அன்புள்ள ஆசிரியருக்கு,
கடந்த ஓர் ஆண்டுகளாக உங்களை பின் தொடர்கிறேன்.நான் 16 ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகளில் கற்றதை விட அதிகமாக இந்த ஓர் ஆண்டில் கற்று இருக்கிறேன். எப்படி சிந்திப்பது என்பதை கற்று இருக்கிறேன். இப்பொழுது உள்ள கல்வி முறையில் இல்லாத வஸ்து இது.ஒரு முறை உங்களின் நேரடி வகுப்பில் பங்குபெற்றேன். கற்றலின் நேரடி அனுபவத்தை பெற்றேன். காந்தியாரை பற்றிய உங்களது பெரும்பாலான கட்டுரைகள் பள்ளி கல்லூரிகளில் ஒரு பாடமாக வைக்கபட தகுதியானவை!
நான் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளன்.ஆயிரக்கணக்கான மாணவர்களை நேரடி மற்றும் இணைய வகுப்புகள் வழி சென்று சேரும் வாய்ப்பு எனக்குண்டு. நான் கற்றவற்றை கற்பிக்கும் முறையில் ஒரு மாற்றம் இருப்பதை இப்போது உணர்கிறேன். என்னை பொறுத்தவரை இது நேர்மறையான சிந்தனை மாற்றம். என்னை பெரும்பாலனவர்கள் பின் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம்.தேர்வு முறை சீர்திருத்தம் தொடர்பாக நான் சமீபத்தில் விவாதித்தவை தமிழ் வழியில் தேர்வு எழுதுவோர் முன்னிலை படுத்துவதே .தமிழ்நாட்டில் தமிழில் தேர்வு எழுதி Group 1 போன்ற உயர் பதவிகளுக்கு செல்வோர் 1% மட்டுமே.Group 2 பணியிடங்களுக்கு செல்வோர் 15%. ஆனால் இங்கு 65% தமிழில் தேர்வு எழுதுகின்றனர்.விடைத்தாள் மதிப்பீட்டில் தமிழில் எழுதுபவர்களுக்கு பாரபட்சம் உள்ளது. தமிழ்,திராவிடன் என்று பேசும் யாரும் இதை கண்டுகொள்வதில்லை.தமிழில் தேர்வு எழுதி மாணவர்கள் அரசு வேலை பெற முடியாததை நினைத்து பெரும் வேதனை அடைகிறேன்.இதை களைவதற்கான வழிமுறைகளை தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் ஒரு சிலர் நான் சொல்ல வருவதற்கு எதிர்மறையான கருத்தை புரிந்துகொண்டு கொதிப்படைகின்றனர்.என் வாழ்நாளில் இதுவரை எதிரி என்று ஒருவரும் இல்லை. இப்போது முளைத்திருக்கும் இவர்களை எப்படி அணுகுவது? இந்த எதிர்மறை தன்மை நான் இதுவரை பழகாதது.
இதனால் என்னுடைய சிந்தனையில் சொல்லவரும் கருத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை நான் நம்புகிறேன். ஏனெனில் நான் சொல்ல வருவது அனைத்தும் என்னை பொறுத்தவரை உண்மையே! ஆனால் நீ எதற்காக பொது வெளியில் யாருக்காகவோ திட்டு வாங்க வேண்டும் என்று எனக்கு நெருக்கமானவர்கள் எனக்கு அழுத்தம் தருகிறார்கள்.நான் என்ன செய்வது?
பிரபாகரன்
அன்புள்ள பிரபாகரன்,
தேர்வுகள் பற்றி பெரிதாக எனக்கேதும் தெரியாது. பொதுவாக ஒன்றைச் சொல்ல முடியும். ஆங்கிலமே சிந்தனையின் முதன்மை ஊடகமாக இன்று உள்ளது. அதில் தேர்ச்சிபெறுவதே அடிப்படையான தேவை. எந்த அரசியலுக்காக அதை இழந்தாலும் இழப்பு நமக்கே.
எதிர்ப்புகள் என நீங்கள் நினைப்பவை பெரும்பாலும் உங்களைப் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள முயலாமல், எழுபவையாகவே இருக்கும். அது இன்றைய சூழலின் சீர்கேடு. பெரும்பாலானவர்கள் எதையும் அறியாமலேயே அறுதிநிலைபாடுகள் எடுக்கிறர்கள். அதையொட்டி காழ்ப்பும் கசப்பும் கொள்கிறார்கள். சிந்தனை முழுமையாகவே எதிர்மறைத்தன்மை கொண்டதாக ஆகிவிடுகிறது. அதை எதிர்கொள்வதென்பது மிகக்கடினமான ஒன்று. அதனுடன் உரையாட முடியாது. ஆகவே அதற்கு எதிர்வினையும் ஆற்றவேண்டாம். எதிர்வினையாற்றினால் அதை வளர்ப்பதை நீங்களே செய்தவராவீர்கள். அது இல்லை என்றே கொள்க. எல்லாவகையிலும் அக்குரல்கள் உங்களை அணுகாமல் ஆக்கிவிடுங்கள். உங்கள் உள்ளத்தை காத்துகொள்க. உங்கள் நம்பிக்கை, உங்கள் நேர்நிலை அணுகுமுறை நீடிக்கட்டும்.
நம்பிக்கையுடன் செய்யப்படும் நீண்டகாலச் செயல்பாடுகள் வீணாவதில்லை.
ஜெ