கிறிஸ்தவ ஆன்மிகம், தத்துவம், வரலாறு – அறிமுக வகுப்புகள்

சிறில் அலெக்ஸ் நடத்திய முந்தைய பைபிள் வகுப்பு பற்றி வந்த எதிர்வினைகள் மூன்று கோணங்களில் இருந்தன. பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வு அது. எதிர்வினைகளும் இளைஞர்களிடமிருந்தே

  1. பைபிள் வகுப்பு மிகமிக உணர்ச்சிகரமானதாக இருந்தது. பல இடங்கள் நெகிழ்வில் கண்ணீர் வருமளவுக்கு கவித்துவமும் ஆன்மிகமுமான எழுச்சி கொண்டிருந்தன. மதம் என்னும் சொல்லையே இன்னொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.  நாம் வேறுமதத்தைச் சார்ந்தவர் என்றாலும் அந்த மதத்தை புதியதாக பார்க்க ஆரம்பிப்போம். தத்துவார்த்தமான புதிய கோணம் உருவாகியது.
  2. பைபிள் என்பது மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த பண்பாட்டு வரலாறும் அடங்கியது என்று புரிந்தது. பைபிளின் அடிப்படைத்தத்துவ அறிமுகமில்லாமல் ஐரோப்பிய சினிமாக்களைப் பார்ப்பது வீண். அவற்றை புரிந்துகொண்டோம் என நினைப்பது அசட்டுத்தனம். ஐரோப்பிய இசை,ஐரோப்பிய இலக்கியம் எல்லாவற்றையுமே பைபிள் வழியாகவே சரியாகப்புரிந்துகொள்ள முடியும்
  3. பைபிள் அறிமுகம் என்பது என் தொழிலுக்கு முக்கியமானது என்று தெரிந்தது. என் தொழிலில் என்னுடன் தொடர்புகொள்ளும் ஐரோப்பியர், அமெரிக்கர் பலர் கிறிஸ்தவர்கள். அவர்களின் மதக்கொள்கை என்ன என்றே தெரியாமல் இருப்பது என்னை முட்டாளாகக் காட்டிவிடும் என புரிந்தது. ஏனென்றால் என் மதம் பற்றி அவர்கள் கொஞ்சம் தெரிந்துகொண்டே வருகிறார்கள்.

முறைப்படி கிறிஸ்தவ இறையியல் பயின்றவரான நண்பர் சிறில் அலெக்ஸ் நவீன வாசகர்களுக்காக பைபிளின் ஆன்மிகத்தையும் அழகியலையும் வரலாற்றையும் கற்பிக்கிறார். இவ்வாறு பைபிள் அறிவார்ந்து மட்டுமே கற்பிக்கப்படும் இன்னொரு இடம் இல்லை.

ஆன்மிகமாக பைபிளைச் சென்றடைவது ஓர் ஆழ்ந்த பயணம். எந்த ஆன்மிகப்பயணிக்கும் இன்றியமையாதது. ஆனால் இது மதக்கல்வி அல்ல. இதனுடன் வழிபாடோ பிரார்த்தனையோ இணைக்கப்படுவதில்லை. ஒருவர் ஆன்மிகமான தன் பயணம் வழியாக பைபிளை அறிவதற்கான கல்வி மட்டுமே.அத்துடன் பிற மெய்யியல்களுடன் இணைத்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை, அகவிரிவை அடைவதற்கான பயிற்சியும்கூட

ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

=============================================

குரு நித்யா ஆய்வரங்கம்

குரு நித்ய சைதன்ய யதி தமிழகத்தில் ஓர் இலக்கிய இயக்கத்தை உருவாக்க எண்ணம் கொண்டிருந்தார். அதற்கான சில முயற்சிகளிலும் ஈடுபட்டார். ஆன்மிகமும் தத்துவமும் தமிழ் உள்ளத்தில் கலையிலக்கியம் வழியாகச் செல்வதே இயல்பானது என அவர் எண்ணினார். ஏனென்றால் தமிழகம் மாபெரும் பக்தி இயக்கம் நிகழ்ந்த மண், கலைகளின் இலக்கியத்தின் மண் என கருதினார்.

