அன்புள்ள ஜெயமோகன்,
ஆயுர்வேத அறிமுக வகுப்புகளை அறிவித்திருப்பதைப் பார்த்தேன். இன்றைய சூழலில் ஆயுர்வேத வகுப்புகள் நவீன மருத்துவத்திற்கு இணையாக சொல்லத்தக்கவையா என்ன? ஆயுர்வேதத்தின்படி நாம் நம் உடலை சரியாக அறிந்து கொள்ள முடியுமா? நவீன அறிவியலில் உள்ள உடற்கூறியல் நரம்பியல் மற்றும் கிருமியியல் போன்ற விஷயங்கள் ஆயுர்வேதத்தில் இல்லாதபோது அது எந்த வகையில் பயன்படுவதாக இருக்கும்.?
எம்.ஆர்.ரவி
அன்புள்ள ரவி,
நவீன மருத்துவமுறை மனித உடலை ஒட்டுமொத்தமாக ஒரு கட்டமைப்பாக, ஒரு கருவியாக கண்டு அதற்கான மருந்துகளை உருவாக்குகிறது. அது மிகப் பயனுள்ளது.மிக நவீனமானதும் கூட.
ஆனால் இந்தியச் சூழலில் நாம் இங்கு வாழும் வாழ்க்கையை ஒட்டிய ஓர் அறிவுத்துறை ஆயுர்வேதம். இங்குள்ள இயற்கையுடன் நமக்குள்ள உறவையும், இங்குள்ள உணவுடன் நமக்குள்ள தொடர்பையும் நாம் புரிந்து கொள்வதற்கு அது உதவியானது.
ஆயுர்வேதம் வழியாக நாம் அறிவது நவீன உடற்கூறியலோ நவீன நரம்பியலோ நமக்குச் சொல்லும் மனித உடலை அல்ல. மனித உடலைப் பகுப்பாய்வுசெய்து அடையப்பெற்ற புரிதல் அல்ல அது. இங்கு நம் முன்னோர் நீண்ட காலமாக வாழ்ந்து, அனுபவம் வழியாக அடைந்த ஒரு உடல் சார்ந்த புரிதல். அதாவது உணவு, வாழ்க்கைமுறை வழியாக அறியப்பட்ட உடல். இயற்கைக்கும் நமக்குமான உறவை கொண்டு மதிப்பிடப்பட்ட நம் உடல்.அந்த புரிதல் அலோபதியில் இல்லை.
நோயுற்றோம் என்றால இன்றைய சூழலில் அலோபதி மருந்தே சிறந்தது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் உடலுக்கும் இயற்கைக்குமான உறவைப் பற்றி அறியவும், உணவு தூக்கம் போன்றவற்றை நம் கட்டுக்குள் கொண்டு வரவும், ஒத்திசைவுள்ள உள்ள ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்வதற்கும் ஆயுர்வேத சார்ந்த புரிதல் மிக அவசியமானது என்பது என்எண்ணம்.
எனக்கு அது பயனுள்ளதாக இருக்கிறது. ஆதலால் அதை முன் வைக்கிறேன். அது அனைத்து நோய்களுக்கும் மருந்தாக முன்வைக்கப்படவில்லை. வாழ்க்கைமுறை திருத்தம் சார்ந்து மட்டுமே இங்கே பரிந்துரைக்கப்படுகிறது.
கூடவே யோகம் தியானம் போன்றவற்றை பயில்பவர்களுக்கு அது மிக அவசியமான அடிப்படைக் கல்வி
ஜெ











