மலை மாட்சி- இராச.மணிமேகலை

 

மலை என் செய்யும்? ‘அளக்கலாகா அளவும் பொருளும், துளக்கலாகா நிலையுந் தோற்றமும்…’ என்பது மலையை ஒப்புமை காட்டி ஆசிரியனுக்குச் சொல்லப்பட்ட நன்னுல் நுற்பா. இவ்வளவுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாத மலையின் தோற்றமும், உறுதித்தன்மையும், காண்பவர் வியக்கும் பேருருவும் வெள்ளிமலை ஆசிரியர்களுக்குப் பொருந்தக்கூடியது. ‘கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும்’ கொண்ட ஆசிரியர்கள் தத்துவம், மரபிலக்கியம், கிருத்துவ இலக்கியம், சூஃபி இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம், உருது இலக்கியம் ஆலயக்கலை, சிற்பக்கலை, தாவரவியல், பறவை பார்த்தல், கர்நாடக இசை, மேலை இசை, மேலைத் தத்துவம், விபாசனா, யோகா, உளக்குவிப்பு தியானம், ஓவியம், ஆயுர்வேதம், பிரபந்தம் என  ஆண்டுதோறும் வார இறுதி நாட்களில் இங்கு நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். மேமாதம் நடைபெற்ற காவியமுகாமின் இரவொன்றில் சுசித்ரா ஒருங்கிணைத்த பெண்கள் மட்டும் பங்குபெற்ற புளியமரக் கூடுகையின் பேசுபொருள் பெண்ணெழுத்தும், வாசிப்பும். ‘ஆண்களுக்கு இயல்பாக கைகூடும் ஒன்று ஏன் பெண்களுக்கு இயலாமல் போகிறது? இவற்றின் தடைக்கல்லாக இருப்பவை எவை? தடைபல தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி?’ பெண்களுக்கு தன் குடும்பத்தினரால் வழங்கப்படும் சுதந்திரம் என்ற கண்ணுக்குத் தெரியாமல் கட்டப்பட்டுள்ள கயிறு சற்று நீளமாக விடப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இலக்கியத்தில் பெண்கள் தீவிரமாக ஈடுபடுவதற்கான வழிகள், முதலானவை அங்கே பேசப்பட்டன. ‘தேவகி சித்தியின் டைரி’ எழுதியவருக்கு பெண்களுக்கான சவால்கள் தெரியும் என்பதால் இவ்வகுப்பை ஜெ. தான் நடத்தவேண்டும் என முடிவானது. காவியமுகாம் முடிந்து அவரவர் வீடு திரும்பிய மறுநாள் JKR முன்னெடுக்க நாகநந்தினி ‘ஜெவுடன் மூன்று நாட்கள்’ என்ற வாட்ஸ்அப் குரூப் தொடங்க, தொடர்ச்சியான முயற்சியில் 28, 29, 30ஆம் தேதிகளில் எங்கள் நோக்கம் நிறைவேறியது. ஒவ்வொரு வகுப்பின் முடிவும் அடுத்த வகுப்பின் தொடக்கமாவதும், இவை தொடர் கண்ணியால் பிணைக்கப்பட்டிருப்பதும் இங்கு வரும் எல்லோராலும் மிக நுட்பமாக உணரக்கூடியது.

வாசிப்பும் எழுத்தும்

 

