அன்புள்ள ஜெ
நான் நீங்கள் நடத்திய மேடைப்பேச்சுப் பயிற்சியில் கலந்துகொண்டேன். உண்மையில் என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய திருப்புமுனை அந்த வகுப்பு. மேடைப்பேச்சாளன் ஆகவேண்டும் என்பது என் கனவு. ஆனால் என்னால் சரியாகப் பேசமுடியாது. ஆகவே நான் அதற்கு வந்தேன்.
அந்த வகுப்பில் நான் முதலில் அறிந்துகொண்டது நாமனைவருமே சிந்திப்பது மழுங்கலாக இருப்பதனால்தான் பேசுவது வளவளவென இருக்கிறது என்பதுதான். நல்ல பேச்சு என்பது கச்சிதமாக, வடிவம் உடையதாக இருக்கும். அந்த வடிவத்தை பயின்றால் சிந்தனையே மாறும். என்னுடைய பேச்சு எப்படி அபத்தமாக இருக்கிறது என எனக்கே தெரிந்தது. ஏன் என்னால் பேசமுடியவில்லை என்றால் பேச்சுக்கு ஒரு தொடக்கத்தை என்னால் உருவாக்க முடிவதில்லை. ஏதாவது ஒன்றை ஆரம்பித்து எப்படியோ பேசிக்கொண்டிருப்பேன்.
வகுப்பில் நான் கற்றது தொடக்கத்தை நாம் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான். அதுவே என் பிரச்சினைகளைச் சரியாக்கி விட்டது.அந்தப்பயிற்சிக்குப்பிறகு நான் இன்னும் மேடையில் பேசவில்லை. ஆனால் என் பேச்சு முழுமையாக மாறிவிட்டது. அலுவலகத்திலேயே பலர் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
நான் செய்த பிழை என் தம்பியிடம் அதைப்பற்றிச் சொன்னது. அவன் நண்பர்களிடம் பரப்பி விட்டுவிட்டான். ஆகவே நான் திரும்பி வந்ததும் ஒரே கேலி. இன்றுவரை அந்தக் கேலி தொடர்கிறது. அதனால்தான் ஆசை இருந்தாலும் அதன்பிறகு எந்த வகுப்பிலும் நான் இதுவரை கலந்துகொள்ளவில்லை. டேய் பேச்சாளா என்று என்னை கூப்பிடுகிறார்கள். இதெல்லாம் வேலைக்காவாது, பணம் புடுங்குறானுங்க என்று ஒரு ஏழெட்டுபேர் என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள். சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு தெரியாமல் வகுப்புகளுக்கு வரமுடியாது. தெரிந்துவிட்டால் கேலி பெருகும். ஆகவேதான் யோசிக்கிறேன்
சி
அன்புள்ள சி,
உங்கள் பெயரை மாற்றியிருக்கிறேன், சரியா?
நீங்கள் ஒரு தனிமனிதர். கண்ணுக்குத்தெரியும் சாதனைகள் இனிமேல்தான் வரவேண்டும். உங்களை விடுங்கள். நாங்கள் தொடங்கிய திட்டங்களுக்கெல்லாம் என்னென்ன கேலி- கிண்டல்கள் வந்துள்ளன என்று இணையத்தில் சும்மா உலவி கவனியுங்கள். இப்போது என்னென்ன நக்கல், நையாண்டிகள் மற்றும் அவதூறுகள் வருகின்றன என்று பாருங்கள். அவற்றுக்குச் சற்றேனும் செவி கொடுத்திருந்தால் இந்த வளர்ச்சியும் சாதனைகளும் உருவாகியிருக்குமா?
2009 ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அது ஒரு பெரிய சமூகத்தீங்கு போல பல கட்டுரைகள் எழுதி கூப்பாடு போட்டார்கள் ( என் நண்பர்கள் அதை கணக்கெடுத்துச் சொன்னார்கள். 75 கட்டுரைகள், முகநூல் பதிவுகள்!) அதை நான் என்னை ‘பிரமோட்’ செய்ய நடத்துகிறேன், தமிழ் எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை நிராகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை தமிழில் எந்த எழுத்தாளருமே பொருட்டாக நினைக்கவில்லை. தமிழின் எல்லா முக்கியமான படைப்பிலக்கியவாதிகளும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இன்று விஷ்ணுபுரம் விருது விழாக்கள் அமைந்துள்ளன. கண்கூடான, மறுக்க முடியாத ஒரு சாதனை அது.
