அன்புள்ள ஜெ
ஆலயக்கலை வகுப்புகளின் அடுத்த நிலை பற்றி எழுதியிருந்தீர்கள். ஆலயங்களின் சிற்பங்களை ரசிப்பதற்கும், அவற்றின் மரபை புரிந்துகொள்வதற்குமான பயிற்சி இது. ஆலயக்கலையை ஆழமாகப்புரிந்துகொள்ள கூடுதல் தேவையாவது ஆகமங்களை புரிந்துகொள்வது. ஆகமங்களை புரிந்துகொள்வதற்கான பயிற்சிகள்தான் அடுத்தபடியாக அளிக்கப்படுமா?
மு.குருநாதன்
அன்புள்ள குருநாதன்,
ஆலயக்கலை என்றல்ல, எந்தப் பயிற்சி வகுப்பும் அடுத்தடுத்த நிலை என மேலே சென்றுகொண்டேதான் இருக்கும். எந்தக் கலையையும் வாழ்நாள் முழுக்கப் பயிலலலாம். எந்த அறிவையும் முடிவில்லாமல் அடையலாம்.
இப்போது ஆலயக்கலையில் அடுத்த நிலைப் பயிற்சியாக நாங்கள் வடிவமத்துள்ளது அறிந்தவற்றை செயலாக ஆக்கும் ஒரு பயிற்சி. ஆலயங்களை எப்படி ஓரு முறையான பதிவாக ஆக்குவது என்பதுதான். ஒரு சிறுநூலாக எழுதினால் நல்லது. அல்லது ஒரு தமிழ் விக்கி பதிவாவது உருவாக்கவேண்டும். தமிழகத்தில் ஏராளமான ஆலயங்கள் எந்தவகையிலும் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன. அவை ஆவணப்படுத்தப்படும் என்றால் மிகப்பெரிய அறிவியக்கப் பங்களிப்பாக ஆகும்.
அத்துடன் இப்பயிற்சிகளில் பங்கெடுத்தவர்கள் தங்கள் கல்வியை செயல்முறையில் அறிய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். வெறுமே தெரிந்துகொள்வதற்கு அப்பால் அதை செயலாகவும் ஆக்கும்போது கூடுதல் நிறைவு உருவாகிறது. வாழ்க்கையில் பயனுள்ள ஒரு பொழுதுபோக்கு ஆகவும் மாறுகிறது.
ஆகமங்களை கற்பது என்பது வேறொரு கல்வி. அது சிற்பக்கலையுடன் இணைந்தது அல்ல. ஆகமங்களில் ஒரு சிறு பகுதியே சிற்பக்கலை. ஆகமங்கள் மிக விரிவான ஓர் அறிவுப்பரப்பு. தத்துவம், குறியீட்டியல் மற்றும் வரலாற்றுடன் இணைந்து கற்கவேண்டியவை அவை. மிகச் சிக்கலான உள்விரிவு கொண்டவையும்கூட. ஆகமங்களைக் கற்பவர் அதன்பொருட்டு தனியாக நேரம் செலவிடவேண்டும்.
அத்துடன் ஆகமங்களை பொதுவான அறிவியக்கச் செயல்பாட்டாளர் ஒருவர் பயில்வதனால் பயனுமில்லை. ஆகம ஆய்வாளர் பயிலலாம். ஆகமங்களை ஒட்டி பூசைகள் மற்றும் வாழ்க்கைச்சடங்குகளை செய்யவிழைபவர் பயிலலாம். எஞ்சியோருக்கு அவை வெறும் செய்திகள் மட்டுமே
ஜெ