வெள்ளியன்று காலை வகுப்பை ஜெ. Male point of view on female writing   எனத்  தொடங்கி, ஏன் எழுதவேண்டும்? யாரெல்லாம் எழுதலாம்? எதை எழுதலாம்? எழுதுவதற்கான பயிற்சி முறைகளே இவ்வகுப்பின் நோக்கம் என்றார். மனுஸ்ருமிதியில் ‘பெண்கள் சுதந்திரத்திற்கு தகுதியானவர்கள் அல்லர்’ என்று கூறப்பட்டுள்ளதையும், சிறுமி முதல் முதுபெண்கள் வரை தன் செயலுக்கு தான் பொறுப்பேற்க இயலாத சார்புநிலை வாழ்க்கையைச் சுட்டிக்காட்டினார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மேலெழுந்து வந்து தன் அறிவார்ந்த செயல் மூலமாக நிலைபெற்றிருக்கும் பெண்ணெழுத்துக்களை உதாரணம் கூறினார். ‘அதைப்போன்றே எந்தவொன்றும் ஆண்களுக்கு இயல்பாகவே கைகூடவில்லை, நாடு கடத்தப்பட்ட நிலையில், தலைமறைவுப் பொழுதுகளில், மலையுச்சிகளில், சைபீரியாவின் பனியில், சிறைகளில் எழுதப்பட்ட உன்னதப் படைப்புகளையும், பெண்களுக்கு இன்றையக் காலச்சூழலில் தேடலின் பசியே படைப்பாக்கத்திற்கான உந்துதலாக அமைய வேண்டுமேயொழிய மதம், இனம், பெண், மாற்றுத்திறனாளர் என்ற பேதம் காரணமான சலுகைகளைப் பெறுவதும், அதனுாடாக படைப்பு நிகழ்வதும் அருவருக்கத்தக்கது, டால்ஸ்டாய் எழுத என்ன இலக்கணமோ அது எனக்குப் போதும் என்ற மனப்பான்மை எழுத்துக்கான உந்துதலாக அமைய வேண்டும் என்று கூறினார். மேலும் எழுத்து என்பது தொடர் வாசிப்பின் மறுபக்கம், மெய்நிகர். அதற்கு முதல்படியாக வாசித்தல் அமைதல் வேண்டும்’ என்றும், அனுபவங்களைத் தொகுக்க, உணர்வுகளைப் புறவயமாகப் பார்க்க, நம் அகத்தைச் செம்மையாக்க எழுதவேண்டும் என்றார். நிலையற்ற வாழ்க்கையில் தனக்கான சுதர்மத்தைக் கண்டடைவதன் அவசியத்தை ஆப்ரிக்காவில் சாலமன் காலத்திலிருந்து (ஏறத்தாழ 3000 ஆண்டுகள்) மண்ணுக்கு மேலே 30 அடி உயரமும், கீழே 60, 70 அடி ஆழமும் கொண்ட புற்றைக் கட்டுகிற ஒருவார காலமே வாழும் சிதலின் சுதர்மத்தைப் பற்றிக் கூறியபோது அகத்தியர் காலத்திற்கு முற்பட்ட நம் இலக்கியத்தின்  ஆழமும், இன்று வரையிலான அதன் உயரமும், அதற்கான ஒவ்வொருவரின் சுதர்மமும், மாபெரும் ஆளுமைகளைத் தன் எழுத்தில் நிலைநிறுத்திய கண்முன்னே நிற்கும்  படைப்பாளனின் சுதர்மமும் நமக்கான அடிச்சுவடுகளாகக் காண்கிறேன். கர்மயோகம், பக்தியோகம் என்பதை விளக்கி ‘செயலாற்றாமல் வெறும் பக்தி மட்டுமேயென்பது தீங்கானது, கடமை வேறு, ஆகவே தன்னலமின்றி பயன் கருதாது செயல்புரிக’, என்றார். இன்னும் ஒருபடி மேலாக சென்று, living, survival இரண்டுக்குமான வேறுபாட்டை   உணர்த்திய பொழுதில், வெள்ளிமலைப் பயணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்தலை நோக்கிய பயணமே எனப் புரிந்தது. ‘நினைவில் காடுள்ள விலங்கு’கள்தானே பெண்கள்? இருந்தாலும் நீ யார்? என்ற கேள்வியில் வெளிப்படும் அகமே, தேடலாக பெண்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. எழுத்தென்பதை எங்கள் கண்முன்னே மதிப்புரையாக, குறுங்கட்டுரையாக, ஆய்வுக்கட்டுரையாக, செய்திக்கட்டுரையாக, சிறுகதையாக, கவிதையாக ஜெ. தன் அனுபவத்தின், பிறர் அனுபவத்தின், படைப்புகளின் ஊடாக விவரித்தபோது சிரிப்பலையால் அரங்கு அதிர்ந்தது. தேநீர் இடைவேளைகளில் அவரது தத்துவ வகுப்பில் கலந்துகொண்ட பெண்கள் சிலர் ‘இப்படிப்பட்ட ஜெ.வை பார்த்ததில்லையே’ எனச் சொல்ல தத்துவம் serious subject இல்லையா?’ என்றனர் சிலர். ‘மூன்று விரல் காட்டி இரண்டு கண்ணன் இருக்கின்றான்’ என்கிறது நீலம்

