அன்புள்ள ஜெ
உங்கள் காணொளிகளை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். உங்கள் கட்டுரைகளை வாசித்து வருபவன் என்ற முறையில் அந்தக் காணொளிகளின் உள்ளடக்கம் பெரும்பாலும் எனக்குத் தெரிந்ததாகவே உள்ளது. ஆனாலும் இக்காணொளிகள் எனக்கு எப்படி உதவுகின்றன என்றால் உங்களுடன் நேரில் பேசும் அனுபவம் அமைகிறது. உங்கள் குரலைக் கேட்கவும், முகபாவனைகளைப் பார்க்கவும் முடிகிறது. மேடையில் பேசும்போது இருக்கும் முகம் இவற்றில் இல்லை. இவற்றில் நேர் உரையாடல்போல இருக்கிறது. காமிரா பார்த்துப் பேசுவதுபோலவே இல்லை. நீங்கள் சினிமாவுக்கு பல பேட்டிகள் கொடுத்து காமிராவைப் பார்த்து இயல்பாகப்பேசக் கற்றுக்கொண்டீர்கள் என நினைக்கிறேன்.
என் கேள்வி என்னவென்றால் இந்த காணொளிகளை மட்டுமே பார்த்து உங்கள் விழாக்களுக்கு வருபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? அவர்கள் உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பார்கள். உங்களை சில ஆண்டுகளுக்காவது தொடர்ச்சியாகக் கவனித்தால்தான் நீங்கள் சொல்வது என்ன என்று புரியும் என்பது என் கணிப்பு. நீங்கள் மதத்தின் ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றை முன்வைக்கிறீர்கள். சடங்குகள், ஆசாரங்களை நிராகரிக்கிறீர்கள். மதத்தின் மீதான ஆன்மிகப்பார்வையும் இலக்கியப்பார்வையும் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அரசியல் பார்வையையும் சமூகவியல்பார்வையையும் ஏற்பதில்லை.
உங்களை ஒரு சாரார் மதவாதி என சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அரசியல்மூடர்கள். அதேபோல மதமூடர்களும் உங்களை அவரவர் பாணியில் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் செல்லும் பாதையை சரியாகப்புரிந்துகொள்ள ஒரு கவனம் தேவை. வாசிக்கும்பழக்கம் இல்லாதவர்களிடம் அந்தப்புரிதல் இருக்குமா?
கிருஷ்ணராஜ்
அன்புள்ள கிருஷ்ணராஜ்
இது உண்மையில் ஒரு சிக்கல்தான். காணொளி வழியாக வருபவர்கள் பெரும்பான்மையினராக இருந்தால் அந்நிகழ்வை எப்படி கொண்டுசெல்வது என்பது சவாலான வினாதான். இன்று வாசித்து வருபவர்கள் பத்துக்கு ஏழுபேர் என்றால் காணொளி வழியாக வருபவர்கள் 3 பேர்தான். ஆகவே அவர்கள் பொதுவான சூழலால், சூழ இருக்கும் பிறரால் தாக்கம் அடைகிறார்கள். அது ஓர் ஒழுங்கையும் கவனத்தையும் உருவாக்குகிறது. அது இப்போதைக்கு உதவுகிறது.
ஆனால் ஒன்றுண்டு, இலக்கிய வாசகர்கள் அல்லாதவர்களும் இந்த வகுப்புகளிலுள்ள பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். அவர்களுக்கான வாய்ப்புகளும் அமையவேண்டும் அல்லவா?
ஜெ