2014ல் வெண்முரசு எழுத ஆரம்பித்தபோது எத்தனை வசைகள், நையாண்டிகள், எதிர்ப்புகள். என்ன்னென்ன கொந்தளிப்புகள். உடனே நிறுத்திவிடும்படி ‘நட்பான’ ஆலோசனைகள். உளம்சோர்வடையச்செய்யவேண்டும் என்றே எழுதப்பட்ட குற்றம்காணும் விமர்சனங்கள், திரிப்புகள். ஆனால் அது எழுதி முடிக்கப்பட்டது. ‘எவர் அதை வாசிப்பார்கள்’ என்ற கேள்வி முதல் ‘எவருமே அதை வாசிக்கவில்லை’ என்ற பிரச்சாரம் வரை நிகழ்ந்தது. இன்று தமிழிலேயே அதிகம்பேரால் வாசிக்கப்படும் படைப்பு அதுவே. அதன் வெற்றி உறுதியானபின் ‘அதை மட்டுமே வாசிக்கிறார்கள்’ என்று புலம்பல்.
இந்நிகழ்வுகளே நாங்கள் எவரையும் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டிருப்போம், சாதிப்போம் என்பதற்கான சான்றுகள். ஆனால் 2022 ல் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியம் தொடங்கியபோது மீண்டும் அதே எதிர்ப்புகள், ஏளனங்கள், வசைகள். அது தமிழையே அழித்துவிடும் என்று கொந்தளித்தார்கள். இன்று அது மிக வெற்றிகரமாக இணையத்தில் தன் இடத்தை நிறுவிவிட்டிருக்கிறது. எதிர்ப்புகள் ஓசையில்லாமல் ஆகிவிட்டன. ஆனால் புகைச்சல்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.
இந்த மனநிலை ஏன்? யோசித்துப் பாருங்கள், ஒருவன் தனக்கென பேச பொருளே இல்லாமல் இன்னொருவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு ஆன்ம வறுமையில், அறிவார்ந்த வெற்றிடத்தில் இருக்கிறான்! இங்கே மிகப்பெரும்பாலான சாமானியர்களுக்கு வாழ்க்கையில் எளிமையான உலகியல் செயல்பாடுகள், தீனி, சினிமா முதலிய சிறு உலகியல் இன்பங்கள் தவிர வேறு என்ன இருக்கிறது?
அவர்களை மிக அச்சுறுத்துவது தங்களில் ஒருவனுக்கு இருக்கும் கூடுதலான தகுதிதான். அவன் இவர்கள் வாழும் அற்ப உலகை அவர்களுக்கே சுட்டிக்காட்டுகிறான். அதை அவர்களால் ஏற்கவே முடியாது. ஏற்றுக்கொண்டால் அவர்கள் வாழும் உலகம் பொருளிழக்கிறது. ஆகவே மேலெழுபவனை நிராகரிக்கிறார்கள். அப்படி நிராகரிக்காமல் அவர்களால் வாழ முடியாது. அப்படி நிராகரிப்பதற்கு அவர்கள் கண்டடையும் வழிதான் நக்கல், நையாண்டி. அதை ‘ஜாலியான விளையாட்டு’ என்னும் பாவனையில் செய்யமுடியும்.
நீங்கள் ஒரு கூட்டத்தில் நின்றுள்ளீர்கள். நீங்கள் மேலெழவேண்டும் என்றால் அவர்களை உந்தி விலக்கித்தான் உந்தி எழ முடியும். அவர்களையும் தூக்கிக்கொண்டு மேலே செல்லவே முடியாது. இன்னுமொன்றுண்டு, நீங்கள் மேலே செல்லச் செல்ல அவர்கள் கீழே செல்வார்கள். அவர்களுடன் அதற்குமேல் நீங்கள் இணையாகப் பழக முடியாது. அவர்கள் உங்களுக்குச் சலிப்பூட்டுவார்கள்.உங்கள் உலகில் இருந்து அவர்கள் வெளியேறியே ஆகவேண்டும். உங்களுக்கான சுற்றத்தை நீங்கள் தேடியே ஆகவேண்டும்.
