுமையான அறிமுகம் கொண்ட சௌந்தர் மற்றும் தில்லை செந்தில் பிரபு ஆகியோர் தான் நடத்தப்படுகிறது.
ஜெ











