எந்த வழி?

அன்புள்ள ஜெ,

நீங்கள் ரஜினியா இல்லை கமலா? என்ற காணொளியை பார்த்தேன் அதில் நீங்கள் பக்தி யோகம் ஞானம் ஆகிய மூன்றையும் கலந்து ஒருவர் தாங்கள் செல்லும் வழியை கூர்மை படுத்திக் கொள்ள முடியும் என கூறினீர்கள். எது எனக்கான பாதை என்று சரியாக தேர்ந்தெடுக்க முடியாத என்னைப் போன்றோருக்கு இயல்பாக அதை கலக்கும் இயல்பு வந்துவிடுகிறது. இந்த மூன்று நிலைகளையும் கலப்பது பற்றி இன்னும் விரிவாக கூற முடியுமா?

 

மேக்சின்

 

அன்புள்ள மேக்ஸின்

உண்மையில் இதை ஒருவர் எதையேனும் செய்யத் தொடங்குவதற்கு முன்பு கண்டடையவே முடியாது. செய்துபார்ப்பது, விளைவுகளை தொடர்ச்சியாக அவதானிப்பது ஆகியவை மட்டுமே நம்மை நாம் அறிவதற்கான வழி. தன்னை அறிவார்ந்தவர் என எண்ணிக்கொண்டிருக்கும் ஒருவர் பக்திப்பாடல்களைக் கேட்டு கண்ணீர் மல்கலாம். பக்தர் என எண்ணிக்கொண்டிருப்பவர் மெய்யாகவே தன் மனம் தர்க்கபூர்வமாக மட்டுமே செயல்படுகிறது என்பதைக் கண்டுகொள்ளலாம்

அத்துடன் ஒன்றுண்டு, யோகம், பக்தி, ஞானம் என்னும் பிரிவினை என்பது நாமே செய்துகொள்வதுதான். புரிதலுக்காக. உண்மையில் சாதாரணமனிதர்களிடம் இம்மூன்றும் வெவ்வேறு விகிதங்களில் இருக்கும். எது ஓங்கியுள்ளது என்பதே ஒருவர் எவர் என்பதைக் காட்டுகிறது. அசாதாரணமனிதர்களில் அவற்றிலொன்று மட்டுமே திகழலாம். பித்துக்கு நிகரான பக்தியோ, தூய ஞானமோ, தூய யோகமோ

ஆகவெ கலந்துகொள்வதிலொன்றும் பிழை இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைஅயல்நாட்டில் இருந்து அறிவியக்கம்
அடுத்த கட்டுரைஇந்து மதம் – தத்துவமும் வளர்ச்சியும் | முழுமையறிவு