நித்யாவை முன்வைக்கிறோமா?

குரு நித்யா சமாதி, ஊட்டி

அன்புள்ள ஜெ

நீங்கள் முழுமையறிவு நிகழ்வுகளில் தொடர்ச்சியாக நித்ய சைதன்ய யதி அவர்களை முன்வைத்து வருகிறீர்கள். இந்த அமைப்பின் நோக்கம் நித்ய சைதன்ய யதியின் கருத்துக்களை முன்வைப்பதா?

அர்விந்த்குமார்

அன்புள்ள அர்விந்த் குமார்,

நித்ய சைதன்ய யதி நாராயணகுருவின் மரபில் வந்தவர். நடராஜ குருவின் மாணவர். அந்த மரபு சங்கர அத்வைதத்தைக் கொள்கையாகக் கொண்டது. அத்வைதம் ஓரு தூய அறிவுப்பாதை. அறிவே விடுதலை, எல்லா அறிவும் பிரம்மத்தை அறிதலே என அது வகுக்கிறது.

நித்ய சைதன்ய யதி முன்வைத்தது அந்த முழுமையறிவை. அந்த முழுமையறிவையே நாங்கள் முன்வைக்கிறோம். அதில் எல்லா அறிதல்களும் உண்டு. எல்லா கொள்கைகளும் அடங்கும்.

நான் நித்ய சைதன்ய யதியை என் ஆசிரியராகக் கொண்டவன். ஆகவே அத்வைதத்தை ஏற்றுக்கொண்டவன். ஆனால் அத்வைதி என்பவன் அத்வைதத்தை பிரச்சாரம் செய்பவன் அல்ல. அத்வைதம் ஒரு மதநம்பிக்கை அல்ல. ஒரு கொள்கை அல்ல. அது ஓர் பிரபஞ்ச தரிசனம். தர்க்கபூர்வமாக அறிந்து அனுபவரீதியாக உணரத்தக்கது. அதை பிரச்சாரம் செய்து எவருக்கும் அளிக்கவும் முடியாது.

இந்த அமைப்பு அத்வைதம் சொல்லும் ‘எல்லா அறிவும் ஒரே திசை நோக்கியே’ என்னும் பார்வையை கொண்டது. ஆகவே அத்வைதத்துக்கு நேர் எதிரான கொள்கைகள், அத்வைதத்தை கடுமையாகக் கண்டிக்கும் கொள்கைகளும் இங்கே அதே அளவில் கற்பிக்கப்படுகின்றன

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைதத்துவக் கல்வியின் தொடக்கம், ஓர் ஐயம்
அடுத்த கட்டுரைஅபாரமான தனிமை