அயல்நாட்டில் இருந்து அறிவியக்கம்

மதிப்பிற்குரிய ஜெ,

ஓர் எளிய வாசிப்புடன் தங்கள் முன் வந்து இன்று உங்கள் வாசகனாக முன் செல்ல வேண்டிய தூரத்தை எண்ணி சற்றே மலைத்தாலும் அதற்கான பயணத்தில் மகிழ்ச்சியாக ஈடுபட்டுள்ளேன். தங்களை சந்தித்தது என் நல்லூழ் என்றே கருதுகிறேன்.

இன்றுடன் இங்கிலாந்து வந்து 4 மாதங்கள் ஆகிறது. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் இருப்பது மேலும் அவை குறித்த கடிதங்கள் காணொளிகள் பார்க்கும் பொழுது ஏக்கம் அதிகமாகிறது.

ஆழமான அறிவும் தேர்ச்சியும் கொண்ட ஆசிரியர்களுடன் எளிமையாக உரையாடி தெளிவடையும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தீர்கள்.மேலும் அவர்களின் சமூகப் பணி அத்துறையில் அவர்கள் அடைந்துள்ள தூரம் குறித்து அறியும்பொழுது எத்தகைய அரிய வாய்ப்பை அளித்துள்ளீர்கள் என்று உணர்கிறேன். தங்கள் வாசகன் என்ற ஒற்றைத் தகுதி கொண்டு அத்தகைய மனிதர்களை சந்தித்து உரையாட வைத்ததற்கு கடமைப் பட்டுள்ளேன். வகுப்பில் உடன் பயணித்த நண்பர்களின் அனுபவம் அவர்களின் ஆழ்ந்த வாசிப்பும் நான் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தைக் குறித்த தெளிவைக் கொடுத்தது. இவை அனைத்திற்கும் நன்றி.

வகுப்புகளில் தொடர்ந்து கலந்து கொண்டு அத்தகைய அறிவுச் சூழலில் பங்கேற்க இயலாமல் எவ்வாறு தொடர்ந்து பயணிப்பது என்ற கேள்வியுடன் இக்கடிதம்.

முழுமை அறிவு குறித்த சிந்தனை எப்பொழுதும் இருந்து கொண்டே உள்ளது. என் துறை சார்ந்து குறுக்கிக் கொள்ளாமல் பல்வேறு தளங்களில் அறிமுகம் அடைந்து அவற்றை தொடர்ந்து சிந்திப்பது ஆழமான அறிவையும் எவற்றையும் சற்று தள்ளி வைத்து தெளிவாக புரிந்து கொள்ள உதவும் என்று உணர்கிறேன்.

இங்கு வந்தவுடன் தடைபட்டு ஒரு தேக்க நிலையில் இருப்பது போல தோன்றுகிறது. இன்னும் சில ஆண்டுகள் இத்தகைய சூழலே இருப்பதால் எவ்வாறு என்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்வது.

நன்றி.

அன்புடன்,

ஹரிதங்கம்

அன்புள்ள ஹரி

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்தச் சிக்கல் உண்டு. ஒன்றுக்காக ஒன்றை சமரசம் செய்தே ஆகவேண்டும். ஆனால் ஒரு வழி உண்டு. முன்பு புதியவாசகர் சந்திப்புக்கு வந்தவர்கள் ஒரு வாட்ஸப் குழுமம் ஆக இணைந்தனர். ஒரு நிகழ்வுக்கு வ்ந்தவர்கள் ஓர் அணியாக. 2016ல் அப்படி உருவான குழுமங்கள் அவர்களில் பலர் எழுத்தாளர்களாக புகழ்பெற்ற பின்னரும் நீடிக்கின்றன. அத்தகைய குழுமங்களை உருவாக்கிக்கொண்டு இணையம் வழியாகத் தொடர்பில், உரையாடலில் இருக்கலாம். இணையம் அதற்குத்தான் உதவியானது.

வெளிநாட்டில் வாழ்பவர்களுக்காக வகுப்புகளை இப்போது ஒருங்கிணைக்கிறோம். செப்டம்பர் 30 –  அக்டோபர் 02   தேதிகளில் அமெரிக்காவில்  பூன் என்னும் இடத்தில் ஒரு தத்துவ முகாம் நிகழ்கிறது. அடுத்த ஆண்டு ஐரோப்பாவிலும் நடத்த எண்ணம் உண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைமரபை இனிமையென அறிதல்
அடுத்த கட்டுரைஎந்த வழி?