மூளையலைவுகள்

 

வணக்கம் ஜெ. அண்ணா

நான் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவன்.

கடந்த காலம் ஒருவித கட்டுப்பாடுகளோடும் நெறிமுறைக்கு உட்பட்டவையாகவும் இருக்கின்றது. அப்படியாக ஏற்கனவே அறியப்பட்ட ஒன்றை விவாதிக்கும்போது இன்றைய சூழல் முற்றாக அதனைத் தகர்த்தெரிந்து விடுகின்றது.

பாரதி தந்த ” காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் …” என்கிற சிந்தை சூழ்கிறது …அப்படியானால் பகுத்தறிந்து பதிவு செய்யப்பட்ட கூற்றுகள் யாவும் பொய்யானவையா?

மேலும் நிகழ்காலத்திற்கு எதிர் வினையாக அவை மாறிவிடுகின்றதின் ஒவ்வாமை அந்த நாளையே அலைக்கழித்துவிடுகின்றது.

( உதாரணத்திற்கு “பசிக்கிது..” என்று வந்து நிற்பவனுக்கு என்னாலானது என்று ஒரு டீ யை வாங்கிக் கொடுத்தால் “வெறும் டீ தான் வாங்கிக் கொடுத்தான். என்று  “ஒரு சிறிய நல்லெண்ணம் கேலிச் செயலென உருக்கொள்கிறது. )

இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த மனக்குழப்பத்தை நீக்குங்கள் அண்ணா .

அன்புடன்

– சுஜய் ரகு

அன்புள்ள சுஜய்

கொஞ்சம் விலகி நின்று சிந்தனை செய்தால் இதிலுள்ள முதன்மைப்பிழையை நீங்களே காணமுடியும். இந்தப் பிழை இளமைக்காலத்தைச் சேர்ந்தது. இளமையில் நாம் நம்மை ஒரு பிரபஞ்சமையமாக எண்ணிக்கொள்கிறோம். அனைத்தும் நம்மில் தொடங்கி நம்மில் முடிகிறது. நாம் நம்மைக்கொண்டே எல்லாவற்றையும் அளவிடுகிறோம்.

பசிக்கிறது என ஒருவன் வந்து நிற்கிறான். அவனுக்கு நீங்கள் டீ வாங்கிக் கொடுக்கையில் பலவித தத்துவக் குழப்பங்களுக்கு ஆளாகிறீர்கள். சரி, அந்த டீயை வாங்கிக்குடிக்கும் பசித்தவர் நீங்கள் என்றால்? என்ன தத்துவக்குழப்பம்? பசி அடங்கவேண்டும் அல்லவா? டீ கிடைப்பதற்கும் டீ கிடைக்கததற்கும் இடையே பெரிய வேறுபாடுண்டு இல்லையா? அதில் கேலி ஒன்றும் இல்லை அல்லவா? அப்படி யோசித்தால் குழப்பம் அகலும்.

அரிய சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதாக நாம் பாவனை செய்வதற்குப்பின்னால் இருக்கும் மனநிலை நாம் அசாதாரணமானவர்கள் என நமக்கே காட்டிக்கொள்ளும் விழைவுதான்.

இங்கே நாம் அசாதாரணமானவர்கள் அல்ல. நம் இருப்பு விந்தையான அரிய நிகழ்வும் அல்ல. நாம் இப்புவியின் கோடானுகோடி புள்ளிகளில் ஒரு துளி. அதேசமயம் நாமே இப்புவியும்கூட. ஆகவே இங்கே பொருந்தியிருத்தலே உகந்தது. அதற்குத் தடையாக ஆவது நான் என்னும் எண்ணமே.

அன்றாடம் இன்பங்களின் பெருந்தொகை. இருத்தலே பேரின்பம். சிறுசிறு விஷயங்களில் இப்புடவி தன்னை நம்முன் வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறது. ஒன்றையும் விடக்கூடாதென்ற தவிப்பை நான் உங்கள் அகவையில் அடைந்தேன். அதன்பின் இவவழ்வு முற்றிலும் பொருள் உடையதாக ஆகியது. அதுல் எந்த தத்துவச்சிக்கல்களும் இல்லை

தத்துவச்சிக்க்கல்களில் உண்மையானவை இரண்டுதான். ஒன்று அறவியலுடன் தொடர்புடையது. இன்னொன்று பிரபஞ்சத்துடன் தொடர்புடையது. அவற்றை அறிய ஆராய முறையான தத்துவப்பயிற்சி தேவை. இல்லையேல் எண்ணங்கள் வெறும் சொற்ப்பெருக்காகவே ஒழுகிக்கொண்டிருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைஜெர்மானிய தத்துவ அறிமுகம், கடிதம்
அடுத்த கட்டுரைஜெர்மானிய தத்துவம், கடிதம்