வேதாந்தம், கடிதம்

 

அன்புள்ள ஜெ,

நவவேதாந்தம் பற்றிய நான்கு காணொளிகளைத் தொடர்ச்சியாக பார்த்தேன். நான் இதுவரைக்கும் வேதாந்தத்தை இவ்வாறு நவவேதாந்தம், பழைய வேதாந்தம் என்று பிரித்துப் பார்த்ததில்லை. வேதாந்தம் என்பது அடிப்படையில் ஒரே சிந்தனை என்ற எண்ணம்தான் இருந்தது. வேதாந்தத்தில் இப்படி ஒரு மறுபிறவி நிகழ்ந்திருப்பதை ஒரு வரலாற்று பார்வையில் தான் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் வேதாந்த விவாதத்தில் நாம் வரலாற்றுப்பார்வையை கொண்டிருப்பதில்லை. வேதாந்தம் பேசுவதெல்லாம் காலம் கடந்த விஷயங்களைத்தான். இந்திய வரலாற்றை ஆராய்பவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள். அவர்களால் வேதாந்தத்தின் இடத்தை புரிந்துகொள்ள முடியாது. வேதாந்தம் இந்திய வரலாற்றில் ஆற்றிய பெரும் பங்களிப்பைப் பற்றி இன்றைய நவீன ஆய்வாளர்கள் எவரும் பேசி, எழுதி நான் கண்டதில்லை.

அவ்வாறு பார்க்கும்போது இரண்டு வேதாந்த மரபுகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாடு என்பது மிக பெரியதாக தோன்றுகிறது. பழையவேதாந்தம் அடிப்படையில் மனிதனின் முக்தி என்னும் கருத்தை முன்வைத்தது. ஆன்மிக ஈடேற்றம் மட்டுமே அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் நவ வேதாந்தம் ஜனநாயகம் மானுட சமத்துவம் போன்ற சில அடிப்படை விழுமியங்களை தனக்குள் ஏற்றுக்கொண்டு, நவீன அறிவியலுடன் உரையாடி உருவாகி வந்தது என்று சொல்லலாம்.

பழைய வேதாந்தத்தின் பல்வேறு நிறுவனம் சார்ந்த இறுக்கங்களை கைவிட்டு புதிய வேதாந்தம் முன்னகர்ந்திருக்கிறது .புதிய வேதாந்தம்தான் இந்திய சிந்தனையில் மிகப்பெரிய செல்வாக்கை செலுத்திய தத்துவக் கொள்கை என்பதை உங்களுடைய கட்டுரை வழியாக பார்த்தேன். என்னுடைய எண்ணம் ஏற்கனவே அவ்வாறு தான் இருந்தது. அது மீண்டும் உறுதியாகியது.

வேதாந்தம் பற்றி தமிழில் பேசுவதற்கு இன்று எவருமே இல்லை என்ற நிலை உள்ளது. பழைய வேதாந்த மரபைச் சேர்ந்தவர்கள் வெறும் பக்தியை முன்வைக்கிறார்கள். சடங்குகளை முன்வைக்கிறார்கள். ஆனால் வருத்தம் என்னவென்றால் நவவேதாந்த மரபினரும் பக்தி, பூஜை , யோகம் என்றெல்லாம் திசைமாறிச் சென்றுவிட்டதுதான்.

இச்சூழலில் நீங்கள் நவவேதாந்தத்தை அதன் அறிவார்ந்த நிலையில் முன்வைப்பது நிறைவளிப்பது.

நன்றி

செல்வமுத்துக்குமரன்

முந்தைய கட்டுரைநாம் எவரை வழிபடுகிறோம்?
அடுத்த கட்டுரைபடைப்பூக்கம், குழந்தைகள்