ஒரு சிறுகதை கவனம் ஈர்க்கும் தொடக்கத்துடன், திருப்பம், உச்சம் என அமையவேண்டும் என்பதை எட்கர் ஆலன்போ, மாப்பாசான் கதைகள் மூலமும், ஆன்டன் செகாவின் The bet கதையில் முடிவிலிருந்து கதை தொடங்குவதும், Saki (H.M.Munro) யின் புகழ் பெற்ற Dusk சிறுகதையில் சோப்பு ஒன்று கதையின் திருப்பமாக மாறுவதும், அசோகமித்ரனின் புலிக்கலைஞன் கதையில் அவன்  புலியாக வெளிப்பட்டது கதையின் உச்சமென்றும் கூறினார். அவர் சொன்ன பலவற்றில் சிலவற்றையே நினைவிலிருந்து பகிர்கிறேன். தேய்வழக்குகளை தவிர்த்தலுக்கு அவர் எடுத்துக்காட்டியவை சிந்திக்கத் துாண்டுபவை. ‘திகைப்பூண்டு (ஆளை மதிமயங்கச் செய்யும் தாவரம்) மிதித்த மாதிரி, திக்குமுக்காடுதல், வெள்ளைக்காரன் இந்தியனை திட்டிய Black community தான் நம்மை நாமே திட்டிக்கொள்ளும் கம்மனாட்டி, என்றதும்,  ‘நாணிக் கண்புதைத்தல்’ (‘இன்று எந்தப் பெண்ணாவது இப்படிச் செய்கிறாளா? என்று கேட்டபோது) பயனற்ற தேய்வழக்குகளை தவிர்க்க வேண்டுமெனப் புரிந்தது. வெள்ளிடைமலை (தெளிவாகத்தெரிவது) என்பது தத்துவார்த்தமாக இருளில் மின்னல் வெளிச்சத்தில் தெரியும் மலையின் கணநேரத் தோற்றம் என்ற புதிய சிந்தனையும், ‘பால் மாறாமல்’ என்பதற்கு ‘ஒருபால் கோடாமை’ என்று சொன்னதும், புதிதாகத் தெரிந்து கொண்டவை. கல்வித்துறையில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் நோக்கும் போக்கும் எவ்வாறு தரமற்று இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி அவற்றை அணுகும் வழிமுறைகளைக் கூறினார். கவிதை எழுதுதலில் புதுக்கவிதை எந்த இடத்தில் வரிகளை உடைக்கிறது? ஏன் உடைக்கிறது என சொன்னது பலருக்கு திறப்பை அளித்தது. ‘அள்ளி கைப் பள்ளத்தில் தேக்கிய நீர் நதிக்கு அந்நியமாச்சு’, ஓடும் நதியில் எது என் நீர்? போன்ற கவிதைகளை எடுத்துக்காட்டியபோது வரிகளை எங்கே உடைப்பது என்பதை கவிதைதான் தீர்மானிக்கிறது, கவிதை உணர்தல் தன்மைத்து என்பதை அறிந்தோம். சித்ரா, ‘சிற்றுரை பற்றியும் சொல்லுங்கள்’ என்று ஒரே ஒருமுறை கேட்டதை நினைவில் வைத்திருந்து அதைப்பற்றி விளக்கியதால் கால் தரையில் பதியவில்லை அவளுக்கு.

நிலவிரவில்

 

