நித்யா ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

குரு நித்ய சைதன்யா யதி அவர்கள் ஈஸ்ட் வெஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியராக உலக சுற்றுப்பயணத்தை நடத்திய குறிப்பினையாத்திராஎன்ற பெயரில் மலையாள வார இதழில் எழுதி வந்த காலம். அப்பொழுது நான் எங்கள் ஊரில் உள்ள பிரபல சிவாலய திருக்கோவில் திருவிழாவில் ஆத்மீக உரை  நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றுவதற்காக அழைத்திருந்தேன். அவர் ஒரு சன்னியாசி என்ற முறையில் மதப்பிரசங்கம் நடத்த வருவார் என அழைத்து நான் கடிதத்தை அனுப்பினேன். 

உடனடியாக அவரிடம் இருந்து ஒரு பதில் கிடைத்தது. அதில்நான் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்றும் அங்கு பார்த்த வரையில் எனக்கு சொல்வதற்கு ஒன்று உண்டு என்றும் அற்ப பணக்காரர்களும் ஆபாசக்காரர்களும் அங்கு இருப்பார்கள் . ஆகவே உங்கள் வீட்டு திண்ணையில் 20 பேர்களை கூட்டி வையுங்கள் நான் கலந்து கொள்கிறேன்என்று பதில் அளித்தார். இது நடந்தது 1980கள் மத்தியில்.

நான் திகைத்துப் போனேன் .ஒரு சந்நியாசியா இப்படி சொல்வது என்று? தொடர்ந்து அவரை வாசித்து வந்ததால் குருவின் தத்துவம் என்ன என்பதை புரிந்து கொண்டேன்.

வேதாந்தத்தின் தேவை பற்றி பேசும் பொழுது தாங்கள் இதை பேசி துவங்கிய போது இதுகுறித்து  தெரியப்படுத்த வேண்டும் என்று கருதி  குறிப்பிடுகிறேன்.

இப்போது மலையாள வேதாந்த   வெளியீடுகளில் காண்பதை விட குருவைப் பற்றி அதிகமாக தமிழில் படிக்க கிடைக்கிறது. அதுவும் உங்கள் மூலம் என்பது பெருமையாக உள்ளது.

பொன்மனை வல்சகுமார்

 

அன்புள்ள வல்சகுமார்

உங்கள் சொற்கள் மகிழ்வளித்தன

மெய்தான். இன்று தமிழகத்தில் அறிவுச்சூழலில்  நித்யா ஒரு குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அவர் பேச விரும்பியது நுண்ணறிவும் தேடலும் கொண்ட ஒரு சிறு வட்டத்திடம் மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைஆலயம்,ஆகமம்- கடிதம்
அடுத்த கட்டுரைமேடைப்பேச்சும் வகுப்புகளும்