நித்யா எடுத்த முந்தைய முயற்சிகள் பலன் தராத நிலையில் 1992ல் ஜெயமோகன் அவரைச் சந்தித்தார். நித்யா கூறியமைக்கேற்ப அவ்வாண்டே தமிழ்க் கவிஞர்களின் சந்திப்பு ஒன்றை ஊட்டி ஃபெர்ன் ஹில் நாராயண குருகுலத்தில் தொடங்கினார். ஊட்டி குருகுலத்தில் நித்யா முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய உரையாடல்கள் நிகழ்ந்தன. பெரும்பாலும் கவிஞர்களுடனான உரையாடலாகவே அது அமைந்தது

1999 ல் நித்யா மறைவுக்குப் பின் அந்த சந்திப்பு குரு நித்யா காவிய முகாம் என பெயர் பெற்றது. குற்றாலம், கொடைக்கானல், ஏற்காடு, ஹொகேனேக்கல் போன்ற ஊர்களிலும் சந்திப்புகள் நிகழ்ந்தன. 2010 முதல் முறையாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்த கூடுகை நிகழ்ந்து வருகிறது.

இது இன்று ஓர் இலக்கிய உரையாடல் அரங்கு. இலக்கியத்தின் பிரிவுகளான சிறுகதை, நாவல், கவிதை மற்றும் இலக்கிய விமர்சனம் ஆகிய தளங்களில் அமர்வுகள் நிகழும். பங்கேற்பாளர்களும் இலக்கியவாதிகளும் உரையாடும்வண்ணம் இவை அமைந்திருக்கும்.

மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இந்த இலக்கிய விழா நிகழ்கிறது. ஈரோடு அருகே, மலைத்தங்குமிடத்தில். (இந்த இலக்கிய அரங்கு அடிப்படை நெறிகள் சில கொண்டது. மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட தாக்குதல்கள் அனுமதிக்கப்படுவதில்லை)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

சுனில் கிருஷ்ணன

ஆயுர்வேத அறிமுக வகுப்புகள்

சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். புகழ்பெற்ற எழுத்தாளர். ஆயுர்வேத முறைகளை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர் நடத்திய இரண்டு வகுப்புகள் பலருக்கும் மிக உதவியானவையாக இருந்தன.

ஆயுர்வேதம் ஏன் அறிமுகம் செய்துகொள்ளப்படவேண்டும்? நவீன மருத்துவம் நம் உடற்கூறு, நோய்கள், மருத்துவம் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது. ஆனால் ஆயுர்வேதம்தான் நம் வாழ்க்கைமுறையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் உணவுமுறை, நம் சூழல் ஆகியவை ஆயுர்வேதத்துக்குத்தான் அணுக்கமானவை. இவற்றைப் பற்றி நாம் ஏராளமான செவிவழிச்செய்திகளை அறிந்து பலவகையான பிழையான புரிதல்களைக் கொண்டிருப்போம். உண்மைநிலையை அறிய ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை அறியவேண்டும். எளிய முறையில் அதை கற்பிக்கும் நிகழ்வு இது.

சென்ற இரு வகுப்புகளில் பயின்றவர்கள் இவ்வகுப்புகள் பெரும் கற்றல் அனுபவமாகவும், கூடவே மகிழ்வான தருணமாகவும் அமைந்தன என்று கூறி எழுதியிருந்தார்கள். நம் உடல் செயல்படும் விதம், நம் சூழலுக்கு நம் உடல் எதிர்வினையாற்றும் விதம் ஆகியவற்றுடன் நம் உள்ளமும் உடலும் கொண்டுள்ள இசைவு ஆகியவற்றை ஆசிரியர் கற்பிப்பார்.

தியானம் அல்லது யோகம் பயிலும் ஒருவர் ஆயுர்வேத அறிவு இன்றி அக்கல்வியை முழுமைசெய்ய முடியாது

வரும் மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

ராஜகோபாலன்

வைணவ இலக்கிய அறிமுக முகாம்

நாலாயிரத் திவ்யபிரபந்தமே வைணவ தத்துவம் தோன்றிய விளைநிலம். அதை அறிவார்ந்து அணுகுவதும், அதன் தமிழ்ச்சுவையை அறிவதும் இன்றைய தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கு மிக இன்றியமையாதது. அறியாதவர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிட முடியும். இதற்கு முன் நான்கு வகுப்புகள் வைணவ இலக்கிய அறிமுக முகாம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொன்றும் மிகப்பெரிய அறிதலாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றே கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

 

 

பௌத்த மெய்யியல்  – விபாசனா தியான முகாம்

வி.அமலன் ஸ்டேன்லி

தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர், நாவலாசிரியர் வி.அமலன் ஸ்டேன்லி. உயிரித்தொழில்நுட்பத்தில் உயர் அறிவியலறிஞராக பணியாற்றுபவர்.

2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத்  தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.

இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்

யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.

பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.