எழுத்தாளர்களிலேயே இந்தவகை உண்டு. தங்களைப் பற்றிய மிகையான எண்ணங்களுடன் இலக்கியத்திற்குள் வருவார்கள். எழுதி எழுதிப்பார்ப்பார்கள். தங்கள் எல்லைகள் என்ன என அவர்களுக்கே உள்ளூரத் தெரியும். அது ஒரு சோர்வை அளிக்கும். உடனே தங்களைப்போன்றவர்களால் ஆன ஒரு வட்டத்தை கண்டடைவார்கள். தங்கள் இடம் குறையாமல் இருக்கும் ஒரு வட்டமாக அதை வைத்துக்கொள்வார்கள். அதற்குள்ளேயே எஞ்சிய வாழ்க்கை முழுக்க வாழ்வார்கள்.
ஆனால் அங்கே இருந்துகொண்டால் நிம்மதி. அதுவும் சிலருக்கு இயல்வதில்லை. எழுதிச் சாதிப்பவர்களைக் கண்டு பொருமிக்கொண்டே இருப்பவர்களுக்கு வாழ்வே நரகம். அந்தப் பொருமலுக்கு ஏதேனும் காரணத்தைக் கண்டடைவார்கள். பொதுவாக எந்த ஒரு புதிய செயல் செய்யப்பட்டாலும், எந்த ஓரு இலக்கியப்படைப்பு எழுதப்பட்டாலும் அதை எதிர்த்துக் கொப்பளிப்பார்கள். அதை அழிக்க நினைப்பார்கள். எதுவுமே நடக்காது என்று தெரிந்தாலும் இவர்களால் அதைச் செய்யாமலிருக்க முடியாது.
இவர்கள் தங்களைப்பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். ‘ஒதுங்கியிருக்கும் அறிவுஜீவி’ என்பது ஒரு பாவனை. தங்களுக்கு கும்பல், புகழ் எதுவுமே தேவையில்லை என்னும் மனநிலை இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு சிறு அங்கிகாரம் கிடைத்தாலும் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதையும் காணலாம். இன்னொன்று, தாங்கள் ‘அதிதூய இலக்கியத்தை’ எழுதுவதாக ஒரு பாவனை. ஆனால் அது சப்பை என அவர்களுக்கே தெரிந்துமிருக்கும்.
இப்படி சில பாவனைகளை மேற்கொண்டு அறச்சீற்றம், நுண்ரசனை என சில தோரணைகளக் காட்டித்தான் இவர்களால் வாழமுடியும். இந்தக் கும்பல்களால் இலக்கியத்தில் நேர்நிலையிலும் எதுவும் சாதிக்கமுடியாது. எதிர்த்து எதையும் நிறுத்தவும் முடியாது. அதை அவர்களே உணர்ந்தாலும் பேசாமலிருக்கவும் முடியாது.
சாதனைகள் என்பவை தன் இலக்கை உருவாக்கிக்கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுபவர்களால் அடையப்படுபவை. அவர்களுக்கு கேலி கிண்டல்கள் மற்றும் எதிர்ப்புகள் எந்த வகையிலும் பொருட்டு அல்ல. அதேபோல பாராட்டுகளும் ஓர் அளவுக்கு மேல் பெரிதாக அவர்களை மகிழ்விப்பதில்லை. செயலில் மெய்மறந்து ஈடுபடும்போதுள்ள பெருந்திளைப்புதான் அவர்கள் அடையும் உண்மையான மகிழ்ச்சி. அதை நோக்கிச் செல்லுங்கள். உங்களைப் பற்றி நீங்களே பெருமிதம் கொள்ளும் தருணங்கள் அமையும். அதன்பின் இவர்களை வெறும் வேடிக்கையொலிகளாக மட்டுமே பார்ப்பீர்கள், சற்றுப் பரிவும் கொள்வீர்கள்.
ஜெயமோகன்