இப்பயிற்சி முகாமின் அற்புதத் தருணமிது. மெல்லிய பனியில். இளங்காற்றில் வெட்டவெளியில் அத்தனை பேரும் கூடியிருக்க நிலவு முகம் காட்டியும், மறைத்த பொழுதில் ஜெ. ‘யார் யாருக்கு என்ன கேள்வியோ கேட்கலாம்’ என்றவுடன் ஆராவாரம் பலமாக எழுந்தது. ‘ஒரு நிமிடம்! நிலவு என்ற சொல் வருமாறு ஒரு பாடலோ, கவிதையோ, சொல்லவேண்டும். சொன்னபிறகே கேள்வியைக் கேட்கவேண்டும்’ என்றதும் சத்தமேயில்லை. ‘சந்திரனொளியில் அவளைக் கண்டேன்’ என்ற பாடலை தீபா (பத்மா கோளேவின் மராத்தி கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர்) தன் இனிய குரலில் பாடி ‘படிக்கிறோம், எழுதுகிறோம். எழுத்து எந்த இடத்தில் இலக்கியமாகிறது? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு ஜெ. தொடர் வாசிப்பும், தொடர்ச்சியாக எழுதிப் பார்த்தலும், எழுதியதை விட்டுவிட்டுப் படித்துப் பார்த்தலும், குறைகளைக் களைதலும், நண்பர்களுடன் விவாதித்தலும் எழுத்து இலக்கியமாவதற்கான அடிப்படை என்றார். இக்கூடுகை இவ்விதம் நிகழுமென்பது யாரும் எதிர்பாராததொன்று. எழுத்தின் தொடக்க நிலையில் காலடி வைத்திருக்கும் எனக்கு மிகப்  பெரிய வாய்ப்பு இது! சுமாராகப் பாடி ‘ஒப்பீட்டிலக்கியத்தை எந்த அளவில், எந்த முறையில் நம் எழுத்தில் அனுமதிக்கலாம்?’ என்ற கேள்வியை முன் வைக்க, ‘இலக்கியத்தில் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகங்களை ஒப்பிட வேண்டுமேயொழிய சாயலை ஒப்பிடக்கூடாது. இந்தியாவின் இதிகாசம்-இராமாயணம்-சீதை-கற்புநெறியை, கிரேக்க இதிகாசம்-இலியட்-ஹெலன்-உடலழகோடு ஒப்பிடும்போது  கிரேக்க மனநிலையில் அழகுக்கு ஆயிரம் போர்வீரர்கள் வாள் தாழ்த்துவதையும், இந்திய மனநிலையில் கற்புநெறி பொற்புடைத் தெய்வமாக்குவதையும் ஒப்பிடவேண்டும்’ என்றார். மேலும் மகாபாரதத்தில் சகுந்தலை சுயசார்பு கொண்ட சுதந்திரமான பெண்ணாகவும், ஆயிரம் ஆண்டுகள் கழித்து காளிதாசன் ‘அபிஞ்ஞான சாகுந்தலத்தில்’ அமைதியான, கணவனைச் சார்ந்து விதியை நொந்து அழும் பெண்ணாக எழுதியதை ரொமீலா தாப்பரின், Sakuntala:Texts,Readings,Histories, ஒப்பீட்டிலக்கியத்தை வாசித்தால் அறிந்து கொள்வீர்கள்’ என்றார்.

பெண்ணெழுத்தில் spirituality குறைவாக இருப்பதன் காரணமென்ன? என்ற கேள்வியை ப்ரீத்தி முன்வைக்க ‘பெண்கள் பெரும்பாலும் எழுத்தில் தன் பிரச்சனைகளையே முன்வைக்கிறார்கள். உங்களின் பிரச்சினை spirituality ஆகாது. விக்டர் ஹ்யூகோவின் ‘ஒரு எழுத்தோ, ஒருவரியோ என் வாழ்க்கைப் பற்றியதல்ல. மனிதகுலத்தின் பிரச்சனைகளையே நான் எழுதுகிறேன்’, என்ற கூற்றும், ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்?’,  பெண் எழுத்தாளர்களில் ஐசக் டெனிசனின் The Blue Jar  (நீலஜாடி-அருண்மொழி நங்கை), ஸெல்மாவின் The Legend of the Christmas Rose (தேவமலர்-க.நா,சு.), எலியட் போன்ற மாபெரும் படைப்பாளிகள் மானுடத்தின் குரலாகவே ஒலித்தனர்’ என்றார். அடுத்து சியாமளா (பனிமனிதன் – ஆங்கில மொழிபெயர்ப்பாளர்), ‘இலக்கியத்தில் மொழியின் பங்கு என்ன? நான் சில ஆண்டுகள் வசித்த ஜாம்பியாவில் வாய்மொழி இலக்கியமே ஓங்கியிருக்கிறது. தங்கள் மொழியை விடுத்து ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இது மொழிக் குறைபாடில்லையா?’ என்று கேட்டார். ‘ஆப்ரிகாவில் 5000 மேற்பட்ட இலக்கியங்கள் வாய்மொழி மரபில் இருக்கிறது. அது வெவ்வேறு குரல்கள் வழியாக சுதந்திரமாக வளர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால் எழுத்துமொழி freeze செய்யப்பட்டது. அதிகாரம் மிக்கது. அ.கா.பெருமாள் தொகுத்த ஆறு கம்பராமாயணத் தொகுதிகள் வாய்மொழிப் பாடல்களே. ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்ற வாய்மொழிப் பண்பாடு கொண்டவர்களே பெரும்பாலான மனிதர்கள்’ என்றும், இலக்கியம் மட்டுமின்றி உலகில் ஒட்டுமொத்தமாக 70 சதவீதத்திற்கு மேலான கலைப்படைப்புகளும்,  பிக்காசோவுக்குப் பின் வந்த கலைப்படைப்புகள் பெரும்பான்மையும் ஆப்ரிகாவைச் சேர்ந்தவை என்றார். நீலப் பெருவெளி. அடர்நீல இரவுப்பொழுது. இன்னும் கேள்விகள்! இன்னும் பதில்கள்! என நீண்டது கூடுகை. ‘எவருமில்லை எவ்விழியுமில்லை என்று எண்ணி நிறைந்தபின் மூடிய விரல் விரித்து முழுநிலவை வெளியே எடுத்தது இரவு. நிலவொளியை சிறகென சூடிய நுண்ணுயிர்கள் இசை கொண்டு விண்ணில் சுழன்றன’ என்ற வரிகளின் பின்னோடினாள் இந்த நீலப்பித்தி.   