வி.அமலன் ஸ்டேன்லி இதுவரை உயர்தொழில்நுட்பம் சார்ந்து பணியாற்றுபவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்த இந்த பயிற்சிகளை எங்கள் கோரிக்கைக்கு ஏற்ப நடத்த முன்வருகிறார்.

நாள் ஜூலை 5,6  மற்றும் 7  (வெள்ளி, சனி ,ஞாயிறு)

 

இஸ்லாமிய மெய்யியல் – இலக்கிய அறிமுகம்

நிஷா மன்ஸூர்

கவிஞர், இஸ்லாமிய ஆய்வாளர் நிஷா மன்ஸூர் நடத்தும் இவ்வகுப்பில் இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பின்னணி, அதன் மெய்யியல், அதன் உலகளாவிய சூஃபி மரபு, தமிழ் சூஃபி இலக்கியம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

அபுனைவு வாசிப்புப் பயிற்சி

மே மாதம் நிகழ்த்தும் வாசிப்புப் பயிற்சிக்கு பலர் கோரியும் இடமளிக்க இயலவில்லை. எண்ணிக்கை நிறைவு அடைந்துவிட்டது. ஆகவே மீண்டும் நடத்தப்படுகிறது. ஒரு தீவிரமான கட்டுரைநூலை (தத்துவம், அரசியல், கோட்பாடு, சட்டம் எதுவானாலும்) எப்படிப் படிப்பது, தொகுத்துக்கொள்வது என்பதற்கான பயிற்சி இது. அதற்கொரு முறைமை உள்ளது. அம்முறைமை கற்பிக்கப்படும்.

ஜெயமோகன் வகுப்பை நடத்துவார்

ஜூலை 19 மற்றும் 20 தேதிகள். (வெள்ளி, சனி)

குருபூர்ணிமா – வெண்முரசு நாள்

ஜூலை 21 ஞாயிறு குருபூர்ணிமா நாள். அதை வெண்முரசு நாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

அனைவரும் பங்கேற்கலாம்

அடிப்படை யோகப்பயிற்சி முகாம்

யோக ஆசிரியர் சௌந்தர் நடத்தும் அடிப்படை யோகப்பயிற்சி முகாம். இது யோகத்தை அறிமுகம் செய்துகொள்பவர்களுக்கும், ஓரளவு தெரிந்து முறையாகச் செய்ய விரும்புபவர்களுக்கும் உரியது. சௌந்தர் சிவானந்த யோக மரபைச் சேர்ந்தவர். முறையான பயிற்சிபெற்றவர்கள். சத்யானந்த யோக மையம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் மரபான முறையில் யோகப்பயிற்சிகள் அளிக்கிறார்

இரு சாராருக்கு இந்தப்பயிற்சிகள் மிக உதவியானவை என நாங்கள் கண்டடைந்துள்ளமையால் இவற்றை முன்வைக்கிறோம்.

தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் வாழ்க்கை காரணமாகவும், உள்ளறை வாழ்க்கையின் சலிப்பு காரணமாகவும் உடல் இறுக்கமடைந்து, பலவகையான உடல்வலிகள் மற்றும் துயில்நீக்கம் அடைந்து சிக்கலுக்குள்ளாகும் இளைய தலைமுறையினருக்கு இவை விடுதலையை அளிக்கின்றன.
முதுமையின் வழக்கமான உடல்நலிவை மிக ஓய்வான வாழ்க்கை மற்றும் உளச்சலிப்பு காரணமாக பலவகையான உடல்வலிகள், துயில்நீக்கம் போன்றவற்றை அடைந்தவர்கள்.

இவ்விரு சாராருக்கும் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனித்தனியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஒரு முகாமில் பங்கேற்பு அமையும். ஆகவே ஆசிரியருடன் நேரடித்தொடர்பு, உரையாடலுக்கு வழி அமையும். யோக ஆசிரியர் வாழ்க்கைமுறை அனைத்துக்கும் குரு என்னும் நிலையிலிருந்து வழிகாட்டவேண்டும் என்பது மரபு.

இப்பயிற்சிகள் இந்து மரபைச் சேர்ந்தவை என்றாலும் நாங்கள் இவற்றை மதம்கடந்தவையாகவே முன்வைக்கிறோம். இப்பயிற்சிகளுடன் எந்த மதநம்பிக்கையும், மதச்சடங்கும் கலந்துகொள்ளப்படுவதில்லை. எல்லா மதத்தவரும் நாத்திகர்களும் கலந்துகொள்ளலாம்

 

=======================================================

எங்கள் இணையப்பக்கம்

முழுமையறிவு

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவ மரபை ஏன் கற்கவேண்டும்?
அடுத்த கட்டுரைமருத்துவம், சாக்லேட்