நாங்கள் நடத்திவரும் ஆலயக்கலை வகுப்புகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவை. தொடர்ந்து மேலும் வகுப்புகள் நடைபெறவுள்ளன. முதன்மையான காரணம், நம்மைப்போன்றவர்களின் அன்றாடத்தில் அதைப்போன்ற அறிவுத்துறைகள் அளிக்கும் புதிய தொடக்கம். சட்டென்று நமக்கு ஒரு புதிய உலகம் அறிமுகமாகிறது. நாம் அரைகுறையாக அறிந்திருந்தவை தெளிவாகின்றன. நாம் அறிந்த பல அறிதல்கள் இணைந்து ஒரே அறிவுப்பரப்பாகின்றன. நம் வாழ்நாளெல்லாம் தொடரும் ஓர் ஈடுபாடு நம்மை ஆட்கொள்கிறது.
கற்றுக்கொள்வது போல இனியது பிறிதில்லை. எந்த கேளிக்கையும் நமக்கு முழுநிறைவை அளிப்பதில்லை. ஏனென்றால் அதில் கல்வி இல்லை. கல்வியே அன்றாட வாழ்க்கையின் எளிமையான சுழற்சியை பொருள்கொண்டது ஆக்குவது.
புதிய ஒரு துறையை வாசகர்கள் அறிந்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் உருவானது. நமக்கு இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பற்றி மிகக்கொஞ்சமாகவே தெரியும். நவீன மருத்துவமுறையே உலகமெங்கும் பரவியுள்ளது. அது ஐரோப்பிய மருத்துவமுறை நவீன அறிவியலுடன் இணைந்து வளர்ந்த வடிவம். ஆனால் உலகமெங்கும் தொன்மையான பல மருத்துவமுறைகள் உள்ளன. அவற்றில் சீன மருத்துவமும் ,அராபிய மருத்துவமுறையான யுனானி மருத்துவமும், ஆயுர்வேதமும் மிகமுக்கியமானவை. இந்த மரபுசார் மருத்துவங்கள் மேல் இன்று நவீன அறிவியலின் கவனம் கூர் கொண்டுள்ளது. சீன மருத்துவத்திற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது அதற்குச் சான்று
ஒப்புநோக்க இவற்றில் ஆயுர்வேதமே மிகவும் அறிவுத்தர்க்கமுள்ளதும், தெளிவான கல்விமரபு கொண்டதும் ஆகும். இந்தியாவெங்கும் ஆயுர்வேதம் வலுவாகவே இன்றும் உள்ளது. ஆனால் அதைப்பற்றிய புரிதல் தமிழகத்தில் பொதுவாகக் குறைவு. பொதுமக்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய பல உண்டு. அதன் தனித்தன்மை என்ன, அது எவ்வகையில் பயனுள்ளது என்பதை அறிந்திருப்பதைப் போலவே அதன் எல்லைகள் என்ன, அது எதைச் செய்யாது என அறிந்திருப்பதும் முக்கியமானது. எந்த மருத்துவமும் மாயமந்திரம் அல்ல. அதற்கு ஒரு வழிமுறை உண்டு, அவ்வழிமுறைக்கு அடிப்படையான வாழ்க்கைநோக்கு உண்டு. அந்த வழிமுறையே அதன் வலிமை, அதன் எல்லையும் அதுவே.
அத்துடன் சிந்திக்கும் ஒவ்வொருவரும் தங்கள் உடல் பற்றி, உடலுக்கும் சமூகவாழ்வுக்குமான உறவு பற்றி, உடலை இயக்கும் இயற்கைவிதிகள் பற்றி ஓரளவேனும் அறிந்திருக்கவேண்டும்.
ஆயுர்வேதம் என்றால் என்ன, அதன் சிந்தனையும் வழிமுறையும் என்ன என்பதை பொதுவாசகர்களுக்கு கற்பிக்கும் வகுப்பை நடத்தமுடியுமா என ஆயுர்வேத மருத்துவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான நண்பர் சுனீல் கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார். இது இலக்கிய எழுத்தாளர், வாசகர்கள் ஆகியோருக்கு ஒரு புது அறிவுத்துறையை எளிமையாக அறிமுகம் செய்யும் கல்வி. பொதுமக்களுக்கு தங்கள் உடல்நலம் மற்றும் சிகிழ்ச்சை பற்றிய ஓர் அறிதலுக்கு உதவும் கல்வி.
நிகழ்ச்சி ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் 3 நாட்கள் நிகழும்.
நாட்கள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27 (வெள்ளி சனி ஞாயிறு)
கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்னும் விலாசத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.