இந்த நிலவிரவின் கோட்டுச் சித்திரத்தை  அன்றிரவே வரைந்தாராம் லலிதா ராகவன். மறுநாள் மதிய ஓய்வு நேரத்தையும் ஓவிய வகுப்பாக ஆக்கிக்கொண்டனர் நம் பெண்கள்.

 

அந்தி நடையொன்றில் லோகமாதேவியுடன் ஜெ. தளத்தில் வெளியான ‘பொற்சுழல்’, சொல்வனத்தில் வெளிவந்த ‘ஸாம்பா’ கட்டுரைகள், வெளிவரவிருக்கும் அவரது புத்தகங்கள் பற்றிய சுவாரஸ்யமான  பேச்சில் நடை நீண்டது. தாவரங்கள், பூக்கள் குறித்த எண்ணங்களால்  எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பவராக இவரைக் காண்கிறேன்! இலக்கியம் சார்ந்த உரையாடலொன்று இவ்விடத்தில், எப்போதும் நிகழ்ந்தபடியேயிருந்தது. முழுமையாக இரண்டரை நாட்கள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. இந்த வயதில் துறுதுறு மாணவியாக அமர்ந்து பாடங் கேட்டதும், கவிதையொன்றிற்கு திசையொன்றிலிருந்து வந்த இரு பதில் என் ஒருத்தியின் குரலாகக் கேட்டதால் கிடைத்த மோதிரக் குட்டும், குருகுலக் கல்விச்சூழலும், வெற்றுக்கலம் கொண்டு வந்து, எப்படி ஆழ அமுக்கி முகக்கினும் கலம் கொண்ட அளவே நிறைத்ததும் என நினைவிலெழுந்தவைகளைத் தொகுத்திருக்கிறேன். இறுதியாக  பெண்களின் மனதை, வாழ்வை, வலியை, வேட்கைகளை கட்டுப்படுத்தப்படாத பெண்ணெழுத்தில் வாசித்தால் புலப்படாத பல விஷயங்கள் புரியும். இது பெண்ணியம் அல்ல. ஆனால் ஜெ. சொல்லவருவது  இது மட்டுமே பேசுபொருள் அல்ல. இந்த தலைமுறைப் பெண்கள் முன்பிருந்த தளைகளிலிருந்து கொஞ்சமேனும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ள நிலையில் தனக்கான தேடலையும், இலக்கையும், மானுடம் பற்றிய சிந்தனைகளையும் பேசவும், எழுதவும் வேண்டும் என்பதுதான். அந்த வாசிப்பும் எழுத்தும் நம்மை இளமையோடும், உயிர்ப்போடும் வைத்திருப்பதற்கான விசைகளாகக் காண்கிறேன்.     ‘பாடை ஏறினும் ஏடு கைவிடேல்’ எனக்கு என் தகப்பன் சொன்னது. என் ஆசிரியன் சொன்னதும் அதுவே!

  

முந்தைய கட்டுரைஓரிடத்தில் குவிதல்…